Published : 23 Mar 2018 09:26 PM
Last Updated : 23 Mar 2018 09:26 PM
புதுச்சேரி போலீஸார் மீது நம்பிக்கை இல்லை. இதனால் நாங்கள் சட்டப்பேரவைக்குள் செல்ல பாதுகாப்பு கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுத உள்ளோம். சட்டப்பேரவைக்குள் அனுமதிக்காவிட்டால் முதல்வரும், சபாநாயகரும் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று நியமன எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்ட பாஜக தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் தலைமைச்செயலர் அஸ்வினி குமார் ஆகியோரை சந்தித்தனர். இதில் ரங்கசாமி அவர்களுக்கு நியமன எம்எல்ஏக்களுக்கு திருநீறு பூசி ஆசிர்வாதம் செய்து பிரசாதம் தந்துள்ளார். அதேபோல் தலைமைச்செயலர் அஸ்வினி குமாருக்கு நியமன எம்எல்ஏக்கள் இனிப்பு வழங்கினர். அதேபோல் அவர்களுக்கு தலைமைச்செயலரும் இனிப்பு வழங்கினார்.
இந்நிலையில் புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
கடந்த 2016-ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், நியமன எம்எல்ஏக்களை பரிந்துரை செய்யவில்லை. இதனால் மத்திய அரசு புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டத்தின்படி உள்துறை அமைச்சகம் மூலம் 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. ஜனாதிபதியும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அதற்கு ஒப்புதல் அளித்தார். ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்களை ஏழைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில்தான் நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்தியாவில் உச்சபட்ச அதிகாரம் உள்ள ஜனாதிபதியின் ஒப்புதலை மதிக்காமல் காங்கிரஸ் அரசு சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் மூலம் நியமன எம்எல்ஏக்கள் நியமனத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது.
இந்நிலையில் உயர் நீதிமன்றம் சட்டம் மீறப்படவில்லை, நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பை வழங்கியுள்ளது. நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம் என்று முதல்வர் நாராயணசாமி பல முறை கூறியுள்ளார். அதன்படி எங்களை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும். சபாநாயகர் வைத்திலிங்கம் காங்கிரஸ் தலைவரைப்போல், எல்லைமீறி, மன்னர் போல் செயல்படுகின்றார். இதைக் கண்டிக்கிறோம்.
காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. இதை திசை திருப்புவதற்காக நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.
சட்டப்பேரவைக்குள் எங்களை வரக்கூடாது எனக்கூறும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை. 26-ம் தேதி சட்டப்பேரவைக்குள் அனுமதிக்காவிட்டால் முதல்வரும், சபாநாயகரும் கடும் விளைவை சந்திக்க நேரிடும். நாங்கள் சட்டசபைக்குள் நுழைய இடையூறு செய்பவர்களை கைது செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி நாங்கள் நேரிடையாக சட்டப்பேரவைக்குள் சென்று அமரலாம். புதுச்சேரி போலீஸார் மீது நம்பிக்கை இல்லை. இதனால் நாங்கள் சட்டப்பேரவைக்குள் செல்ல பாதுகாப்பு கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுத உள்ளோம்'' என்று சாமிநாதன் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT