Published : 27 Mar 2018 10:22 AM
Last Updated : 27 Mar 2018 10:22 AM

பள்ளியிடம் ரூ.30 கோடி கேட்கும் துறைமுகம்: மூடப்படுமோ என்று பெற்றோர் அச்சம்

புது வண்ணாரப்பேட்டையில் சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான இடத்தில் செயல்படும் மாநகராட்சி பள்ளிக்கு ரூ.30 கோடி வாடகை பாக்கியை செலுத்துமாறு துறைமுக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் அப்பள்ளி மூடப்படுமோ என்று பெற்றோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னை புது வண்ணாரப்பேட்டை சிபிடி காலனி பகுதியில் துறைமுகத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு காமராஜர் ஆட்சிக் காலத்தில் வாடகை அடிப்படையில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி கடந்த 1963-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்பகுதியில் துறைமுகப் பணியாளர்களின் குடியிருப்புகள் ஏராளமாக இருந்ததால், அந்தப் பள்ளியில் 3 ஆயிரம் மாணவர்கள் படித்து வந்தனர். அந்த குடியிருப்புகள் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்தது. அங்கு தற்போது செயல்படும் மழலையர் வகுப்பு, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி அனைத்திலும் 589 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.

வாடகை நிர்ணயம்

இதற்கிடையில், நில மேலாண்மை கொள்கையை மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2014-ல் திருத்தி அமைத்தது. அதில், துறைமுகத்துக்கு சொந்தமான இடங்களில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளைக் குத்தகை அடிப் படையில் நடத்த, சந்தை விலையில் வாடகை நிர்ணயித்து, அதில் 75 சதவீதம் வரை சலுகை அளிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக, ஆண்டுக்கு ரூ.1.83 லட்சமாக இருந்த இந்தப் பள்ளியின் வாடகை ரூ.66 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதை குறைக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ரூ.30 கோடியானது எப்படி?

துறைமுக வழிகாட்டு விதிகளின்படி, குத்தகை காலம் முடிந்த 15 நாட்களுக்கு பிறகும் அதன் இடத்தைப் பயன்படுத்தி வந்தால், அது ஆக்கிரமிப்பாக கருதப்படும். இதனால், அதற்கு அடுத்த 3 மாதங்கள் வரை, வழக்கமான வாடகை போல 3 மடங்காகவும், அதன் பிறகு 7 மாதங்கள் வரை 5 மடங்காகவும், 8 மாதங்களுக்கு மேல் 10 மடங்காகவும் வசூலிக்கப்படும். இந்த அடிப்படையில் கணக்கிட்டு, 2014 முதல் தற்போது வரை வாடகை நிலுவை ரூ.30 கோடி என துறைமுக நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. அதை செலுத்துமாறு மாநகராட்சியை அறிவு றுத்தியுள்ளது.

இந்த ஆண்டு மாநகராட்சி பட்ஜெட்டில், கல்வித் துறைக்கே மொத்தமாக ரூ.12.60 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரே ஒரு பள்ளிக்காக ரூ.30 கோடிக்கு எங்கே போவது என மாநகராட்சி நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது.

முதல்வர் தொகுதி

இதுதொடர்பாக சில பெற் றோர் கூறும்போது, ‘‘வாடகை பிரச்சினை கடந்த 2015-ம் ஆண்டே எழுந்தது. அப்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். முதல்வர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளி என்பதால், துறைமுக நிர்வாகம் அமைதியாக இருந்துவிட்டது.

இங்கு படிக்கும் பலரும் ஏழை ஆதிதிராவிட மாணவர்கள். எக்காரணம் கொண்டும் பள்ளியை மூடக்கூடாது. மத்திய அரசிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி, சென்னை துறைமுக நிர்வாகங்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது, யாரும் பதில் அளிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து, மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘வாடகை உயர்வு பிரச்சினை தற்போது ஏற்பட்டது அல்ல. பல ஆண்டுகளாக நீடித்திருக்கக் கூடும். இதுபற்றி விசாரித்தால், கடைசியில் அரசியலில் தான் போய் முடியும். அரசியல் ரீதியில் இதற்கு தீர்வு கண்டிருக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் இதில் கவனம் செலுத்தவில்லை.

மாநகராட்சி மேயர்களாக இருந்த அதிமுக, திமுகவினர் ஏன் இதற்கு நிரந்தர தீர்வு காணவில்லை? அரசியல்வாதிகளுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டிருந்தால் இத்தனை ஆண்டுகள் விட்டுவைத்திருப்பார்களா? அவர்களுக்கு ஏதோ ஒரு அழுத்தம் இருப்பதால்தான் மேயரோ, அமைச்சரோ என்னை அணுகி பேச தயங்குகின்றனர். அவர்கள் என்னை அணுகி பேசாதபோது, பிரச்சினை பற்றி முழுதாக தெரியாமல் நான் தீர்வு காண முடியாது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x