Last Updated : 13 Mar, 2018 09:40 AM

 

Published : 13 Mar 2018 09:40 AM
Last Updated : 13 Mar 2018 09:40 AM

மதுரை மருத்துவமனைகளில் திரண்ட உறவினர்கள்: தீக்காய சிகிச்சையில் அனுபவம் மிக்க திருச்சி மருத்துவர்கள் வருகை

மதுரைகுரங்கணி காட்டுத் தீயில் சிக்கி மீட்கப்பட்டவர்களுக்கு மதுரை யில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி மீட்கப்பட்டவர்களில், 50 சதவீதத்துக்குள் தீக்காயமடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை தீக்காயம் அடைந்தவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையிலும் நேற்று காலை சேர்க்கப்பட்டனர்.

இதில், சென்னை கீழ்ப்பாக்கம் முத்து மாலை மகள் அனுவித்யா (28), சென்னை வேளச்சேரி தமிழ்மொழி மகள் நிஷா (30), ஈரோடு கவுண்டம்பாடி ஜெஜெ. நகர் கிரி மகன் ஏரோநாட்டிக்கல் பொறியாளர் கண்ணன் (26), கேரளா கோட்டையம் பகுதியைச் மீனா ஜார்ஜ் (32), சேலம் எடப்பாடியைச் சேர்ந்த பழனிசாமி மகள் தேவி (29), ஈரோடு அய்யங்காடு விவேக் மகள் தனியார் கல்லூரி ஆசிரியை திவ்யா (25), சென்னை மடிப்பாக்கம் இளங்கோவன் மகள் ஜெயஸ்ரீ (32), தஞ்சாவூர் எம்கே.ரோடு வெங்கடேஷ் நகர் கிருஷ்ணமூர்த்தி மகள் சாய்வசுமதி (25), சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சூரிய நாராயணன் மகள் பார்கவி (23) ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையிலும், சென்னை எத்திராஜ் மகள் திவ்ய நிக்ருதி (24) அப்போலோவிலும், சென்னை பள்ளிக்கரணை தினேஷ் மனைவி சுவேதா (28), உடுமலைபேட்டை காந்தி நகரைச் சேர்ந்த முருகபூபதி மகள் சிவசங்கரி (25) ஆகியோர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி கிணத்துக்கடவு விஷ்வா கார்டன் லிவின் மனைவி திவ்யா விசுவநாதன் (25). திருப்பூர் விஎஸ்வி வித்யா கார்டன் சரவணன் மனைவி சர்திக் கலா (40), சதீஸ் ஆகியோர் மதுரை கென்னட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருச்சி அரசு மருத்துவமனை தீக்காயப் பிரிவில் இருந்து அனுபவம் வாய்ந்த மருத்துவக்குழு ஒன்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளது. நேற்று காலை 10 மணிக்கு தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மதுரை அரசு மருத்துவமனையில் வந்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

கவுன்சிலிங் மையம் ஏற்பாடு

தீக்காயத்தில் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளோரின் பெற்றோர், உறவினர், நண்பர்கள் என ஏராளமானோர் 301-வது வார்டில் காலை முதலே குவிந்தனர். அவர்களுக்கு சிறப்பு அறை ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பதற்றமாக இருந்த பெற்றோர், உறவினர்களை மனரீதியாக அமைதிப்படுத்தி அவர்களுக்கு தைரியம் வழங்க கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தனியார் செல்போன் நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரியான ஜெயஸ்ரீ(32) என்பவருக்கு 80 சதவீத தீக்காயங்கள் உள்ளன. இவர் நேற்று மாலை மேல் சிகிச்சைக்காக தனியார் ஏர் ஆம்பூலன்ஸ் மூலம் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x