Published : 18 Mar 2018 07:37 PM
Last Updated : 18 Mar 2018 07:37 PM
‘காவலர்களின் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை துவக்க விழா, கோவை ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள ஒரு தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவகுமார் மற்றும் கார்த்தி இருவரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய கார்த்தி, “சம்பளத்துக்காக இல்லாமல், மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தால் தான் காவல்துறை பணிசெய்ய முடியும். ‘நேர்மையாக உழைத்ததுக்கு இந்த சமூகம் என்ன செய்து விட்டது?’ என்று பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தோன்றிவிடக் கூடாது. நேர்மையான அதிகாரிகள் தைரியமாக இருப்பதற்கு இதுபோன்ற அறக்கட்டளைகள் அவசியம் தேவை” என்றார்.
“எவ்வளவு சொத்து சேர்த்தாலும் பசி, பிணி, தூக்கம், காதல் போன்றவை எல்லோருக்கும் சமம். நாட்டைக் காப்பாற்றுகிற ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்றபிறகு வீட்டைக் காப்பாற்றுகிற செக்யூரிட்டிகளாக மாறுவது வேதனை” என்று வருத்தம் தெரிவித்தார் சிவகுமார்.
பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கார்த்தி, “காவல்துறை உயரதிகாரிகள் கீழ்மட்ட அலுவலர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வந்தாலும், அது அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. காவலர்களின் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நேர்மையாக நீங்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றால் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT