Published : 07 Mar 2018 03:18 PM
Last Updated : 07 Mar 2018 03:18 PM
‘திரிபுராவில் இன்று லெனின் சிலை நாளை தமிழகத்தில் பெரியார் சிலை’ என்று பேசிய பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவின் வெடிகுண்டு வார்த்தைகள் தமிழகத்தில் பெரும் அரசியல் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது.
பாஜகவினரும், இந்து வலதுசாரி அமைப்பினரும் முதலில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். சிலை என்பது கொள்கையின் குறியீடாகும். அதை உடைப்பதால் மட்டும் மக்கள் மனதில் கல்வெட்டாக பதிந்த திராவிட சித்தாந்தங்களையும், சுயமரியாதை சிந்தனைகளையும் அழித்துவிடலாம் என்ற நினைப்பில் இருப்பது, அதே வார்ப்பில் எச்.ராஜா பேசி இருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது.
தடம் பதிக்கமுடியாத தமிழகத்தில் எந்தவிதத்திலாவது பதற்றத்தையும், இன வாதத்தையும் தூண்டிவிட்டு அரசியல் குளிர்காய பாஜக முயல்கிறது. அந்த முயற்சியில் எச்.ராஜா போன்றவர்கள் மூலம் பாஜக செய்யும் செயலாகவே இதைப் பார்க்க முடிகிறது. அந்த விதத்தில் இப்போது பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜா கையில் எடுத்து இருப்பதுதான் சிலை உடைப்பு அரசியல்.
திரிபுராவில் உடைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலை விவகாரத்தை, தமிழகத்தில் பெரியார் சிலையோடு முடிச்சுப் போட்டு எச் ராஜா பேசியதற்கு பின்புலம் இருக்குமோ எனும் சந்தேகத்தை இப்போது அரசியல் நோக்கர்கள் மத்தியில் உருவாக்கி இருக்கிறது.
எச் ராஜாவின் பெரியார் குறித்த பேச்சை தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டித்துள்ளனர். திமுக, தி.க, மதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியின் தலைவர்களும் ஒருமித்த குரலில் எச்.ராஜாவின் விஷ வார்த்தைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
பெரியாரை வார்த்தைகளால் தீண்டினால் கூட என்ன நேரும் என்பதை எச்.ராஜாவுக்கு 24 மணிநேரத்துக்குள் தமிழகம் உணர்த்திவிட்டது. அதனால், இன்று காலையில் முகநூலில் வேறுவழியின்றி வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
இதன் காரணமாகவே, அனைத்து தொலைக்காட்சி சேனல்கள், சமூக ஊடகங்கள், நாளேடுகளின் பிரதானச் செய்தியாக எச்.ராஜாவின் விவகாரம்தான் இப்போது விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. ஆங்காங்கே நடக்கும் போராட்டங்களும், கைதுகளும் பெரியார் சிலை உடைப்புக்கும், எச்.ராஜாவின் பேச்சுக்கு எதிராகவே இருக்கிறது.
பெரியார் சிலை குறித்து எச்.ராஜா பேசிய அரசியல் முதிர்ச்சியற்ற வார்த்தைகள் திட்டமிட்டு பேசப்பட்டவையா, அல்லது திசை திருப்ப பேசப்பட்டவையா என்ற ஐயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனென்றால், ஒட்டுமொத்த தமிழகமும் காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை எதிர்நோக்கி இருக்கும் போது, அதில் இருந்து திசை திருப்ப பாஜக மேற் கொண்டு இருக்கும் தகிடுதத்த செயலாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.
ஏறக்குறைய அரைநூற்றாண்டுக்கு மேலாக நீடித்து வந்த காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அடுத்த 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதை தமிழகம் எதிர்பார்த்து இருக்கிறது.
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கடந்த அரை நூற்றாண்டாக இழைக்கப்பட்டுவரும் அநீதிக்கு விரைவில் விடிவுகாலம் பிறந்து, காவிரி நீர் வரும்பாதையை எதிர்பார்த்து இருக்கிறார்கள். ஆனால், மீண்டும் அதை கானல் நீராக்கும் முயற்சியில் பாஜக எச்.ராஜா எனும் அம்பை ஏவி இருக்கிறது.
தென் மாநிலங்களில் கால்பதிக்க வேண்டும் என்ற தீராத தாகத்துடன் இருக்கும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு, தமிழகத்தில் டெல்டா விவசாயிகளின் வாழ்தாரப் பிரச்சினையை முக்கியமாகத் தெரிவதில்லை. காவிரி நதிநீர் விவகாரத்தை அரசியல் ஆதாயத்துக்காகவே மேம்போக்காக்கவும், மெத்தனப்போக்காவும் மட்டுமே ஆரம்பத்தில் இருந்து அணுகி வருகிறது.
விரைவில் நடைபெற உள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு எந்த அளவுக்கு தாமதம் செய்ய முடியுமோ அதை செய்து கொண்டே வருகிறது.
முதலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 6 வாரங்களுக்குள் அமைக்க இயலாது என்று குழப்பத்தை ஏற்படுத்தினார், அடுத்த சில நாட்களில் நிதின் கட்கரி வகிக்கும் நீர்வளத்துறையின் இணை அமைச்சர் அர்ஜூன் மேக்வால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன என்றார்.
இப்போது வரும் 9-ம் தேதி காவிரி விவகாரம் தொடர்பாக 4 மாநில அரசின் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசி முடிவு செய்ய இருக்கிறோம் என்று மத்திய அரசு கூறி வருகிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மாற்றமில்லாமல் அமல்படுத்த வேண்டிய மத்திய அரசு அதைத் தாமதப்படுத்தும் நோக்கில்தான் மீண்டும் 4 மாநில அரசின் பிரதிநிதிகளைச் சந்தித்து பேச இருக்கிறது என்றுதான் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
காவிரி நிதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த நிலையில், தீர்க்கமாக இருந்து வருவது, மோடி அரசுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ, நாடாளுமன்றத்திலும் திமுக, அதிமுக கட்சிகள் கட்சி பாகுபாடின்றி காவிரி மேம்பாட்டு வாரியம் அமைய குரல் கொடுத்து வருகின்றன. இது மத்திய அரசுக்கு மேலும் குடைச்சலைக் கொடுத்து இருக்கிறது
காவிரி விவகாரத்தில் இருந்து, தமிழக அரசியல் கட்சிகளின் கவனத்தையும், டெல்டா விவசாயிகள், மக்களின் நோக்கத்தையும் திசைதிருப்ப வேண்டும். பிளவுபடுத்தும் அரசியலையும், திசை திருப்பும் செயலையும் செய்து வரும் பாஜக தமிழகத்தில் தனது வேலையை எச்.ராஜா மூலம் செயல்படுத்த முயற்சிக்கிறது. அந்த கருவியாகவே எச். ராஜாவை மத்தியில் ஆளும் பாஜக அரசு பயன்படுத்தி இருக்கிறது.
ஆனால், காவிரி மேலாண்மை அமைக்கும் விவகாரத்தில் காலம் கனிந்துவரும் நிலையில் தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள திமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளும் கவனம் வேறுபக்கம் சென்றுவிடக்கூடாது.
காவிரி மேலாண்மை வாரியத்தை உருவாக்க நாம் மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தருவதில் இருந்து நழுவிடக் கூடாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி, தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெற்றுத் தருவதில்தான் கவனத்தை செலுத்துவதைத் தான் விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கும் வழியாகும்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூட காவிரி விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் நிலையில், திசைதிருப்பும் விஷயமாக பெரியார் குறித்த பேச்சை பாஜக கையில் எடுத்து இருக்கிறது என்ற கருத்தைத் தான் அவரும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசியல் கட்சிகள் திசைமாறி சென்றுவிடக்கூடாது, டெல்டா விவசாயிகளை நட்டாற்றில் விட்டுவிடக்கூடாது என்பதே அனைவரின் வேண்டுகோளாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT