Published : 23 Mar 2018 06:26 PM
Last Updated : 23 Mar 2018 06:26 PM
நியமன எம்எல்ஏக்கள் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின் அதிகாரபூர்வ நகல் கிடைத்தபின் தன்னுடைய முடிவை அறிவிப்பேன் என புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோருக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டில் திடீர் உத்தரவு வெளியிட்டது. இதையடுத்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, 3 நியமன எம்எல்ஏக்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், முறையாக நியமனம் செய்யப்படவில்லை எனக் கூறி அந்த 3 பேரையும் சபாநாயகர் வைத்திலிங்கம் எம்எல்ஏக்களாக ஏற்க மறுத்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து 3 பேரின் நியமன எம்எல்ஏ பதவி செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து சால்வை அணிவித்த பின்னர் உயர் நீதிமன்ற தீர்ப்பினை காண்பித்தனர். வரும் 26-ம் தேதி கூட்டப்படும் சட்டப்பேரவையில் அனுமதிக்க அவரிடம் கோரியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பேரவைக்குள் மூவரும் அனுமதிக்கப்படுவார்களா என்று சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:
''நியமன எம்எல்ஏக்கள் தொடர்பாக இதுவரை அதிகாரபூர்வமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக தனக்கு கிடைக்கவில்லை. நகல் கிடைத்த பின் அதனை பரிசீலனை செய்து தன்னுடைய முடிவை தெரிவிக்கின்றேன். தீர்ப்பு தொடர்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் வந்து சந்தித்துச் செல்கின்றனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் போது 144 தடை உத்தரவு போடப்படுவது வழக்கம். அதை காவல்துறையினர் கவனித்துக்கொள்வர். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டிற்காக சிறப்பாக கூட்டப்பட்டது. அதனால் ஆளுநர் உரை இல்லை. தற்போது அப்படி இல்லை. அதனால் ஆளுநர் உரை உள்ளது" என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT