Published : 09 Mar 2018 01:04 PM
Last Updated : 09 Mar 2018 01:04 PM
கொத்துக் கொத்தாக செத்து மடிந்த விவசாயிகளைப் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படத்தை வாழ்த்தியுள்ளார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
விவசாயம் செய்ய வழியில்லாமல் கடந்த பல வருடங்களாகவே விவசாயிகள் மரணமடைந்து வருகின்றனர். அதுவும் தமிழகத்தில் கடந்த வருடம் கொத்துக் கொத்தாக பல விவசாயிகள் செத்து மடிந்தனர். அதை, ‘கொலை விளையும் நிலம்’ என்ற ஆவணப்படமாக எடுத்துள்ளார் பத்திரிகையாளர் ராஜீவ்காந்தி.
இந்தப் படத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, அற்புதம் அம்மாள், போராளி வளர்மதி, இயக்குநர் சுப்ரமணிய சிவா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வப்பெருந்தகை, ஆம் ஆத்மி கட்சி சுதா, நடிகர் அபி சரவணன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் தன்னுடைய ட்விட்டரில் இந்த ஆவணப் படத்தைப் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், திமுகவின் செயல் தலைவரன மு.க.ஸ்டாலினும் தன்னுடைய ட்விட்டரில் இந்த ஆவணப் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
“நெல் விளையும் நிலத்தில் புல் விளையக்கூட நீரில்லாத நிலையில், இன்றைய அரசின் அலட்சியத்தால் நம் டெல்டா நிலம் ‘கொலை விளையும் நிலம்’ எனும் அவலத்திற்கு உள்ளாகியிருப்பதை இரத்தமும் சதையுமான உயிரோட்டத்துடன் காட்சிப்படுத்தியுள்ள இளைஞர்களை வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT