Last Updated : 16 Mar, 2018 03:41 PM

 

Published : 16 Mar 2018 03:41 PM
Last Updated : 16 Mar 2018 03:41 PM

அளவுக்கு அதிகமாய் ஆசைப்படுகிறோமோ..? - தமிழக பட்ஜெட் குறித்து கமல் கருத்து

நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

2018 – 2019 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதை விமர்சனம் செய்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

''2018 – 19 தமிழக பட்ஜெட். எம் விமர்சனத்தை சொல்ல சில சிற்றாய்வுகள் செய்ய வேண்டி இருந்தன. ஆதலால் இந்த தாமதம். நிதிநிலை அறிக்கை பற்றிய எம் கருத்து'' என்று பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன். அவரின் விமர்சனம் இதோ...

நிதிநிலை அறிக்கை : முதலில் தோன்றும் ‘குறளை’த் தவிர, இந்த நிதிநிலை அறிக்கை பெரும்பாலும் சென்ற ஆண்டுகளின் நகலே. விவசாயிகள், நெசவாளர், மீனவருக்கு சிறப்பான திட்டம் ஏதும் இல்லை. எம் தமிழ் மக்களின் வருங்காலத்தை வடிவமைக்க இதைவிட சிறந்த பிரதிநிதிகள் தேவை.

வேலைவாய்ப்பு : தமிழகத்தில் வேலை தேடுபவர்கள் ஒரு கோடிக்கும் மேல். அதில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள். ஆனால், நிதிநிலை அறிக்கைப்படி கடந்த 7 ஆண்டுகளில் வெறும் 4 லட்சம் இளைஞர்களே திறன் பெற்றனர். அதிலும் 1 லட்சம் இளைஞர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர். திறன் மேம்பாடு எங்கே? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எங்கே?

‘அத்திக்கடவு - அவினாசி’ திட்டம் : மேற்கு தமிழகத்தினர் ‘அத்திக்கடவு - அவினாசி’ திட்டம் தங்களுக்கு நீர் வழங்குமென பல ஆண்டுகளாய் வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கின்றனர். இம்முறை அறிவித்த 250 கோடியும், சென்ற வருடம் அறிவித்த அதே தொகையைப் போல் கானல் நீராய் ஆகிவிடுமோ?

‘குடிமராமத்து’ : ‘குடிமராமத்து’ என்ற பாரம்பரிய நீர்நிலை மேம்பாட்டிற்கு 300 கோடி ஒதுக்கீடு. சென்ற வருடமும் அதே தொகையைத்தான் ஒதுக்கினார்கள். அந்த தொகை எங்கே செலவிடப்பட்டது என்ற விளக்கம் கிடைக்குமா?

பள்ளிக் கல்வி : 27000 கோடி ரூபாய் பள்ளிக் கல்விக்கு செலவழித்த பின்னும், எம் பிள்ளைகள் தேசிய சராசியைவிட எல்லா பாடங்களிலும் பின்தங்கியிருக்கிறார்கள், தமிழ் உட்பட! இதுதான் அமைச்சர் மார்தட்டிக் கொள்ளும் தரமான கல்வியா? எங்களுக்கு செலவீடல்ல, நல்ல விளைவுகளே தேவை.

தொழில் வளர்ச்சி : 2015இல் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான 2.45 லட்சம் கோடி ரூபாயில் 62,738 கோடியே செயல்படுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 2019-ல் உலக முதலீட்டாளர்களை அழைப்பதற்கு முன் தமிழ்நாட்டில் தொழில்புரிவோருக்கு ஊழலும், தாமதமுமின்றி உரிமங்கள் வழங்கட்டும் இந்த அரசு.

நகர மேம்பாடு : ஜனாக்ரஹா நிறுவனம் நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பில், சென்னை மாநகரம், இந்தியாவின் 23 நகரங்களில் கடைசி 5 இடங்களில் இருக்கிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட 500 கோடி ரூபாய், அதை உயர்த்த உதவட்டும். அளவிற்கு அதிகமாய் ஆசைப்படுகிறோமோ?

இந்து சமய அறநிலையத் துறை : என் பகுத்தறிவு ஒருபுறம் இருக்கட்டும். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், இந்து சமய அறநிலையத் துறை பற்றி எந்த அறிவிப்பும் இல்லையே... ஏன்? காணாமல் போன ஆயிரம் சிலைகளைப் போல், துறையும் காணாமல் போய்விட்டதோ?

வக்ஃப் போர்டு : வக்ஃப் போர்டு தேர்தலை திடீரென ரத்து செய்தது தமிழக அரசு. தேர்தலையே சரிவர நடத்தாத அரசு, நிதிநிலை அறிக்கையில் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றும் என சிறுபான்மையினர் எப்படி நம்புவர்?

கடன் : ஒவ்வொரு தமிழரும் தலையில் சுமக்கும் கடன் 45,000 ரூபாய். எட்டு ஆண்டுகளில் மும்மடங்காக்கிய ஆள்பவர்க்கு எங்கள் கண்ணீரில் நனைந்த கண்டனம்'' என்று கமல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x