Published : 01 Mar 2018 07:59 PM
Last Updated : 01 Mar 2018 07:59 PM
புதுச்சேரியில் அதிக அளவில் வரி ஏய்ப்பு செய்த 124 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் ரூ.1.04 கோடி வரி ஏய்ப்பு செய்தவரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் தொழில்புரிவோர் வருமான வரியை முறையாக கட்டுகிறார்களா எனவும், வரிஏய்ப்பு செய்பவர்களின் விவரங்களையும் வருமான வரித்துறை ரகசியமாக சேகரித்து வந்தது. அந்த வகையில் புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் கிஷோர் நன்வானி என்பவர் ஒருகோடியே 4 லட்சம் ரூபாய் அளவுக்கு வருமான வரி செலுத்தாமல் மறைத்திருந்தது வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. அது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வரிஏய்ப்பு செய்த நன்வானிக்கு சொந்தமான நேரு வீதியில் உள்ள அவரது துணிக்கடை, அவரது வீடு உள்ளிட்டவற்றை அதிகாரிகள் அதிரடியாக ஜப்தி செய்து ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதுதொடர்பான தகவலையும் நோட்டீஸாக ஒட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக வருமானவரித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "வருமான வரித்துறை பாக்கி வைத்துள்ளோருக்கு கடும் நடவடிக்கை எடுத்து வந்தோம். அதிக வரி பாக்கி வைத்துள்ளோர் கண்காணிக்கப்பட்டு பல சிறப்பு வருமான வரி மீட்பு நடவடிக்கைகள் எடுத்தோம். குறிப்பாக வருமான வரி மீட்பு சோதனை, அசையும் மற்றும் அசையா சொத்து முடக்கம் ஆகிய நடவடிக்கை எடுக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக கிஷோர் நன்வானி சொத்து முடக்கப்பட்டு ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்தாதோர் தாங்களாகவே முன்வந்து வரிகளை செலுத்தாவிடில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் வரி ஏய்ப்பு தொடர்பாக 174 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 50 பேர் மீது இதுதொடர்பாக வழக்கு நடப்பதால் அவர்களை தவிர்த்து 124 பேர் மீது நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதில் தற்போது முதலாவதாக ரூ.1.04 கோடி வரி ஏய்ப்பு செய்தவரின் சொத்து வரும் மார்ச் 26-ல் ஏலம் விட நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT