Published : 12 Mar 2018 05:33 PM
Last Updated : 12 Mar 2018 05:33 PM
ட்ரெக்கிங் என்றால் என்ன? இன்றைய வருத்தமான நிகழ்வுக்குப் பின்னர் பலர் மனதிலும் தோன்றும் ஒரு கேள்வி. வார இறுதி நாட்களில் கலர் டீஷர்ட் போட்டுக்கொண்டு கும்பலாகச் சென்று செல்ஃபி எடுத்துப் போடுவதுதான் ட்ரெக்கிங்கா? இல்லையெனில் அதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன என்ற கேள்வியே இந்தப் பதிவு.
சமீபகாலமாக இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள் மத்தியில் ட்ரெக்கிங் என்ற வார்த்தை அதிகமாக பேசப்படுகிறது. இயற்கையை நேசிப்பவர்கள் என்கிற முறையில் இளைஞர்கள் இன்று முன்னேறி வருவது பாராட்டத்தக்கதே. ஆனால் ட்ரெக்கிங் செல்வதற்கான நடைமுறைகளை எந்த அளவுக்குப் பின்பற்றுகிறோம், அதில் உள்ள விதிமீறல்கள், சாகச எண்ணம் என்ற பெயரில் அரசு விதிகள் மீறப்படுவது போன்றவற்றை கவலையுடனும், அக்கறையுடனும் இந்த நேரத்தில் அலசியே ஆகவேண்டும்.
இதன் நோக்கம் உயிரிழந்தவர்கள் கண்ணியத்தைக் குலைப்பதல்ல, அவர்கள் ஏன் ட்ரெக்கிங் சென்றார்கள் என்று கேள்விக்கு உட்படுத்துவது அல்ல. இனி இது போன்று நடக்காமல் இருக்க என்ன செய்யப் போகிறோம் என்பதே.
சாகச எண்ணமும், வன ஆர்வமும் மட்டுமே ட்ரெக்கிங் என்று நினைத்தால் அந்த எண்ணத்தைத் தூர வைத்துவிடுங்கள்.
இயற்கையை, நம் வனத்தை நேசிக்காதவர்கள் யார் இருக்கின்றனர். அதைப் பாதுகாக்க வேண்டும் என்றால் அந்த எண்ணம் கொண்டவர்கள் உயிருடன் இருப்பது அதை விட முக்கியம். சென்னையில் உள்ள ட்ரெக்கிங் கிளப் பல ஆண்டுகளாக மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. சென்னை வெள்ளத்தின் போது கூவத்தை சுத்தம் செய்ததில் பீட்டர் குழுவினரின் பங்கு மகத்தானது.
இவர்கள் ட்ரெக்கிங் தவிர பாராகிளைடிங் (வானில் பறக்கும் சாகசம்), நீச்சல், மலையேற்றம், வனங்களை சுத்தம் செய்வது, மலை ஏறுவது போன்றவற்றை நடத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக ஆந்திர காடுகள், மலைகள் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் ட்ரெக்கிங் சென்றுள்ளனர்.
இவை அவர்களை சார்ந்தவர்களால் வைக்கப்படும் வாதம், வீணாக அவர்களை கொச்சைப்படுத்தாதீர்கள் என்றெல்லாம் பலரும் கூறுகிறார்கள். உண்மையாக இயற்கையை நேசிக்கும் அவர்களை யாரும் கொச்சைப்படுத்தக்கூடாது, முடியவும் முடியாது. அதே நேரம் விதிமீறல் குறித்துப் பேசுவது குறித்து யாரும் குறை சொல்ல முடியாது.
ட்ரெக்கிங் என்ற வார்த்தையைப் பார்க்கும்போது பலரும் முகநூலில் கும்பலாகச் சென்று செல்ஃபி எடுத்து போட்டு நாங்கள் ட்ரெக்கிங் போனோம் என்று பதிவிடுவது வாடிக்கையாக உள்ளது. இன்னொருபுறம் பயிற்சி இல்லாமல் மலையேற்றம் செல்வது, மலையேற்றம், வனம் உள்ளிட்ட பகுதிகளில் எப்படிச் செல்ல வேண்டும் என்பதும், துணைக்கு யாரை வைத்துக்கொள்ளவேண்டும் என்பதும் முக்கியம்.
இது குறித்து பல ஆண்டுகளாக ட்ரெக்கிங் செல்லும் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது:
''உயிரிழப்பு ஏற்பட்டது தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று. எங்கேயோ தவறு நடந்திருக்கிறது. 40 பேர் வரை மலையேற்றத்திற்கு அழைத்துச்செல்கின்றனர். மலையேற்றப் பயிற்சிக்கு அழைத்துச் செல்பவர்களுக்கு பெண்கள் அதிகமாக சென்றபோது ஏன் வனத்துறை காவலர் தொலைத்தொடர்பு கருவிகளுடன் உடன் செல்லவில்லை.
கடந்த 4 நாட்களாக காட்டுத்தீ எரிகிறது என்றும், நேற்று மதியம் 2.30 மணி முதலே தீ பரவ ஆரம்பித்தது என்று இருவித தகவல்கள் வருகின்றன. இது போன்ற மலையேற்றத்தின் போது அந்தப்பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் அல்லது அப்பகுதியை நன்கு அறிந்தவர்கள் உடன் அழைத்துச்செல்ல வேண்டும்.
ஆனால் அதையும் செய்யவில்லை. இது போன்ற காட்டுத்தீ ஏற்படும் நேரத்தில் சரியான வழிகாட்டி இருந்திருந்தால் அவர்கள் வெகு சீக்கிரம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்ல வாய்ப்புண்டு. இதன் மூலம் அவர்கள் தப்பித்திருக்க வாய்ப்பு உண்டு. வழிகாட்டிகளுடன் சென்ற சிலர் தப்பித்துள்ளனர். ஆனால் காட்டுத்தீயில் சிக்கியவர்கள் சரியான பாதை தெரியாமல் வெப்பம் தாங்காமல் குதித்ததில் உயிரிழந்துள்ளனர்.
இதில் ஒருங்கிணைப்பாளர் நிஷா தமிழொலியும் சிக்கி காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனி போன்ற மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் ட்ரெக்கிங் போகும்போது உள்ளூர் கிராம வாசிகள் குறைந்தது 5 பேர் கூட வரவேண்டும், காட்டு வழி பாதை தெரிந்தவர்கள் உடன் அழைத்துச்செல்லப்படவேண்டும். அதுவும் நடக்கவில்லை.
மேற்கண்ட வனப்பகுதிகளில் மார்ச் முதல் ஜூன் வரை வெப்பமண்டலக் காடுகள் என்பதால் காட்டுத்தீ பரவும் வாய்ப்பு அதிகம் என்பதால் ட்ரெக்கிங் கேம்புக்கு அனுமதி கிடையாது. அதையும் மீறி வனத்துறை அனுமதி இல்லாமல் காட்டுக்குள் சென்றது எப்படி என்ற கேள்வியும் முக்கியம்.
ட்ரெக்கிங் என்றால் அது பயிற்சிக்கு பின்னர் செய்யவேண்டிய ஒன்று. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குட்பட்டவர்கள் தான் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவார்கள். ட்ரெக்கிங் போவதற்கு முன் அவர்களுக்கான பயிற்சிகள் நடக்கும். உடல் நிலை ரத்த அழுத்தம் உள்ளிட்டவை சோதிக்கப்படும். அவர் மலை ஏற்றத்திற்கு ஏற்ற உடல்நிலையுடன் இருக்கிறாரா? என்று சோதிக்கப்படும்.
பெண்களையும் அவ்வாறே பயிற்சி எடுக்க வைப்பார்கள். முதலுதவி குறித்த பயிற்சியும், இக்கட்டான தருணத்தில் எப்படி செயல்படுவது, வன விலங்குகள் வரும்போது பதற்றப்படாமல் நிலைமையை எப்படி எதிர்கொள்வது, தனது வழிகாட்டியுடன், குழுவுடன் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
முறையான பயிற்சி, முறையான அரசு அனுமதி, வழிகாட்டிகள் மூலம் வழிநடத்தப்படாததன் மூலம் 9 அரிய உயிர்களை இழந்துள்ளோம். எது சரியானது, யார் சரியான நபர்கள் என்று தேர்வு செய்து எதிலும் இளைய தலைமுறை இறங்குவதே நல்லது. மனித உயிர்கள் மதிப்பு மிக்கவை. இயற்கையை நேசிப்பவர்கள் அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT