Published : 15 Mar 2018 07:58 AM
Last Updated : 15 Mar 2018 07:58 AM

எழுத்துப் பிழை நீக்குதல் உள்ளிட்டவை அடங்கிய தமிழ் இணைய மென்பொருள் தொகுப்பை முதல்வர் வெளியிட்டார்

தமிழ் இணைய கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள எழுத்துப் பிழைகளை நீக்குதல், அகராதி பொருள் பெறுதல் உள்ளிட்டவற்றுக்கான 5 மென் பொருட்கள் அடங்கிய தமிழிணைய மென் பொருள் தொகுப்பை முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறயிருப்பதாவது:

ரூ.1.50 கோடியில் திட்டம்

உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ்க்கணினி ஆய்வாளர்களுக்கு உதவும் வகையில் தமிழ் இணைய கல்விக்கழகத்தின் மூலம், ‘தமிழ் மென்பொருள் உருவாக்கும் திட்டம்’ தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ், 2015-ம் ஆண்டில் ரூ.1 கோடியே 50 லட்சத்தில் செயல்படுத்தப்பட்டது.

இதில் முதல்கட்டமாக, 15 தமிழ் மென் பொருள்கள் உருவாக்க திட்டமிடப்பட்டது. அதில், ‘தமிழிணையம் ஒருங்குறி மாற்றி, தமிழிணையம் ஒருங்குறி எழுத்துக்கள் ஆகிய 2 தமிழ் மென்பொருட்கள் கொண்ட தமிழிணைய மென்பொருள் தொகுப்பு -1 கடந்தாண்டு மே 23-ம் தேதி வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, தமிழிணையம் - சொல்பேசி, விவசாயத்தகவி, தொல்காப்பியத் தகவல் பெறுவி, தமிழ் பயிற்றுவி, நிகழாய்வி எனும் 5 தமிழ் மென் பொருள்கள் அடங்கிய 2-ம் தொகுப்பு அக்டோபர் 11-ல் வெளியிடப்பட்டது. இவற்றை தமிழக முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார்.

இத்தொகுப்புகளை தமிழ் இணைய கல்விக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, தமிழிணையம்- பிழைதிருத்தி, அகராதி தொகுப்பி, கருத்துக்களவு ஆய்வி, சொற்றொடர் தொகுப்பி, தரவு பகுப்பாய்வி ஆகிய 5 தமிழ் மென் பொருள்கள் அடங்கிய, தமிழிணைய மென்பொருள் தொகுப்பு -3 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் தொகுப்பை முதல்வர் கே.பழனிசாமி அறிமுகம் செய்தார்.

எழுத்துப் பிழைகளை திருத்த...

இந்த தொகுப்பு தட்டச்சர்கள், தமிழ் நூல்கள் வடிவமைப்போர், தமிழ் நூல் வெளியீட்டாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு உதவியாக இருக்கும். கணினியில் தமிழ் எழுத்துக்களை தட்டச்சு செய்யும்போது ஏற்படும் எழுத்துப்பிழைகளை கண்டறிந்து பிழைதிருத்தம் செய்தல், தமிழ் சொல்லுக்கு தமிழ் அகரமுதலி, தமிழ் லெக்சிகன், கதிர்வேலு பிள்ளை அகராதி போன்ற அகராதிகளில் உள்ள பொருள் அறிதல், கருத்துக்களவினை கண்டறிதல், தமிழ் தளங்கில் உள்ள சொற்றொடர்களை தொகுத்தல், தமிழ்ச் சொற்களை அவற்றின் சொல் எண்ணிக்கை வகைப்படுத்துதல், முன்பின் சொற்களை கண்டறிந்து பகுப்பாய்வு செய்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம்.

இத்தொகுப்பை தமிழ் இணைய கல்விக்கழக இணையதளத்தில் தேவையான தகவல்களை பதிவு செய்வதன் மூலம் இலவசமாக பயன்படுத்தலாம்.

இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், செயலாளர் பி.சந்திர மோகன், தமிழ் இணைய கல்விக்கழக இயக்குநர் தா.கி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x