Published : 03 Sep 2014 10:43 AM
Last Updated : 03 Sep 2014 10:43 AM
தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.5 கோடியாக இருந்தது. தேர்தலுக்குப் பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மனுக்கள் தொடர்ந்து பெறப்பட்டுவருகின்றன. இதனால், பல வாக்குச்சாவடிகளில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைவிட வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. வாக்காளர்களின் இடம்பெயர்வு காரணமாகவும் சில வாக்குச்சாவடிகளில் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளை சீரமைக்கும் பணி கடந்த மாதத்தில் தொடங்கி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் தமிழக தேர்தல் துறையினர் தெரிவித்ததாவது:
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் வாக்குச்சாவடிகள் இருந்தன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புதிய வாக்காளர்கள் சேர்க்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தேர்தலின்போது மேலும் 10 ஆயிரம் வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. இதனால், மொத்த எண்ணிக்கை 60,417 ஆக அதிகரித்தது.
வாக்குச்சாவடி சீரமைப்பு
ஒரு வாக்குச்சாவடியில், நகரப்பகுதியாக இருந்தால் அதிகப்பட்சம் 1,400 வாக்காளர்களுக்கு மிகாமலும், கிராமப்புறமாக இருந்தால் 1,800 வாக்காளர்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு ஏராளமானோரின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் வாக்குச்சாவடிகளை சீரமைக்க வேண்டியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டு புதிய வாக்குச்சாவடி களை உருவாக்குவது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆகியோர் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தகவல்களைத் திரட்டி அனுப்பி வருகின்றனர்.
3,000 புதிய வாக்குச்சாவடிகள்
இதில், இதுவரை 15 மாவட்ட ஆட்சியர்கள், தங்களது மாவட்டங்களில் எந்தெந்த வாக்குச்சாவடியை பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்ற பட்டியலை அனுப்பிவிட்டனர். சென்னை போன்ற அதிக வாக்காளர்களைக் கொண்ட பெரிய மாவட்டங்களில் இருந்து தகவல் இன்னும் சில நாட்களில் வந்துவிடும். அவை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஆணையம் ஒப்புதல் தந்ததும் புதிய வாக்குச்சாவடிகளின் விவரம் வெளியிடப்படும்.
இதன்படி, தமிழகத்தில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை குறைந்த பட்சம் 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் வரை அதிகரிக்கக்கூடும். வாக்குச்சாவடிகள் அதிகரிப்பதால் வாக்காளர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே எளிதில் வாக்களிக்க முடியும். சில இடங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும்கூட அந்த வாக்குச்சாவடிகள் ரத்து செய்யப்படாமல் தொடர்ந்து செயல்படும். எனவே, வாக்காளர்கள் முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் போன்றவற்றை செய்ய வேண்டியிருந்தால் உடனடியாக செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சென்னைக்கு 369 வாக்குச்சாவடிகள்
சென்னை மாவட்ட தேர்தல் துறையினரிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் மொத்தமுள்ள 3,337 வாக்குச்சாவடிகளில் 657 வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்யவேண்டியுள்ளது. 369 புதிய வாக்குச்சாவடிகளை உருவாக்க பரிந்துரைகளை அனுப்ப உள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலின்போது சென்னையில் 83 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டன’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT