Published : 17 Mar 2018 09:16 AM
Last Updated : 17 Mar 2018 09:16 AM

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறதா?- அதிரடி சந்திரபாபுவும் அசையாத அதிமுகவினரும்

சந்திரபாபு நாயுடுவின் அரசியலுக்கு நேர் எதிர் அரசியலில் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற வார்த்தைக்கு சொந்தமான திராவிட இயக்கத்திலிருந்து வந்த அதிமுக தலைவர்கள் ஈடுபடுவதால் தமிழக நலன் பாதிக்கப்படுகிறது.

தென் இந்தியா சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் அற்புதமான தலைவர்களை அளித்துள்ளது. போராட்டக்களமாக என்றுமே இருந்தது திராவிடம் என்று அழைக்கப்படும் தென் மாநிலங்களே. கர்நாடகாவை தவிர்த்து இடதுசாரி அரசியல், சமூக நீதி அரசியலுக்கு பெயர் போனது தமிழ்நாடு, ஆந்திர, கேரள மாநிலங்கள் ஆகும்.

சுதந்திரமடைந்த பின்னரும் வீரமிக்க தெலுங்கானா போராட்டமும், திருவனந்தபுரம் சமஸ்தானத்திற்கு எதிராக நடந்த போராட்டமும் வரலாற்றில் நிற்பவை.

கம்யூனிஸ்டுகளும், திராவிடர் கழகமும் அதன் தொடர்ச்சியாக திமுகவும் காங்கிரஸுக்கு மாற்றாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கால் ஊன்ற பத்தே ஆண்டில் கேரளத்திலும், இருபதே ஆண்டுகளில் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சிக்கு மாற்று ஆட்சி அமைந்தது.

தமிழகத்தின் நலனை தொடர்ந்து புறக்கணித்ததால் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற கோஷம் முன் வைக்கப்பட்டது.

தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் காங்கிரஸும் தற்போது பாஜகவும் நடத்துவது என்றுமே மாறாத ஒன்று. திமுக 1971-ல் சில ஆண்டுகள் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்தாலும் அதற்கு முன்னரும் பின்னரும் தீவிர எதிர்ப்பாளராக இருந்தது.

ஆனாலும் பல நேரங்களில் அரசியல் நிலைப்பாடு மற்றும் பல்வேறு நிர்பந்தங்கள் காரணமாக தமிழக நலன்கள் காவுகொடுக்கப்பட்டன.

காவிரி ஒப்பந்தம், கச்சத்தீவு என இன்றும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் உள்ளன. ஆனால் காவிரி பிரச்சனையில் எப்போதும் இல்லாத அளவுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதும் உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும் அதை மத்திய அரசு நிறைவேற்ற மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

2014-ல் தமிழகத்திற்கு பலமுறை படை எடுத்து நம்மூர் அரசியல்வாதிகளைவிட நம் விவசாயிகளைப்பற்றி கவலைப்பட்டு பேசிய பிரதமர் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சனைக்கு போராடும் எதிர்க்கட்சிகளை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கூட தர மறுக்கிறார்.

ஜி.எஸ்.டியில் தொடங்கி மத்திய பட்ஜெட் வரை தமிழகத்திற்கான உரிமைகள் மறுக்கப்படுகிறது. வெள்ள நிவாரண நிதி, வறட்சி நிவாரண நிதி எதுவும் வரவில்லை.

தமிழகத்தில் உள்ள நிலையற்ற அரசியல் சூழ்நிலையையும், ஆட்சியாளர்களின் சுயநலத்தையும் நன்றாக பயன்படுத்திக்கொள்கிறது மத்திய அரசு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து சடங்குப்பூர்வமான போராட்டத்தை நடத்துகிறார்கள். துணிச்சலான நடவடிக்கை எடுக்க துணிவில்லை.

சந்திரபாபு நாயுடு துணிச்சலாக கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அதிமுக இணையுமா என்ற கேள்விக்கு துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் போன்றோர் நழுவி தப்பித்து ஓடுகிறார்கள்.என்ன நம்பிக்கை இல்லா தீர்மானம் என்று தூக்கத்திலிருந்து விழித்து வந்தவர்போல் கேட்கிறார் தம்பிதுரை.

இந்தியாவிலேயே இரண்டு அவைகளிலும் 51 எம்பிக்களை வைத்துள்ள அதிமுக மத்திய அரசை பயமுறுத்தாமல் பயந்து நடுங்குகிறது.

அடுத்து ஆட்சியை தொடரவேண்டும் என்பதைவிட 2021 வரை ஆட்சியை தள்ளிக்கொண்டு போகவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள் இன்றைய ஆட்சியாளர்கள் என்று பலரும் விமர்சிப்பது சரியானதே.

சந்திரபாபு நாயுடுவுடன் கரம்கோர்க்கும் நேரம் இது, இதன்மூலம் காவிரி மேலாண்மை கோரிக்கை பக்கம் மத்திய அரசை இழுக்க முடியும் ஆனால் அதற்குரிய துணிச்சல் இல்லை என்பதையே கே.சி.பழனிசாமி நீக்கம் காட்டுகிறது.

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது கோஷம் இன்றும் நீர்த்துப்போய் விடவில்லை. ஆனால் அதை தைரியமாக சொல்லத்தான் ஆட்சியாளர்களுக்கு துணிவில்லை.

மோடி அல்ல இந்த லேடி என்று துணிச்சலாக தனித்து நின்ற ஜெயலலிதாவுக்கு கிடைத்த 37 எம்பிக்களும் தமிழக நலனுக்காக மக்கள் அளித்த வாக்குகள்.

லேடி இன்று உயிரோடு இல்லை 37 எம்பிக்கள் உள்ளனர். தமிழக மக்கள் உங்கள் பக்கம் நின்றார்கள், நீங்கள் தமிழக மக்கள் பக்கம் நிற்பீர்களா? என்ற ஒற்றை விரல்தான் ஆட்சியாளர்களை நோக்கி நீண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x