Published : 19 Mar 2018 08:56 AM
Last Updated : 19 Mar 2018 08:56 AM
குப்பை கிடங்கில் விளைந்த காய்கறிகளை குறைந்த விலைக்கு விற்று, வீடுகளிலேயே குப்பையை தரம் பிரித்து வழங்கும் விழிப்புணர்வை, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் ஏற்படுத்திவருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் அமைந்துள்ளன. இங்கு நாள்தோறும் 5 டன் குப்பை சேகரிக்கப்பட்டு காலவாக்கம் பகுதியில் உள்ள உரக்கிடங்கில் கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பை, மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்க வேண்டும். ஆனால், பணிகள் நடைபெறாததால் உரக்கிடங்கில் மலைபோல் குப்பை தேங்கி கிடந்தது.
இந்நிலையில், திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ் தீவிர முயற்சியால், திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு உரக்கிடங்கில் தேங்கியிருந்த குப்பை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பையில் மண்புழு உரம் தயாரிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், உரக்கிடங்கில் காலியாக இருந்த 4 ஏக்கர் நிலத்தை தூய்மைப்படுத்தி பூசணி, முள்ளங்கி, பச்சை மிளகாய், அவரை, கத்தரி, தக்காளி ஆகிய காய்கறி செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த செடிகளுக்கு இங்கு தயாரான மண்புழு உரத்தையே இட்டுள்ளனர். இதில், நல்ல மகசூல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து, திருப்போரூரை சேர்ந்த மளிகை வியாபாரி ஜவஹர்லால் கூறும்போது, “குப்பை கிடங்கிலிருந்து கடும் துர்நாற்றம் வீசி வந்த நிலையில் குப்பையை தரம் பிரித்து, மக்கும் குப்பையிலிருந்து இயற்கை உரத்தை தயாரித்து காய்கறிகளை விளைவித்துள்ளதால், குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு நகரவாசிகளிடையே ஏற்பட்டுள்ளது” என்றார்.
திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ் கூறும்போது, “குப்பையை தரம் பிரிக்க 11 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் 800 கிலோ மக்கும் குப்பை கிடைக்கிறது. இதை, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரமாக மாற்றி விற்பனை செய்கிறோம். உரக்கிடங்கில் விளைந்த காய்கறிகளை மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ததால், வீடுகளிலேயே குப்பையை தரம் பிரித்து வழங்குவது குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT