Last Updated : 15 Mar, 2018 06:06 PM

 

Published : 15 Mar 2018 06:06 PM
Last Updated : 15 Mar 2018 06:06 PM

அபாய கட்டத்தில் தமிழக அரசின் கடன் சுமை: பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

தமிழக அரசின் கடன் சுமை 3.55 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பிட்டுள்ள நிலையில், இது அபாயகரமான அளவில் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அரசின் திட்டச் செயல்பாடுகளுக்கு நிதி ஒதுக்கவும் புதிய திட்டங்களுக்காகவும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் ஆண்டுதோறும் மார்ச் மாதத்துக்குள் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

அதன்படி, 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். துணை முதல்வரான பின் அவர் தாக்கல் செய்யும் முதல் பட் ஜெட் இதுவாகும். அதேநேரம், முதல்வர் பழனிசாமி அரசின் 2-வது பட்ஜெட் இது.

இந்த பட்ஜெட்டில் பல்வேறு வருவாய் துறைக்கு 6.144 கோடி ரூபாய், குடிமராமத்து பணிகளுக்கு 300 கோடி ரூபாய், நெடுஞ்சாலை துறைக்கு 11,073.66 கோடி ரூபாய், பள்ளி கல்விதுறைக்கு.27.205.88 கோடி ரூபாய் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

தமிழக அரசின் கடன் சுமை 3.55 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில், கணக்கிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை ரூ. 44,480 கோடியாக இருக்கும் எனவும், வருவாய் பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிடிபியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் கடன் பெறுவதால் கடன் சுமை உயர்கிறது. நிதிச்சுமையும், கடன் பற்றாக்குறையும் கட்டுக்குள் இருப்பதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த கடன் சுமை அதிகம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுபற்றி பொருளாதார நிபுணர் கெளரி ராமசந்திரன் கூறியதாவது:

‘‘தமிழக பட்ஜெட்டில் வேளாண்மை துறை பற்றிய பெரிய அறிவிப்புகள் இல்லை. சிறு குறு தொழில்கள், சேவை துறைகளை பற்றிய அறிவிப்புகள் இல்லை. இதனால் வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும். சர்வதேச முதலீடுகள் பற்றி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஆனால், அவை செயல்பாட்டிற்கு வருவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.

மாநிலத்தின் ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக உயரும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கடன் சுமை அதிகமாக உள்ள நிலையில் இவற்றை எட்டுவதற்கு வாய்ப்பு குறைவே.

கடன் சுமை பற்றிய அறிவிப்பு கவலைக்குரியதாக உள்ளது. நிதிச்சுமையும், கடன் பற்றாக்குறையும் கட்டுக்குள் இருப்பதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தநேரத்திலும் வரையறை எல்லையை தாண்டி செல்லக்கூடிய ஆபத்து உள்ளது. கடன் சுமை அபாய கட்டத்தில் இருப்பதால் அரசு கவனத்துடன் இருக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

பொருளாதார நிபுணர் சோம. வள்ளியப்பன் கூறியதாவது:

‘‘தமிழக அரசின் கடந்த பட்ஜெட்டின், நகல் பட்ஜெட்டாகவே இது உள்ளது. சில கவர்ச்சிகரமான திட்டங்கள் இருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும், கடந்த பட்ஜெட்டில் இருந்து பெரிய மாற்றங்கள் இல்லை. கடன் சுமை அதிகரிப்பதாக கூறப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்துள்ளது ஆறுதல் அளிக்கும் அம்சம். மாநிலத்தின் ஜிடிபி 9 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு உயர்ந்தால் மகிழ்ச்சி’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x