Published : 05 Mar 2018 09:06 AM
Last Updated : 05 Mar 2018 09:06 AM

அரசியல் காரணங்களால் 4 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் நவீன உடற்பயிற்சி கூடம்: தண்டையார்பேட்டை முத்தமிழ் நகர் இளைஞர்கள் அவதி

தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட முத்தமிழ் நகரில் உள்ள நவீன உடற்பயிற்சி கூடம், அரசியல் காரணங்களால் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டிக் கிடக்கிறது. அதனால் அப்பகுதி இளைஞர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி சார்பில், இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மாநகரம் முழுவதும் 96 இடங்களில் இலவச உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 22 உடற்பயிற்சி கூடங்கள் மின்னணு உடற்பயிற்சி சாதனங்களைக் கொண்டவை ஆகும்.

கடந்த 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில், மாநகராட்சியின் தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட, 35-வது வார்டு முத்தமிழ் நகர் பகுதியில் மத்திய அரசு நிதியில் ரூ.22 லட்சம் செலவில் நவீன உடற்பயிற்சிக் கூடம் கட்டப்பட்டது. அதை அப்போதைய துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த உடற்பயிற்சி கூடத்தை பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் பணியாளர்களை நியமிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அந்த உடற்பயிற்சி கூடம் ஆடுகளை அடைக்கும் கூடமாக மாறியது. பின்னர் அந்த வார்டின் அதிமுக மாமன்ற உறுப்பினர் இறந்த நிலையில், அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது மகன் டேவிட் ஞானசேகரன் வெற்றிபெற்றார். அவர், உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட முயற்சித்தார்.

இந்நிலையில் 35-வது வார்டு இடம்பெற்ற பெரம்பூர் தொகுதி யில் அதிமுக சார்பில் பி.வெற்றிவேல் எம்எல்ஏவாக வெற்றிபெற்றார். டேவிட் ஞானசேகரன், வெற்றிவேலின் ஆதரவாளராக இல்லாத காரணத்தால், அங்குள்ள உடற்பயிற்சி கூடத்தை திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிந்த நிலையில், வெற்றிவேலின் எம்எல்ஏ பதவி மற்றும் அவர் அதிமுகவில் வகித்து வந்த வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதற்கு தீர்வு ஏற்பட்டால்தான் உடற்பயிற்சிக் கூடத்துக்கும் தீர்வு கிடைக்கும் என்று கூறப் படுகிறது.

இப்பிரச்சினைகளை காரணம் காட்டி, மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 4 ஆண்டுகளாக முத்தமிழ் நகர் உடற்பயிற்சிக் கூடத்தை பூட்டி வைத்துள்ளனர்.

இதனால் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். தாங்கள் அருகில் உள்ள வார்டுகளில் இயங்கும் உடற் பயிற்சிக் கூடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, உடற்பயிற்சிக் கூடத்தை உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x