Published : 06 Mar 2018 10:43 AM
Last Updated : 06 Mar 2018 10:43 AM
காப்பு காடுகளில் மரங்களுடைய அடர்த்தி குறைவதால் பருவ மழையில்லாமல் தமிழகத்தின் குடிநீர் திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் குடிநீர் ஆதாரமும், நீர் பாசனமும் தென் மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழைகளை நம்பியே இருக்கிறது. இதில், தென் மேற்கு பருவ மழை கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வரை 7 மலையடிவார மாவட்டங்களிலும், வடகிழக்கு பருவமழை கிருஷ்ணகிரி முதல் கன்னியாகுமரி வரை 14 மலையடிவார மாவட்டங்களிலும் பெய்கின்றன.
கடந்த காலத்தில் இந்த மலையடிவார மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 315 மி.மீ. முதல் 550 மி.மீ. வரை பெய்தது. வடகிழக்கு பருவமழை 350 மி.மீ. முதல் 540 மி.மீ. வரை பெய்தது. ஆனால், தற்போது தென்மேற்கு பருவமழை 150 முதல் 350 மி.மீ. வரையும், வடகிழக்கு பருவமழை 450 மி.மீ. வரையும் மட்டுமே கிடைக்கிறது. இந்த மழையையும் முழுமையாக பயன்படுத்தவோ, சேமித்து வைக்கவோ முடியாத நிலையில் தமிழகம் உள்ளது.
அதனால், தமிழகத்தில் தற்போது விவசாயத்துக்கும் குடிநீருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான குடிநீர் திட்டங்கள், மலையடிவார மாவட்டங்களில் உள்ளன. மழை குறைவால் இந்த குடிநீர் திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கும் முன்பே தற்போது மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் குடிநீரை மக்கள் விலை கொடுத்து வாங்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் பொறியாளரும், நீர் மேலாண்மை வல்லுநருமான சே.பிரிட்டோராஜ் கூறியதாவது:
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை கிருஷ்ணகிரி மாவட்டம் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரை 14 மாவட்டங்களில் அமைந்துள்ளது. பொதுவாக இந்த மலையின் பெரும்பாலான பகுதிகள் காப்பு காடுகளாக உள்ளன. தமிழகத்தில் உள்ள 1.30 லட்சம் சதுர கி.மீ. வனப் பகுதியில் 3.82 சதவீதம் மட்டுமே அடர்ந்த காடுகளாகவும், 7.85 சதவீதம் மிதமான அடர்த்தி உள்ள காடுகளாகவும் உள்ளன.
கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பு வரை முறையான பருவ மழைப்பொழிவை தமிழகம் பெற இந்த காப்பு காடுகளில் இருந்த மர அடர்த்தி உதவியது. குறிப்பாக காப்பு காடுகளில் உள்ள சோலை வனக்காடுகள் தேன்கூடு போன்று, மழைநீரை களிமண் மற்றும் மணல் கலந்த அதன் அடிப்பாகத்தில் ஈர்த்து வைத்து நீண்ட காலத்துக்கு மலைகளின் சரிவில் உள்ள நிலங்களுக்கு பாசனத் தண்ணீரை தந்தது. மேலும், மலையடிவாரத்தில் இருந்து 50 கி.மீ. தூரம் வரை நிலத்தடி நீர் செறிவை தந்து வந்தது. இந்நிலையில், ஆண்டுதோறும் இக்காப்பு காடுகளில் வெட்டப்படும் மரங்கள் காரணமாக மரங்களுடைய அடர்ந்தி குறைந்துவிட்டதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அதன் மலையடிவார மாவட்டங்களிலும் மழை பொழிவு குறைந்துவிட்டது.
சோலை வனக்காடுகளில் உள்ள சுனைகளில் நீர் வறண்டு காணப்படுவதால் வனவிலங்குகள், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருகின்றன.
இக்காப்பு காடுகளையொட்டி உள்ள பட்டா மற்றும் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதிகளில் மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதால் தமிழகம் வறட்சியை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT