Published : 13 Mar 2018 09:33 AM
Last Updated : 13 Mar 2018 09:33 AM
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றம் சென்ற 39 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்ற 9 பேர் காட்டுத்தீயில் சிக்கி வனப் பகுதியிலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவ மனையில் இறந்தார். இதுதவிர மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
சென்னை, ஈரோடு, கோவை யைச் சேர்ந்த 39 பேர் கொண்ட குழுவினர் இரு தினங்களுக்கு முன்பு மலையேற்றம் செய்வதற் காக குரங்கணி மலைப்பகுதிக் குச் சென்றுள்ளனர். இவர்கள் மலைப்பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை கீழே இறங்க ஆரம்பித்தனர். அப்போது தமிழக எல்லை யான குரங்கணியில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள செங்குத் தான மலைப்பகுதியான டாப் ஸ்டேஷன் அருகேயுள்ள ஒத்தமரம் என்ற இடத்தில் சென்ற போது காட்டுத் தீ எரிந்து கொண்டிருந்தது.
காட்டுத் தீ பரவும் முன் கீழே இறங்கிவிடலாம் என்று நினைத்து சிலர் முன்னேறியுள்ளனர். இதில் தீயின் வெப்பம் தாங்காமல் சிலர் மயங்கியதில் தொடர்ந்து நடந்து செல்ல முடியவில்லை. இதனால் தீயில் முழுவதுமாக சிக்கி சிலர் பலத்த காயமடைந்தனர். தீயிக்கு பயந்து நின்ற சிலர் காயமின்றி தப்பினர்.
மீட்புப்பணியில் மலைவாசிகள்
மலையேறச் சென்ற பெண்க ளின் அலறல் சப்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த மலை கிராம இளைஞர்கள் முதற்கட்டமாக அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. காயமின்றி தப்பியவர்களை மீட்டு நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு குரங்கணிக்கு அழைத்து வந்தனர். இதன் பின்னரே மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரியவந்து மீட்புப் பணியை முடுக்கிவிட்டது.
நேற்று முன்தினம் இரவில் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டதால், தீக்காயம் அடைந்தவர்களில் 9 பேர் இரவு முழுவதும் காயங்களுடன் அவதிப்பட்டு சிகிச்சை பெறமுடியாமல் இறந்தனர். இவர்களை தவிர பலத்த தீக்காயங்களுடன் தேனி, மதுரை யில் சிகிச்சை பெற்றுவருபவர்களில் சிலர் உயிருக்கு போராடி வருகின்றனர். இவர்களில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த தமிழ்மொழி மகள் நிஷா(30) உயிரிழந்தார்.
இறந்த 10 பேர் விவரம்
கோவை மாவட்டம், கிணத்துக்கடவைச் சேர்ந்த தாமோதரனின் மகன் விபின் (30), கடலூர் மாவட்டம் திட்டக்குடி செல்வராஜின் மகள் சுபா (28), மதுரை புதுவிளாங்குடி திருஞானசம்பந்தத்தின் மகள் ஹேமலதா (30), ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடிதங்கராஜின் மகன் தமிழ்ச்செல் வன் (27), அதே ஊரைச் சேர்ந்த நடராஜனின் மகன் விவேக்(28), ஸ்ரீபெரும்புதூர் பாலாஜி மனைவி புனிதா (26), கும்பகோணம் கிருஷ்ணமூர்த்தி மகள் அகிலா, ஈரோடு மாவட்டம், வலையபாளையம் வட்டக்கல் வலசையைச் சேர்ந்த முத்துக்குமாரின் மகள் திவ்யா, சென்னை மதுரவாயல் ரகுராமனின் மகன் அருண் பிரபாகர், வேளச்சேரி தமிழ்மொழி மகள் நிஷா(30) ஆகியோர் உயிரிழந்தவர்கள்.
மீட்புப் பணியில் 600 பேர்
நேற்று அதிகாலை முதலே மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டு 600 பேர் களமிறக்கப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்துக்குச் செல்லவே 3 மணி நேரம் ஆனது. அதன்பிறகு அங்கிருந்த உடல் கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு உதவியாக 4 ஹெலிகாப்டர்கள், 4 ஹெலிகேம் பயன்படுத்தப்பட்டன. நேற்று காலை மீட்கப்பட்டதில் ஒருவர் கூட உயிரோடு இல்லை. மொத்தம் 9 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் ஒரு உடல் தரைவழியாகவே தூக்கி வரப்பட்டு வேனில் தேனி கொண்டு வரப்பட்டது.
மற்ற 8 உடல்கள் 2 ஹெலிகாப்டர் மூலம் தேனி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு உடனடியாக பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆம்புலன் ஸில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக் கப்பட்டன.
நேற்று முன்தினம் இரவு முதற்கட்டமாக மீட்கப்பட்ட 12 பேர் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்க ளில் 10 பேர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர்களின் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள இருவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள 27 பேரில் 9 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. 15 பேர் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதில் ஒரு வர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
18 மணி நேரம் மீட்புப் பணி
குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முதல் ஒரு மணி நேரம் உள்ளூர் மக்களே ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5.30 மணி முதல் மாவட்ட நிர்வாகம் முதல் அரசு நிர்வாகங்கள் அனைத்தும் முடுக்கிவிடப்பட்டன. நேற்று முன்தினம் இரவு 9 மணி வரை பெரும்பாலோனோர் மீட்கப்பட்ட நிலையில், யாரேனும் உயிருடன் சிக்கி இருக்கிறார்களா, சடலங்கள் ஏதும் இருக்கிறதா என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இரவு நேரம் என்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
நேற்று அதிகாலை முதல் ராணுவ ஹெலிகாப்டர்கள் தேடும் பணியை தொடங்கியவுடன் மீட்புப்பணி வேகமெடுத்தது. திண்டுக்கல் டிஐஜி ஜோஷி நிர்மல் குமார், திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்ட எஸ்பி-க்கள் தீயணைப்புத் துறையினர், வனத் துறையினர், மீட்புப் படையினர் என 600 பேர் கொண்ட குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
உடல்கள் அனைத்தும் தரை வழியாகக் கொண்டு வரவேண் டும் என்றால் ஒரு நாள் ஆகி விடும். இந்த பணியை ராணுவ ஹெலிகாப்டர்கள் எளிதாக்கின.
தலா ரூ.4 லட்சம் நிவாரணம்
இதற்கிடையே குரங்கணி காட்டுத் தீயில் உயிரிழந்த 10 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித் துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த விபத்தில் 10 பேர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும் பலத்த காய மடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந் தும் வழங்கப்படும்’ என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
டிரெக்கிங் செல்ல தடை
இந்நிலையில், தேனி மாவட் டம் முழுவதும் கோடை காலம் முடியும் வரை மலைப்பகுதிகளில் டிரெக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட வன அலுவலர் இ.ராஜேந்திரன் தெரிவித்தார். இதேபோல், திண்டுக் கல் மாவட்டம் கொடைக்கானல் மலையிலும் டிரெக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு முதல்வர் கே.பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மற்றும் அமைச்சர்களும் வந்தனர்.
அப்போது பேசிய முதல்வர் தேனி மாவட்டத்தில் டிரெக்கிங் செல்ல தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
(மேலும் செய்தி
படங்கள் உள்ளே)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT