Published : 09 Mar 2018 08:49 AM
Last Updated : 09 Mar 2018 08:49 AM
திருச்சி பெல் கணேசா ரவுண்டானா பகுதியில் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்து பலியான பெண்ணின் உடலைப் பெற மறுத்து அவரது உறவினர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த அய்யம்பேட்டை சூலமங்களத்தைச் சேர்ந்த ராஜா (37), தன் மனைவி 3 மாத கர்ப்பிணி உஷாவுடன் (34) நேற்று முன்தினம் மாலை திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் வண்டியில் இருந்து தவறி சாலையில் விழுந்து தலையில் அடிபட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
ராஜாவுக்கும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாரை கண்டித்து 3 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். மறியலின்போது அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மாணவர்கள் உட்பட 23 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்ட ராஜா உள்ளிட்ட உஷாவின் உறவினர்கள், “காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். ஓசூர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உயிரிழந்த போலீஸாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கிய தமிழ்நாடு அரசு, போலீஸாரால் உயிரிழந்த ராஜாவின் குடும்பத்துக்கும் அதற்கு இணையாக நிவாரணம் வழங்க வேண்டும். உஷாவின் கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பெல் கணேசா ரவுண்டானா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உடலைப் பெற மாட்டோம் என்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.
போலீஸார் குவிப்பு
பாதுகாப்பு கருதி மாநகர காவல் துணை ஆணையர் சசி கணேசன் தலைமையில் 100-க்கும் அதிகமான போலீஸார் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.
மாநகர காவல் துணை ஆணையர் சசி கணேசன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர், மாலை சுமார் 4.30 மணியளவில், “போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்வது. போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 23 பேரில் பிளஸ் 2 மாணவர்கள் இருவரை உடனடியாக விடுவிப்பது. எஞ்சிய 21 பேரின் பெயில் மனுக்கள் விசாரணைக்கு வரும்போது போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்” போன்ற உறுதிமொழிகள் போலீஸ் தரப்பில் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாலை 5.15 மணிக்கு உஷாவின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
கமல்ஹாசன், சீமான் ஆறுதல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், செல்போனில் தொடர்புகொண்டு உஷாவின் கணவர் ராஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு வந்து ராஜா உள்ளிட்ட உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். முன்னதாக, தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா ஆகியோரும் ஆறுதல் கூறினார்.
இதற்கிடையே திருச்சி சுந்தர் நகரில் உள்ள உஷாவின் பெற்றோரின் வீட்டுக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, இன்று (மார்ச் 9) அடக்கம் செய்யப்படும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT