Published : 10 Mar 2018 09:38 PM
Last Updated : 10 Mar 2018 09:38 PM

சென்னை உணவகங்களில் விற்கப்படும் கெட்டுப்போன இறைச்சி; ஆந்திராவிலிருந்து டன் கணக்கில் வருகை: கண்டுகொள்ளாத உணவுப் பாதுகாப்புத் துறை

 சென்னையில் உள்ள உணவகங்களுக்கு விற்பதற்காக ஆட்டிறைச்சியைப் போல இருக்கும் கன்றுக்குட்டி இறைச்சிகளை சுகாதாரமற்ற முறையில் ஆந்திராவிலிருந்து கொண்டு வந்து வெட்டி விற்பனை செய்த 7 பேரை போலீஸாரும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் பிடித்தனர். பின்னர் அவர்களை விடுவித்தனர்.

சென்னை உணவகங்களில், பிரியாணி, ஆட்டிறைச்சியுடன் கலந்து விற்பதற்காக ஆந்திராவிலிருந்து இறந்துபோன கன்றுக்குட்டிகளை சென்னைக்கு கொண்டு வந்து அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி குறைந்த விலைக்கு விற்பதாக எழும்பூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் தெற்கு கூவம் ஆறு சாலையில் உள்ள கூவம் கரையில் இரும்புத் தடுப்பு அமைத்து இறைச்சியை விற்கும் இடத்திற்கு சென்றனர்.

உடன் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் சென்றனர். அங்கு சுகாதாரமற்ற முறையில் ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட மாட்டிறைச்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

ஆட்டிறைச்சியுடன் கலப்பதற்காக கன்றுக்குட்டிகளின் இறைச்சியை சாதாரண இரும்பு குடோன் ஒன்றில் சுகாதாரமற்ற முறையில் விற்பது தெரிய வந்தது. இதற்கு முன் சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றின் கரையிலும் இது போன்ற சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்ற நபர்கள் பிடிபட்டனர்.

போலீஸார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த துர்நாற்றம் வீசும் கன்றுக்குட்டிகளின் இறைச்சியை பறிமுதல் செய்தனர். அவை வெளிமாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கன்றுக்குட்டிகளின் இறைச்சி என்பதும், ஆட்டிச்சிறைச்சியை போல இருப்பதற்காக எலும்புகள் இல்லாமல், சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

மொத்தம் 600 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக அங்கிருந்த 7 பேரை போலீஸார் பிடித்தனர். பின்னர் கைப்பற்றப்பட்ட இறைச்சி அழிக்கப்பட்டது. போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட 7 பேரையும் சிறிது நேரத்தில் போலீஸார் விடுவித்தனர்.

 இது குறித்து சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி வாசுதேவனிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்ட போது, அவர் இறைச்சியை மட்டும் கைப்பற்றி அழித்துவிட்டதாகக் கூறினார்.

ஆட்களை போலீஸாரிடம் ஒப்படைத்து விட்டதாகவும் அவர்கள் அதற்கான முறையான பிரிவு இல்லாததால் விடுவித்துவிட்டதாக தெரிவித்தார். உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அல்லவா இதை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டபோது, 'ஆமாம். அவர்கள் தான் விசாரிக்க வேண்டும், எங்களுக்கு தகவல் கிடைத்ததால் உடனடியாக சென்றுவிட்டோம். அவர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளோம்' என்று தெரிவித்தார்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவரிடம் கேட்டபோது, ''இது போன்ற இறைச்சி டன் கணக்கில் தினமும் சென்னைக்கு பல வகைகளில் கொண்டு வரப்படுகிறது. ஆங்காங்கே பிரித்துக் கொடுக்கப்பட்டு விடும் இதைப்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

இதற்கான காவல்துறை சட்டங்களும் இல்லாததால் ஜோராக இந்த வியாபாரம் நடக்கிறது. சென்னையின் மிகப் பெரிய மாஃபியா போன்று பெரும் கூட்டமே செயல்படுகிறது என்று தெரிவித்தார். இது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டிய ஒரு விஷயம்.

சென்னையில் தங்கி வேலை செய்யும் வெளியூரைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வு சம்பந்தப்பட்ட விஷயம், பொதுமக்கள் உயிரோடு விளையாடும் விஷயம். அரசு இந்த விஷயத்தில் அசட்டையாக இருப்பது ஏன் என்று புரியவில்லை'' என்றார்.

சென்னையில் உள்ள கடைகளுக்கு சுகாதாரமற்ற இறைச்சியை சப்ளை செய்வதன் மூலம் நோயைப் பரப்பும் வேலை நடக்கிறது. இது குறித்து மேலும் விரிவான தகவல்கள் தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விரைவில் வெளிவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x