Published : 28 Sep 2014 10:56 AM
Last Updated : 28 Sep 2014 10:56 AM

இல்லறவியல் பாடி திருமணம்.. மகப்பேறு அதிகாரம் பாடி வளைகாப்பு..: திருக்குறள் போதிக்கும் ‘குறளகம்’ விஸ்வநாதன்

“வருங்கால சந்ததி தமிழை மறந்துவிடக் கூடாது குறள் வழிச் சிந்தனை மேலோங்கினால் வன்முறைகள் குறையும், பாலியல் வன்முறைகள் ஒழியும், நல்ல பண்புகள் வளரும் அதற்காகத்தான் இந்தக் குறளகத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன்’’ என்கிறார் விஸ்வநாதன்.

நாகர்கோவிலைச் சேர்ந்த விஸ்வநாதன் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் கோட்டப் பொறியா ளராக இருந்து ஓய்வுபெற்றவர்.

இயல்பாகவே தமிழ் ஆர்வம் கொண்ட இவர், பிள்ளைத் தமிழ் நூல்கள் உட்பட 7 நூல்களை தமிழ்குழலி என்ற புனைப்பெயரில் எழுதி இருக்கிறார்.

2010-ல் தொடங்கப்பட்ட இவரது குறளகம், பள்ளி மாணவர்களுக்கு திருக்குறளின் மகத்துவத்தை சொல்லித் தந்து கொண்டிருக்கிறது.

அதுகுறித்து விஸ்வநாதனே நம்மிடம் பேசுகிறார். ‘‘திருவாசகம், திருக்குரான், பைபிள் இவை எல்லாமே குறிப்பிட்ட எல்லைக்குள்தான் நன்னெறியை போதிக்கின்றன. திருக்குறள் வாழ்வியல் சார்ந்து நன்னெறியை போதிக்கிறது.

ஆனால், இது ஆங்கில ‘ரைம்ஸ்’ காலம் என்பதால் நமது பிள்ளைகளுக்கு ‘அறம் செய விரும்பு’ எல்லாம் தெரிய வில்லை. திருக்குறளில் உள்ள பெரும்பான்மையான அதிகா ரங்கள் மாணவர்களை நல்வழிப் படுத்துகின்றன.

திருக்குறள் படித்தால் குழந்தைகள் நல்லொழுக்கம் உள்ளவர்களாக வளர்வார்கள். அவர்களிடம் தவறான சிந்தனைகளுக்கு வழி இருக்காது.

அத்தகைய மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதற் காகத்தான் குறளகத்தைத் தொடங்கி னேன்.

குறளகத்தில் ஞாயிறுதோறும் காலை 10 மணியிலிருந்து 2 மணி வரை அதிகாரம் வாரியாக திருக்குறளை பொருள் விளங்கச் சொல்லிக்கொடுப்பேன். வாரம் ஒரு அதிகாரம் எடுத்துக் கொள்வேன். என்னிடம் திருக்குறள் படிக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு திருக்குறளில் உள்ள அத்தனை குறட்பாக்களும் பொருள் விளங்கத் தெரிந்திருக்கும்.

1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் குழந்தைகளுக்கு தமிழக அரசு குறள் விருது வழங்கி வருகிறது. குறளகம் ஆரம்பித்த வருடமே எங்களுடைய குழந்தைகள் 3 பேர் அந்த விருதைப் பெற்றார்கள். இந்த ஆண்டு 5 குழந்தைகளை தயார்படுத்தி வைத்திருக்கிறோம். நிச்சயம் அவர்களும் குறள் விருதை பெறுவார்கள்.

இது மாத்திரமில்லாமல், பிப்ரவரி மாதத்தில் திருக்குறள் விழா நடத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் திருக்குறள் போட்டிகளை நடத்துவோம்.

இந்த விழாவின்போது, தமிழ் பெயர் வைத்த எல்.கே.ஜி., யு.கே.ஜி. பிள்ளைகள் 5 பேருக்கு பரிசு கொடுப்போம். இதில் வேதனை என்னவென்றால் மாவட்டம் முழுமைக்கும் தேடினாலும் தமிழ் பெயர் கொண்ட 5 குழந்தைகள் கிடைப்பதில்லை.

குறளகத்தின் சார்பில் திருக்குறள் திருமணங்களையும் நடத்தி வைக்கி றோம்.

திருக்குறளில் உள்ள இல்லறவியல் சம்பந்தப்பட்ட 24 அதிகாரங்களையும் எங்கள் குழந்தைகள் படிக்க.. அந்தத் திருமணம் நடக்கும். இப்படி இதுவரை 2 திருமணங்களை நடத்தி இருக்கிறோம். அதில் ஒரு பெண்ணுக்கு, மகப்பேறு அதிகாரத்தில் உள்ள 10 பாடல்களைப் பாடி வளைகாப்பும் நடத்திவிட்டோம்.

குறளகத்துக்கு வரும் குழந்தைகள், வீட்டில் ‘மம்மி, டாடி’யை தவிர்த்து ‘அம்மா, அப்பா’ என்று அழைக்க வேண்டும். முடிந்தவரை தமிழில் பேச வேண்டும் என்று சொல்கிறோம்.

ஆனால், ஆங்கில மோகத்தில் இருக்கும் பெற்றோர் இதை விரும்பவில்லை. அதனால், தொடக்கத்தில் 40 குழந்தைகள் வந்து கொண்டிருந்த நிலை மாறி இப்போது 16 குழந்தைகள்தான் குறளகம் வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் தமிழுக்கு வந்த சோதனையைப் பார்த்தீர்களா?’’ ஆதங்கத்துடன் முடித்தார் விஸ் வநாதன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x