Published : 04 Mar 2018 11:48 AM
Last Updated : 04 Mar 2018 11:48 AM
தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்தில் புதிதாக இயக்கப்படும் மின்சார ரயில்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் 3 புதிய ரயில் கள் இணைக்கப்பட உள்ளன.
காலத்துக்கு ஏற்றவாறு ரயில்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் இயங்கும் முக்கிய ரயில்களில் பழைய ரயில் பெட்டிகளுக்கு பதிலாக சொகுசு வசதி கொண்ட எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், புதிய வகை மின்சார ரயில்களை இயக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
பெரம்பூரில் உள்ள இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) கடந்த ஆண்டில் தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட 3 புதிய வகை மின்சார ரயில்கள் தெற்கு ரயில்வேக்கு சமீபத்தில் வழங்கப்பட்டன. இந்த ரயில்கள் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்ட்ரல் ரயில் நிலையம் - அரக்கோணம் இடையே இயக்கப்படுகின்றன. குறிப்பாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான புதிய வகை மின்சார ரயில், தினமும் 9 முறை இயக்கப்படுகிறது.
இந்த மின்சார ரயிலில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ரயில் பெட்டிகள் முழுவதும் துருப்பிடிக்காத ஸ்டெயின்லஸ் ஸ்டீலால் அமைக்கப்பட்டுள்ளது. எடை குறைவாக இருப்பதால் வேகமாகவும், அதிர்வுகள் இல்லாமலும் செல்கிறது. மேலும் இந்த ரயிலில் எல்இடி விளக்குகள், பயணிகளுக்கு தகவல் அளிக்கும் ஜிபிஆர்எஸ் கருவிகள், பெண்கள் பெட்டியில் கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மேலும் விமானத்தில் இருப்பதுபோல், கருப்புப் பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுபற்றி பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘மற்ற மின்சார ரயில்களில் பயணம் செய்வதைக் காட்டிலும், இந்த புதிய வகை மின்சார ரயிலில் பயணம் செய்யும்போது நன்றாக இருக்கிறது. சொகுசான இருக்கை, நல்ல காற்றோட்ட வசதி, அதிக அதிர்வு மற்றும் சத்தம் இல்லாமல் பயணம் செய்வதை உணர முடிகிறது. இதுபோன்ற புதிய வகை மின்சார ரயில்களை அதிக அளவில் இயக்கினால் நன்றாக இருக்கும்” என்றனர்.
இதுதொடர்பாக ஐசிஎப் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘எல்இடி விளக்குகள், பயணிகளுக்கு தகவல் அளிக்கும் தொழில்நுட்பம், அகலமான ஜன்னல்கள் உட்பட 7 சிறப்பு அம்சங்களைக் கொண்ட புதிய வகை மின்சார ரயில்கள் சமீபத்தில் தெற்கு ரயில்வேயிடம் அளிக்கப்பட்டு, தற்போது சென்னை கோட்டத்தில் இயக்கப்படுகின்றன. பயணிகளிடையே இந்த மின்சார ரயில்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மேலும், 3 புதிய ரயில்களைத் தயாரிக்கும் பணிகள் தற்போது, நடந்து வருகின்றன. வரும் ஜூன் மாதத்துக்குள் இந்த ரயில்கள் தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT