Published : 12 Mar 2018 08:48 PM
Last Updated : 12 Mar 2018 08:48 PM
ட்ரெக்கிங் என்ற ஒன்றே தமிழகத்தில் இல்லை. வனம் விளையாட்டு மைதானமல்ல, போலி கிளப்புகளை நம்பி இளம் தலைமுறையினர் ஏமாற வேண்டாம் என்று ஓய்வுபெற்ற வன அலுவலர் எச்சரித்துள்ளார்.
தேனி குரங்கணி வனப்பகுதிக்கு ட்ரெக்கிங் சென்ற 39 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். 20 பேர் கடும் தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை ஏற்பாடு செய்தவர்கள் தலைமறைவாகியுள்ளனர். ஒருங்கிணைத்து அழைத்துச்சென்ற நபரும் கடுமையான தீக்காயத்துடன் உயிருக்கு போராடி வருகிறார்.
பாதுகாப்பான ட்ரெக்கிங் எது?, இது போன்ற கிளப்புகளுக்கு அனுமதி உண்டா?, ட்ரெக்கிங் செல்வது குறித்த விழிப்புணர்வு இளம் தலைமுறையினருக்கு உள்ளதா என 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் ஓய்வுபெற்ற வன அலுவலர் பார்த்திபனிடம் கேள்வி எழுப்பினோம்.
அவர் கூறியதாவது:
மார்ச்சிலிருந்து ஜூன் வரை காட்டுத்தீ பரவ வாய்ப்புள்ளதால் வனத்துறையில் ட்ரெக்கிங் அனுமதி இல்லை என்கிறார்களே சரியான தகவலா?
முதலில் ட்ரெக்கிங் என்பதற்கே அனுமதி இல்லை. அரசு அதிகாரிகளைத் தவிர யாருக்கும் வனத்துக்குள் நுழைய அனுமதி இல்லை. அது தடை செய்யப்பட்ட இடம். உள்ளே செல்வது நமது உரிமை அல்ல. அனுமதி பெற்று மட்டுமே உள்ளே செல்ல முடியும். அது அந்தந்த மாவட்ட வன அலுவலர்கள் முடிவு செய்து அதன் அடிப்படையில் தான் அனுமதிக்கப்படும்.
இந்த விபத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
காட்டுக்குள் செல்வது எல்லாம் தற்போது ஃபேஷனாகி விட்டது. காட்டுக்குள் செல்வது என்றால் வனத்துறை அலுவலர்களிடம் அனுமதி கேட்டால் நீங்கள் யாரெல்லாம் செல்கிறீர்கள் என்று கேட்போம். ஏனென்றால் இப்போது பார்த்தால் இந்த விபத்தில் 10 வயது குழந்தையும், அதன் தாயாரும் ஒரே சைட்டுக்கு ஒன்றாகச் சென்றுள்ளனர். இது குடும்பத்துடன் செல்ல சர்க்கஸோ, சினிமா தியேட்டரோ அல்ல.
காரணம் வனப்பகுதியில் 10 வயது குழந்தை செல்வதற்கான வனம் தனியாக உள்ளது. பெரியவர்கள் செல்லும் பகுதி என தனியாக உள்ளது. ஏனென்றால் தீப்பிடித்தவுடன் குழந்தையை காப்பாற்றுவதா தாயை காப்பாற்றுவதா? என்ற குழப்பம் தானே வரும். நிறைய பேர் கஷ்டப்பட்டிருப்பார்கள். ஆகவே சினிமாவுக்கு அழைத்துச் செல்வது போன்ற விஷயமல்ல.
அப்படியானால் அவரவருக்கு வனத்தில் தனியாக இடம் உண்டா?
ஆமாம், 10 வயது குழந்தை நடப்பதற்கு ஒரு இடம் உள்ளது, அங்கு 10 வயதுக் குழந்தையை அனுப்புவோம். பெரிய ஆட்கள் செல்லும் இடம் உண்டு, அங்கு அனுப்புவோம். பள்ளிப்பிள்ளைகளா அவர்கள் மனோ நிலை எப்படி இருக்கும் அதற்கேற்றார் போல் அனுப்புவோம். நாங்கள் சில இடங்களை வைத்துள்ளோம். அதற்கு ஏற்ற பக்குவம், உடல் தகுதி உள்ளவர்களை அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்புவோம்.
எங்கள் வன அலுவலரிடம் அவர்கள் முறையாக அனுமதி கேட்டிருந்தால் யார் செல்கிறீர்கள் என்ன நோக்கம் என்று கேட்டு குழந்தைகளை தடுத்திருப்பார். குழந்தைகளுக்கு தனியாக வேறு இடம் உண்டு அங்கு அனுப்பி இருப்போம்.
காட்டுக்குள் இவர்கள் தங்கியதாக கூறுகிறார்களே?
காட்டுக்குள் இரவு தங்கக் கூடாது. இவர்கள் அருகில் ஏதாவது தனியார் இடத்தில் தங்கியிருந்திருப்பார்கள். ஏனென்றால் வனப்பகுதிக்குள் தங்குவது சரியல்ல. நாங்களே தங்குவதாக இருந்திருந்தால் அதற்கென ஆட்களைக் கேட்டு, பாதுகாப்புக்கு யார் இரவில் நிற்பது என்பது உட்பட பேசி வைத்துதான் இரவில் தங்குவோம். மிருகங்கள் வரலாம், வேறு ஏதாவது பிரச்சினைகள் வரலாம். ஆகவே தங்குவது அறிவுபூர்வமான செயல் அல்ல.
சாதாரணமாக ட்ரெக்கிங் சென்று செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் போடுகிறார்களே?
கோவை வனப்பகுதியில் இப்படித்தான் நடந்தது. கடந்த ஜூன் மாதம் ஒரு கல்லூரி மாணவன் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாட காட்டுக்குள் உள்ள சிவன் கோயிலுக்கு வந்துள்ளார்.
அப்போது 12 காட்டு நாய்கள் அந்த மாணவனை சுற்றிவிட்டன. புத்திசாலித்தனமாக அந்த மாணவன் ஒரு மரத்தின் மீது ஏறிவிட்டார். பின்னர் நல்லவேலையாக செல்போனில் சிக்னல் இருந்ததால் அவர் போலீஸை அழைக்க அவர் பின்னர் மீட்கப்பட்டார். காட்டை இவர்கள் ஒரு பொழுதுபோக்கு பூங்காவாக நினைக்கிறார்கள்.
காட்டுப்பகுதியில் தீப்பிடித்தது எதனால்?
இவர்களே கூட எதையாவது தவறுதலாக கொளுத்திப் போட்டிருக்கலாம். காட்டுப்பகுதியில் காலை 11 மணிக்கு தீப்பிடிக்க வாய்ப்பு குறைவு. இவர்கள் காலையில் ஒரு இடத்தில் தங்கி டிபன் சாப்பிட்டுள்ளனர். அங்கு ரெஸ்ட் எடுக்கும்போதே தீ பிடித்துவிட்டது என்கிறார்கள். ஆகவே தவறுதலாக எதையாவது எரியும் பொருளை போட்டிருக்கக் கூட வாய்ப்புண்டு. யார் அதை உறுதிப்படுத்துவது?
இரண்டு மூன்று நாட்களாக தீப்பிடித்து எரிகிறது என்கிறார்களே?
அது வேறொரு இடமாக இருந்திருக்கும். இவர்கள் காலையில் போகும் போது ஒன்றும் இல்லை. போகும்போதே தீப்பிடித்திருந்தால் சென்றிருப்பார்களா? ஒரு பத்து பேர் அவர்களுக்கு வழிகாட்டி என்று இருந்திருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்கும். ஆகவே வனப்பகுதியை சாதாரணமாக நினைப்பது கூடாது. காட்டுக்குள் ஊர்வலமா போகிறோம்.
திரும்பும் வழி தெரியாமல் தீயின் வெப்பம் தாங்காமல் குதித்ததால் உயிரிழப்பு என்கிறார் ஆட்சியர், அது உண்மையா?
ஆமாம், சரிதான். மக்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். இவர்கள் என்னவென்று தெரியாமல் உள்ளே போவதால் இவ்வளவு பிரச்சினை. ஒரு பொருள் வாங்கினாலே அதற்கான ஆதாரங்களை சோதிக்கிறார்கள் அல்லவா? அப்படி இருக்கும் போது ஆன்லைனில் ஒருவர் ட்ரெக்கிங் கூட்டிட்டுப் போகிறேன் என்று விளம்பரம் கொடுத்தால் அவர் யார் என்ன, நீ எங்கே அனுமதி பெற்றிருக்கிறாய், உனக்கும் வனத்துறைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது, அனுமதி பெற்றிருக்கிறாயா? என்று சோதித்து தானே போக வேண்டும்.
ட்ரெக்கிங் செல்பவர்களுக்கு பயிற்சியாளர் உள்ளாரா?
சரியான கைடு தமிழ்நாட்டில் எனக்கு தெரிந்து யாரும் இல்லை. தகுதியான நபர்கள் யாரும் இல்லை. காரணம் பரந்து விரிந்த பகுதி இந்த வனம். நாங்களே வேறு எங்காவது செல்ல வேண்டும் என்றால் அந்த ஏரியாவில் யார் இருக்கிறாரோ அவரை அழைத்துக் கொண்டுதான் போவோம். காரணம் 5000 ஹெக்டேர் இருக்கு என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த 5000 ஹெக்டேரும் மர்மம் நிறைந்த பகுதிதான். இங்கு ஒவ்வொரு பகுதியும் தனித்தன்மையுடன் உள்ள பகுதிகள்.
இந்த காட்டுப்பகுதியில் உள்ள நாங்களே தாக்கப்படும் அபாயம் உண்டு, சமீபத்தில் நன்றாக பயிற்சி பெற்ற வனத்துறை அதிகாரி மணிகண்டன் அவராலயே முடியவில்லை. யானை தாக்கி கொன்றதை உதாரணமாகக் கூற முடியும்.
ஏன் இப்படி வருகிறார்கள் இளைஞர்கள்?
ஒன்றுமில்லை காட்டுப்பகுதி என்றால் ஒரு சுவாரஸ்யம், த்ரில் அதனால் தான் வருகிறார்கள். எனக்கென்ன என்று வர முடியாது. ஒரு பாம்பு கொத்திவிட்டால் கூட திரும்பி வர முடியுமா? உடன் வந்தவர்கள் தான் அவரைத் தூக்கி வர முடியுமா.
ட்ரெக்கிங் பெயரை சொல்லி இதுபோன்று அழைத்து வரும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாதா?
வனப்பகுதிக்குள் வந்தால் வனத்துறை நடவடிக்கை எடுக்கும். இங்கு அழைத்துச்செல்கிறோம் என்று ஒருவர் பணம் பிடுங்கினால் அவர் மீது காவல்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதுகாப்பான ட்ரெக்கிங் உள்ளதா?
கட்டாயம் உண்டு, ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ற வனப்பகுதி உண்டு. அதே போன்று நேரமும் உண்டு. நாங்கள் பெரும்பாலும் காலை 7 மணியைத்தான் தேர்வு செய்வோம் காரணம் இரவில் இரை தேடி களைத்து அனைத்து விலங்குகளும் ஓய்வு எடுக்கும் நேரம். காலை 7 மணி முதல் மதியம் உணவு நேரம் வரை தொடர்வோம்.
பள்ளிப் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட தூரம் வரை அழைத்துச் செல்வோம், என்.சி.சி மாணவர்கள் கொஞ்சம் உடல் தகுதியுடன் இருப்பார்கள். அவர்கள் அதற்கு ஏற்றார் போல் செல்வார்கள்.
ட்ரெக்கிங் செல்லும் ஐடி ஊழியர்கள், இளைஞர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?
ஆன்லைனில் நாங்கள் யாருக்கும் அனுமதி கொடுப்பதில்லை, தனி நபர்கள் இல்லாமல் வியாபார நோக்குடன் அணுகும் யாருக்கும் நாங்கள் அனுமதி அளிப்பதில்லை. வியாபார நோக்குடன் இருப்பவர், யார் பணம் தருகிறார்களோ அதற்கு ஏற்றார்போல் இருப்பார்கள். அவர்களுக்கு விதிமுறைகள் எதுவும் இல்லை.
ட்ரெக்கிங் செல்பவர்களுக்கு பயிற்சி வேண்டும் அல்லவா?
கண்டிப்பாக வேண்டும். இது படிப்படியாக வர வேண்டும். இரண்டு மணி நேரம் நடக்கும் ட்ரெக்கிங் போகணும். ஆரம்பித்து படிப்படியாக அதிகரிக்க வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து தொடர்ச்சியாக 12 மணி நேரம் நடக்கணும். நாங்கள் தொடர்ச்சியாக 12 மணி நேரம் நடப்போம். வன அலுவலர்கள் தேர்வே 4 மணி நேரம் 24 கிலோ மீட்டர் நடக்கணும்.
நம்மை நாம் கொஞ்சம் கொஞ்சமாக உறுதிப்படுத்தணும். பயிற்சியே இல்லாமல் போகவும் கூடாது. மேடான பகுதியில் ஏறும்போது பயிற்சி இருக்கணும். மேலே ஏற ஏற ஆக்ஸிஜன் அளவு குறையும்போது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடலுக்கு இருக்க வேண்டும். நடிகர் முத்துராமன் அப்படித்தான் மரணமடைந்தார். நன்றாக ஓடக்கூடியவர். ஊட்டியில் அவர் அதே போல் ஓடும்போது அவர் வயதுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மாரடைப்பு ஏற்பட்டது என்பார்கள்.
தற்போது இந்த விபத்துகான காரணத்தில் இதுவும் உள்ளதா?
ஆமாம், ஏறுவதை விட இறங்குவதற்குத்தான் பயிற்சி அதிகம் வேண்டும். காலை எந்த இடத்தில் வைக்கவேண்டும் என்று தெரியாமல் கீழே விழுவோம். புவி ஈர்ப்பு சக்தியை மீறி உங்கள் உடலை கட்டுப்படுத்தி இறங்க பயிற்சி தேவை. ஏறுவது எளிது, இறங்குவது தான் கடினம். இவர்கள் இறந்ததும் அப்படித்தான் நிகழ்ந்துள்ளது. காரணம் வேகமாக பயத்துடன் இறங்கும்போது தூக்கி எறியப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT