Published : 05 Jan 2014 12:54 PM
Last Updated : 05 Jan 2014 12:54 PM
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கடந்த வாரம் தமிழக அரசியல் களத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் சில சமிக்ஞைகளைத் தெரிவிப்பதாக உள்ளன. குறிப்பாக அதிமுக அணி மட்டும் தெளிவாகியுள்ள நிலையில் மற்ற கட்சிகளின் கூட்டணி என்பது தேமுதிகவின் முடிவைப் பொறுத்தே அமையும் என்பது தெரிய வந்துள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாமகவின் பொதுக்குழு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டம் போன்றவை கடந்த வாரம் நடைபெற்றன. இவற்றையெல்லாம் விட ஜி.கே.வாசன் விஜயகாந்த் சந்திப்பு கடந்த வாரத்தின் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
தெளிவற்ற சூழல்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக மற்றும் பாஜக தலைமையிலான 3 அணிகள் அமைவது உறுதியாகிவிட்டது. ஆனால் காங்கிரஸ் நிலை என்னவென்பது தெரியவில்லை. இதனால் இந்த 3 அணிகளையும் தவிர்த்து காங்கிரஸ் நான்காவது அணி அமைக்குமா அல்லது இரு பிரதான கட்சிகளின் தலைமையிலான ஏதேனும் ஓரணியில் தன்னை இணைத்துக் கொள்ளுமா என்பதில் தெளிவு கிடைக்கவில்லை.
இந்த சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் திமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய 3 திசைகளிலிருந்தும் வரும் அழைப்பால் தேமுதிக எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. வாசன் விஜயகாந்த் சந்திப்பால் காங்கிரஸ் அணி தொடர்பான குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
மதிமுக நிலைப்பாடு தெளிவு
தமிழகத்தில் பாஜக அணியில்தான் மதிமுக இடம்பெறப் போகிறது என்பதை புத்தாண்டு தினமான புதன்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ. இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவின் நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டுள்ளது.
குழப்பிய பாமக
திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறி வரும் பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பாஜக கூட்டணியிலேயே பாமக இடம்பெறும் எனப் பரவலாகப் பேசப்பட்டு வரும் சூழலில், பாமகவின் பொதுக்குழுவில் பாஜகவும், அக்கட்சியின் தேர்தல் நாயகன் மோடியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாஜக அணிக்கு பாமக வருமா அல்லது இல்லையா என்ற குழப்பத்தையே பொதுக்குழு உருவாக்கியுள்ளது.
கடும் கிராக்கியில் தேமுதிக
திமுக அணியில் தேமுதிக இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. விரைவில் அவ்விரு கட்சிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பாஜக அணியில் தேமுதிக மற்றும் பாமகவை சேர்ப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதாக தெரிகிறது. பாமகவும், தேமுதிகவும் ஒரே அணியில் அங்கம் வகிக்க முடியுமா என்ற விவாதமும் நடந்து வருகிறது. இதற்கிடையே காங்கிரஸ் அணியில் தேமுதிக இடம்பெறுவதற்கான வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை.
எப்படியிருப்பினும் தேமுதிக எந்த அணியில் இடம்பெறும் என்பதைப் பொறுத்தே தமிழக கூட்டணி நிலவரமும் இறுதியாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போதைய தமிழக அரசியல் சந்தையில் தேமுதிகவுக்கான கிராக்கி மிகவும் கூடியுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி துளிர்க்கும் என்று இடிந்தகரை மண்ணில் இருந்து பிரஷாந்த் பூஷண் முழங்கியது, திமுக அணியில் நீடிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்தது, பாஜக அணியில் இடம்பெறுவதாக கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தின் அறிவிப்பு ஆகியவையும் கடந்த வாரத்தின் குறிப்பிடத்தக்க சில நிகழ்வுகளாக அமைந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT