Published : 10 Sep 2014 08:45 AM
Last Updated : 10 Sep 2014 08:45 AM
தமிழகத்தில் நெருங்கி வருவது போல் காணப்பட்ட அதிமுக - பாஜக உறவில் உள்ளாட்சி இடைத்தேர்தல் மோதலால் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் மத்தியில் உள்ள பாஜக தலைவர்கள் அதிமுகவுடன் நெருக்கம் காட்டி வருகின்றனர்.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்தபிறகு பாஜகவுடன் அதிமுக இணக்கமான போக்கை கடைபிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. முல்லை பெரியாறு கண்காணிப்புக் குழு அமைத்தது, தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுத்தது போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகள் இதை உறுதிப்படுத்துவதுபோல இருந்தன. பாஜக தேசிய தலைவர்களும் அதிமுகவுடன் நெருக்கம் காட்டி வருகின்றனர்.
கடந்த மாதம் 28-ம் தேதி சென்னை வந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அதிமுக பாஜக இடையேயான நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும் என கூறப்பட்டது.
இந்நிலையில், உள்ளாட்சி இடைத்தேர்தல் மூலம் தமிழக பாஜக அதிமுக இடையே உரசல் ஏற்பட்டது.பிரதான கட்சிகள் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள, தங்களை எதிர்த்து பாஜக களமிறங்கியது அதிமுக வினரிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிமுகவுக்கு எதிராக மாநில பாஜகவினர் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த 5-ம் தேதி சென்னை வந்த மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நீண்ட நேரம் பேசினார். மேலும், கூட்டணியில் இல்லா விட்டாலும் அதிமுக தங்கள் நட்புக் கட்சிதான் என்றும் கூறினார்.
உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக அரசு மீது தமிழக பாஜகவினர் பல்வேறு குற்றச்சாட்டு களை கூறி போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், தேசிய தலைமையோ இதுபற்றி எந்தக் கருத்தையும் கூறாமல் மவுனம் காத்துவருகிறது. இது மாநில பாஜக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றி அதிமுக நிர்வாகிகள் கூறும்போது, “தமிழகத்தில் 5 சதவீத வாக்குகளை கூட்டணி கட்சியின் உதவியுடன் பெற்றது பாஜக. ஆனால், தனியாகப் போட்டியிட்டு 44 சதவீத வாக்குகளைப் பெற்ற அதிமுகவை வென்றுவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டு உணர்ச்சிவேகத்தில் பேசிவரு கின்றனர். இதை பாஜக மேலிடம் உணர்ந்துள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT