Published : 20 Mar 2018 09:12 AM
Last Updated : 20 Mar 2018 09:12 AM
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவ மனையில் சரியான வழிகாட்டு தல் இல்லாததால் நோயாளிகள் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டு சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் சித்த மருத்துவம் மட்டுமல்லாமல் ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் புற நோயாளிகளாக வந்து இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இங்கு முறையான வழிகாட்டுதலோ, அறிவிப்புப் பலகையோ இல்லாததால் சித்த மருத்துவ பிரிவுக்கு வரும் நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இந்த மருத்துவமனையின் நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள கட்டிடத்தில் நீண்ட வரிசை நிற்கிறது. சிகிச்சை பெற டோக் கன் பெறுவதற்கான வரிசை அதுதான் என்று நினைத்து வரிசையில் நின்றால், கவுன்ட்டர் அருகே சென்றதும், ‘புதிதாக வருபவர் வேறு கவுன்ட்டரில் நிற்க வேண்டும்’ என்று சொல்லித் திருப்பி அனுப்பி விடுகின்றனர். முன்னதாகவே இதுகுறித்து யாரும் வழிகாட்டுவதில்லை. முறையான அறிவிப்பு பலகைகளும் இல்லை.
ஒரு வழியாக அனுமதிச் சீட்டு வாங்கிவிட்டு, தோல் சிகிச்சைப் பிரிவு அறைக்குச் சென்றால் அங்கும் நீண்ட வரிசை நிற்கிறது. அந்த அறைக்குள் பிரதான சித்த மருத்துவரின் இருக்கையைச் சுற்றி பயிற்சி டாக்டர்கள் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கின்றனர். அறைக்கு வெளியே நிற்கும் கூட்டத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. பிரதான டாக்டர் வந்த பிறகு ஒவ்வொருவராக வருமாறு மிரட்டல் தொனியில் கூறுகிறார்கள்.
பிரதான சித்த மருத்துவர் வரும் நேரத்தில்தான் நோயாளிகளை ஏற்கெனவே வந்தவர்கள் என்றும், புதிய நோயாளிகள் என்றும் தரம் பிரிக்கிறார்கள். இதனால் அங்கு தேவையில்லாத சலசலப்பு ஏற்படுகிறது. ஒரு வழியாக மருத்துவரைப் பார்த்து, மருந்து வாங்கச் சென்றால் அங்கும் வரிசை தொடர்கிறது. வரிசையில் வெறுங்கையோடு நிற்பவர்களைப் பார்க்கும் சக நோயாளிகள், மருந்து வாங்க பிளாஸ்டிக் டப்பாக்களை வாங்கி வரவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இதைக்கூட அங்குள்ள ஊழியர்கள் கூறுவதில்லை.
வாசலுக்குப் போய் டப்பாக்களை வாங்கிவிட்டு, மருந்துகளை வாங்கி வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று, மருந்து வாங் கிச் செல்ல சில மணி நேரம் ஆகிறது. இலவசம் என்பதால்தான் தங்களை யாரும் கண்டு கொள்வதில்லையோ என்று வேதனைப் படுகிறார்கள் நோயாளிகள்.
இதுகுறித்து அங்குள்ள உயர் மருத்துவ அதிகாரியிடம் கேட்டபோது, “சித்த மருத்துவ பயிற்சி டாக்டர்களை நாங்கள் கட்டுப் படுத்தவோ, வேலை வாங்கவோ முடியாது. மருந்து கொடுக்கும் இடத்தில் பிரச்சினை இருந்தால் சரி செய்கிறோம்” என்று மட்டும் சொல்லி, பேச்சை நிறுத்திக்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT