Published : 07 Mar 2018 06:55 PM
Last Updated : 07 Mar 2018 06:55 PM

மதக் கலவரம் பரவுவதை தடுக்க இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்

இலங்கையில் மதக் கலவரம் பரவுவதை தடுக்க அந்நாடு முழுவதும் பேஸ்புக், வாட்ஸ் அப், வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கடந்த வாரம் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் அம்பாரா பகுதியில் முஸ்லிம்கள் மீது புத்த மதத்சைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் முஸ்லிம்கள் நடத்தி வந்த கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மீது வன்முறைக் கும்பல் தாக்கி சேதப்படுத்தினர்.

தொடர்ந்து கண்டியில் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள், கடைகள், வீடுகளுக்கு தீவைத்து எரிக்கப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவியது. இந்தக் கலவரத்தில் முதியவர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து கண்டி நகரில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். .

கலவரத்தைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) கொழும்பில் அவசர அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவில் நாட்டில் மதக் கலவரத்தையும், வகுப்புவாதம் பரவுவதையும் தடுக்க அடுத்த 10 நாட்களுக்கு அவசர நிலையை பிரகரடனப்படுத்த முடிவு எடுக்கப்பட்டு, அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது.

புதன்கிழமை இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்ட நிலையிலும் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சில சம்பவங்கள் நடந்துள்ளதால் கண்டியிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடிய நிலையிலேயே உள்ளன.

இந்நிலையில் இலங்கை முழுவதும் பேஸ்புக், வாட்ஸ் அப், வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை மதக் கலவரங்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில் அரசு முடக்கியுள்ளது. இது குறித்து இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, ''வெறுப்புணர்வுப் பிரசாரங்களை கட்டுப்படுத்துவதற்காகவே சமூக முடக்குவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது'' என தெரிவித்தார்.

அவசர நிலையின் போது இலங்கையில் உள்ள இந்திய பிரஜைகள் தமது நாட்டு தூதரகத்தை உதவிக்கு அணுக வேண்டும் என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் வேண்டுகோள்

இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான குமார சங்ககார, மகில ஜெயவர்தன, சனத் ஜெயசூரிய ஆகியோர் தங்களின் ட்விட்டர் சமூக வலைதளங்களில் கலவர சம்பவங்களை கண்டித்ததுடன், அனைவரும் அமைதியாகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x