Published : 12 Mar 2018 04:25 PM
Last Updated : 12 Mar 2018 04:25 PM
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உத்தரவின்படி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை வீடியோ பதிவின் மூலம் நீதிமன்றத்தில் அபராதம் கட்டும் புதிய திட்டத்தை போக்குவரத்து போலீஸார் இன்று முதல் தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரியில் போக்குவரத்து வீதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்குபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்குபவர்களால் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி போக்குவரத்து போலீஸாருடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
போக்குவரத்து விதிமீறல் இருந்தால், மீறி வாகனம் ஓட்டுபவர்களை நிறுத்த வேண்டாம். அதற்கு பதிலாக பணியில் உள்ள போக்குவரத்து காவலர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து விதிமீறல் குறித்து சம்பந்தப்பட்டவருக்கு புகார் அனுப்பி, பின்னர் போக்குவரத்து விதிமீறல் குறித்து அவர் மீது நீதிமன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென போக்குவரத்து போலீஸாருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
ஆளுநர் கிரண்பேடியின் உத்தரவின்படி புதுச்சேரியிலுள்ள அனைத்து சிக்னல்களிலும் செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்குவது, 3 நபர்களை இரு சக்கரவாகனத்தில் ஏற்றிச் செல்வது, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் வாகன எண்ணை வீடியோ பதிவு செய்யும் பணியை போக்குவரத்து போலீஸார் இன்றுமுதல் தொடங்கியுள்ளனர். மேலும் விதிமீறல் படிவத்தில் பதிவு செய்து நீதிமன்றத்தின் மூலம் அபராதம் கட்டுவதற்கான பணியை போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT