Last Updated : 31 Mar, 2018 09:37 AM

 

Published : 31 Mar 2018 09:37 AM
Last Updated : 31 Mar 2018 09:37 AM

சுற்றுலா தலங்களில் கண்ட இடத்தில் வீசுவதை தடுக்க பிளாஸ்டிக் பாட்டிலுக்கு வைப்புத் தொகை வசூலிக்கலாம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் யோசனை

சுற்றுலாத் தலங்களுக்கு செல் லும் பொதுமக்களிடம் குடிநீர், குளிர்பானம் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு வைப்புத் தொகை வசூலித்தால், கண்ட இடங்களில் காலி பாட்டில் கள் வீசப்படுவது தடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

தெலங்கானாவில் உள்ள கோல்கொண்டா கோட்டை, கர்நாடகாவில் குடகு மலை, மைசூரு உயிரியல் பூங்கா போன்ற சுற்றுலாத் தலங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு வைப்புத் தொகை வசூலிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இங்கு சுற்றுலா வருபவர்கள் குடிநீர், குளிர்பானம், பழச்சாறு அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை உள்ளே கொண்டு செல்வதா னால் ரூ.20 வைப்புத் தொகை செலுத்த வேண்டும். வைப்புத் தொகை பெறப்பட்டதற்கு அடையாளமாக அவர்களது பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். சுற்றிப் பார்த்துவிட்டு, வெளியே வரும் போது ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாட்டிலை காண்பித்து வைப்புத் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

இதுமட்டுமின்றி, அந்த சுற்றுலாத் தலங்களின் உட்புறம் உள்ள கடைகளில் விற்கப்படும் பழச்சாறு, குடிநீர் பாட்டில்களும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வைப்புத் தொகையுடன் சேர்த்துதான் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நடைமுறையால், குடித்து முடித்த காலி பாட்டிலை பொதுமக்கள் கண்ட இடங்களில் வீசி எறிவது முற்றிலுமாக தடுக்கப்படுகிறது. இதனால், அந்த சுற்றுலாத் தலங்கள் பிளாஸ்டிக் குப்பைகள் இன்றி தூய்மையாக பராமரிக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் இந்த திட்டத்தை தமிழக சுற்றுலாத் தலங்களிலும் செயல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரி மலை, திருவண்ணாமலை, பர்வதமலை உள்ளிட்ட மலை களுக்கு அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் ஆயிரக்கணக்கானோர் செல்கின்றனர். அந்த நாட்களில் வனப்பகுதிக்குள் கடைகள் அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர், பழச்சாறு உள்ளிட்டவை விற்கப்படுகின்றன. பயணம் செய்பவர்களில் பலரும் அவற்றை அருந்திவிட்டு, காலி பாட்டில்களை வனப்பகுதிகளிலேயே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், மலைப் பாதை முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது.

ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, கொல்லிமலை, ஜவ்வாதுமலை, டாப்சிலிப் போன்ற முக் கிய சுற்றுலாத் தலங்களிலும் இதுபோன்ற பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படு கிறது.

பொதுமக்கள் அலட்சியமாக வீசுவதால் காடுகள், மலைப் பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து, அகற்றுவது மிகவும் சவாலானது. தவிர, கோடைகாலத்தில் அதிக வெப் பம் காரணமாக மலைகளில் காட்டுத் தீ பரவும் வாய்ப்பு அதிகம். அவ்வாறு தீப்பிடிக்கும் மலை, வனப் பகுதிகளில் பிளாஸ் டிக் கழிவுகளும் அதிகம் இருந்தால், தீயின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.

ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த மலைப் பகுதிகளில் சில தன்னார்வ பக்தர்கள் குழுவினர் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து அகற்றும் கடினமான பணிகளை சில இடங்களில் மேற்கொள்கின்றனர்.

எனவே, பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க தமிழக சுற்றுலாத் தலங்களில் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு வைப்புத் தொகை வசூலிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ‘ஓசை’ சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் க.காளிதாசனிடம் கேட்டபோது, “பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மதிப்பு இல்லாததால்தான் அவற்றை வனப்பகுதிகளில் கண்ட இடத்திலும் வீசி எறிகின்றனர். வைப்புத் தொகை வசூலிக்கப்பட்டால், அந்த பிளாஸ்டிக் பாட்டிலுக்கு மதிப்பு கிடைத்துவிடும். யாரும் அதைத் தூக்கி எறியமாட்டார்கள். ஒருவேளை அவர் கள் திரும்ப எடுத்து வராவிட்டாலும், வைப்புத் தொகைக்கு ஆசைப்பட்டு வேறு யாராவதுகூட அதை எடுத்துவந்து விடுவார்கள். அதனால், மலை, வனப் பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்வது தவிர்க்கப்படும். இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு பெருமளவு குறையும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x