Published : 24 Jan 2014 12:00 AM
Last Updated : 24 Jan 2014 12:00 AM
“இனி, நாங்கள் அதிமுக, திமுக நிழலில்கூட ஒதுங்க மாட்டோம்’’ என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பூர்வாங்கப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பாஜக குழுவினர் நேற்று மதிமுக தலைமையகம் வந்தனர். முன்னதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் பொன்.ராதாகிருஷ்ணனும் தனியாக அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
வாஜ்பாயை நினைவுகூர்ந்த வைகோ
அதன்பிறகு, பாஜகவின் மற்ற நிர்வாகிகள் மத்தியில் பேசிய வைகோ, ’’ஈழத் தமிழர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தது வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சிதான். நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் 51 சதவீத பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என கோரிக்கை வைத் தேன். அதனால், வாஜ்பாய் அந்த முடிவைக் கைவிட்டார். என்மீது அவருக்கு எப்போதும் அளவு கடந்த பிரியம் உண்டு. 2000-மாவது ஆண்டு எனது பிறந்த நாளின் போது நான் கலிங்கப்பட்டியில் இருந்தேன். அப்போது என்னை வாஜ்பாய் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்னது என் நெஞ்சில் பசுமையாய் நிழலாடுகிறது.
மோடி அரசு ஐந்தாண்டுகள் நீடிக்க வேண்டும்
தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் வாஜ்பாய் அரசு செய்த உதவிகளையும் தந்த திட்டங்களையும் நாங்கள் நன்றியோடு எண்ணிப் பார்க்கிறோம். மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமையப்போவது நிச்சயம் அந்த ஆட்சி ஐந்தாண்டுகள் முழுமையாக நீடிக்க வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம்’’ என்று வைகோ கூறினார்.
வைகோவுக்கு அழைப்பு
’’இனி ஒருமுறை நாங்கள் திமுக, அதிமுக நிழலில் கூட ஒதுங்க மாட்டோம்’’ என்றும் சொன்னாராம். வைகோ பேசிய அனைத்தையும் கேட்ட பாஜக குழுவினர், அடுத்த மாதம் சென்னையில் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று வைகோவுக்கு அழைப்பு விடுத்தார்களாம். வைகோவும் கட்டாயம் வருவதாக உறுதி கொடுத்து அவர்களை வழியனுப்பி வைத்திருக்கிறார்.
வைகோ கையில் தொகுதிப் பட்டியல்
சந்திப்பின்போது தொகுதிப் பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை என்று சொல்லும் மதிமுக வட்டாரத்தினர், ’மதிமுகவுக்கு சாதகமான தூத்துக்குடி, விருதுநகர், பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட பத்து தொகுதிகளை வைகோ பட்டியல் போட்டு வைத்திருக்கிறார். இதில் எட்டு அல்லது ஏழு தொகுதிகளில் மதிமுக போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியான மாதிரிதான்’’ என்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT