Published : 09 Mar 2018 08:54 AM
Last Updated : 09 Mar 2018 08:54 AM

திருச்சி விபத்தில் கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம்: ஹெல்மெட் வழக்கு இலக்குதான் விபத்துகளுக்கு காரணமா?

திருச்சி மாநகர் மற்றும் மாவட்டப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வோரை பிடித்து அபராதம் வசூலிக்க உயர் அதிகாரிகள், ஒவ்வொரு உதவி ஆய்வாளருக்கும் இலக்கு நிர்ணயித்ததே வாகன சோதனையின்போது ஏற்படும் விபத்துகளுக்கும் அன்றாடம் நிகழும் பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்து ஏற்படும் தலையில் அடிபட்டுதான் உயிரிழக்கின்றனர்.

எனவே, ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது.

இதற்கு முன்பு எப்போதாவது நடைபெற்றுவந்த இந்த சோதனைகள், உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் தீவிரமடையத் தொடங்கியது.

இந்நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையராக ஏ.அமல்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கல்யாண் ஆகியோர் பொறுப்பேற்ற பின்னர், மாநகர் மற்றும் மாவட்டப் பகுதிகளில் ஹெல்மெட் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்வோர், போலீஸாரின் சோதனைக்குப் பயந்து, வேகமாகச் செல்வதும், போலீஸார் அவர்களை விரட்டுவதும் தொடர்கதையானது.

நடந்து சென்ற பெண் பலி

திருச்சி பாலக்கரை பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸாரை கண்டு பயந்து, வேகமாக வண்டியை ஓட்டவே அப்போது சாலையில் நடந்து சென்ற ஒரு பெண் மீது மோதியதில் அப்பெண் இறந்த சம்பவம் சமீப கால உதாரணம்.

இதேபோல சமீபத்தில் திருச்சி அரிஸ்டோ பாலத்துக்கு அடியில் போலீஸார் சோதனையில் ஈடுபடுவதைப் பார்த்த இளைஞர்கள் 2 பேர் வண்டியை வேகமாக திருப்பிக் கொண்டு செல்ல முயன்றபோது, சாலையில் நடந்து சென்ற ஒரு பெண் உள்ளிட்ட 2 பேர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர்.

2 மாணவர்கள் மீது தாக்குதல்

இதேபோன்று, கடந்த 15 நாட்களுக்கு முன்பு வயலூர் சோதனைச்சாவடியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேரை பிடித்த போலீஸார், அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது போலீஸார் லேசான தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதைத் தொடர்ந்து, தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டதை அடுத்து பிரச்சினைக்குக் காரணமான காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில்தான், தஞ்சாவூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு தனது 3 மாத கர்ப்பிணி மனைவி உஷாவுடன் வந்த ராஜா என்பவரை நேற்று முன்தினம் இரவு நிற்காமல் சென்றதாகக் கூறி போக்குவரத்து ஆய்வாளர் அவரைத் துரத்தி சென்ற சம்பவத்தில், உஷா மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து இறந்தார்.

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியலால் திருச்சி - தஞ்சாவூர் சாலை போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டது. சுமார் 6 கி.மீ தொலைவுக்கு வாகனப் போக்குவரத்து நடைபெறாமல் துவாக்குடி பகுதி மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டது. இநிலையில், இரவு 11 மணியளவில் தடியடி நடத்தி பொதுமக்களை போலீஸார் கலைத்தனர். இதில், பொதுமக்கள் 15 பேர் காயமடைந்தனர்.

போலீஸாருக்கும் காயம் எனத் தெரிவிக்கப்பட்டது. போலீஸாரின் வாகனங்களை கல் வீசித் தாக்கியதாக சிலரைப் போலீஸார் பிடித்துச் சென்றனர்.

தினமும் 50 வழக்குகளைப் பதிவு செய்ய இலக்கு?

ஒவ்வொரு காவல் உதவி ஆய்வாளரும் தினமும் ஹெல்மெட் மற்றும் கார் சீட் பெல்ட் அணியாதவர்கள், போக்குவரத்து விதிகளை மீறுவோர், ஆவணங்கள் இன்றி வாகனத்தை ஓட்டிச் செல்வோர், மது அருந்திச் செல்வோர் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 50 வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டுமென உயரதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த உத்தரவுதான் போலீஸாரின் இத்தகைய கெடுபிடிகளுக்கு முக்கிய காரணம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

மாவட்ட காவல்துறையில் ஹெல்மெட் வழக்குகளில் இலக்கை எட்டாத சில உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதும் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

போலீஸாரின் இந்த கெடுபிடிகள் காரணமாக நாள்தோறும் பல்வேறு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து மத்திய மண்டல காவல்துறை ஐஜி வரதராஜு, எக்காரணம் கொண்டும் இலக்கு வைத்து வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவை பிறப்பித்தார். ஆனாலும், ஐஜியின் உத்தரவை மாநகர மற்றும் மாவட்ட போலீஸார் முறையாக கடைபிடிக்கவில்லை என்பதற்கு நேற்று முன்தினம் இரவு திருவெறும்பூரில் நடைபெற்ற சம்பவமே பெரும் சாட்சியாக அமைந்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x