Published : 03 Sep 2014 09:10 AM
Last Updated : 03 Sep 2014 09:10 AM
“கட்சியில் அழகிரி, ஸ்டாலின் மற்றும் ஒவ்வொரு தொண்டருக்கும் இருக்கும் உரிமை எனக்கும் இருக்கிறது. எந்தக் காரணத்தாலும் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க முடியாது’’ என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் கனிமொழி கோபத்துடன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவில் ஸ்டாலின் கனிமொழி இடையிலான உரசல் நாளுக்குள்நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நாமக்கல்லில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ‘2ஜி வழக்கில் தொடர்புடையவர்கள்’ என்று கனிமொழியை விமர்சித்ததாக செய்திகள் வெளிவந்தன. வரும் 5-ம் தேதி நடக்கவுள்ள திமுக இளைஞரணி கூட்டத்திலும் ‘2ஜி வழக்கில் தொடர்பு உடையவர்கள் கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்; திமுக பொருளாளர் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஸ்டாலினின் ஆதரவாளர்கள் எழுப்ப இருப்பதாகத் தெரிகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்த கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து கோபமாக பேசியதாக கட்சியினர் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
தலைவரை கனிமொழி சந்தித்தபோது, இதுவரை இல்லாத அளவுக்கு கொந்தளித்து பேசினார். ‘கட்சித் தலைவராக நீங்கள் பொறுப்பில் இருக்கும்போதே 2ஜி விவகாரத்தை காரணம் காட்டி கட்சியில் இருந்து என்னை ஓரம்கட்ட திட்டமிடுகின்றனர். வெளியூர்களில் நடக்கும் கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் அதிகாரப்பூர்வமாகவே இதைப் பேசுகின்றனர். ஆனால், 2ஜி விவகாரத்தில் என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என்பதும், அதில் எனக்கு தொடர்பு இல்லை என்பதும் கட்சியில் அனைவருக்கும் தெரியும். இப்போது அதையே காரணம் காட்டி, என்னை கட்சியில் இருந்து ஓரம்கட்ட நினைக்கிறார்கள். இதற்கு மேலும் அவமானத்தை தாங்கிக்கொள்ள இயலாது. அமைதியாக இருப்பதை எனது பலவீனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். கட்சியில் அழகிரிக்கு, ஸ்டாலினுக்கு, ஒவ்வொரு தொண்டருக்கும் என்னென்ன உரிமைகள் இருக்கிறதோ அதே உரிமை எனக்கும் இருக்கிறது. இதை யாராலும் பறிக்கவோ, கட்சியில் எனது அரசியல் நடவடிக்கைகளை தடுக்கவோ முடியாது‘ என்று கூறியுள்ளார்
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய ஸ்டாலின் ஆதரவாளர்கள், “40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கும் ஸ்டாலின் முக்கியமா? சில ஆண்டுகள் மட்டுமே அரசியல் செய்யும் அழகிரி, கனிமொழி முக்கியமா? 1967-ல் பள்ளி மாணவராக இருந்தபோது ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார், பள்ளி மாணவியாக கனிமொழி இருந்தபோது என்ன செய்துகொண்டிருந்தார் என்பது தலைவருக்கு தெரியாதா? ஸ்டாலின் கட்சிக்காக மட்டுமே சிறைக்கு சென்றிருக்கிறார். ஊழல் வழக்குகளில் அல்ல. எனவே, ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கோரி இளைஞர் அணி கூட்டத்தில் வலியுறுத்துவோம். அதேபோல், ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்களை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கவும் வலியுறுத்துவோம். இதில் என்ன தவறு இருக்கிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT