Published : 21 Mar 2018 10:03 PM
Last Updated : 21 Mar 2018 10:03 PM

ஆர்டர்லி முறை உள்ளதா?- புதிய விளக்கம் அளிக்க தயாராகும் அதிகாரிகள்

 காவல்துறையில் ஆர்டர்லி முறை உள்ளதா? 1979 அரசாணை என்ன ஆயிற்று, ஆர்டர்லியாக பணியாற்றுபவர்கள் எத்தனை பேர் போன்ற நீதிமன்றத்தின் அதிரடி கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க அதிகாரிகள் தரப்பு தயாராகிவிட்டதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக காவல்துறையில் நிலவி வரும் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் கடந்த சில மாதங்களாக தற்கொலை செய்து வரும் காவலர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் தனது முந்தைய வழக்கைப் பற்றி கேள்வி எழுப்பிய நீதிபதி கிருபாகரன் காவலர்களின் மன அழுத்தம், பணிச்சுமை குறித்து பல்வேறு கருத்துகளைப் பதிவு செய்தார். பின்னர் 1979-ல் அரசாணை மூலம் நீக்கப்பட்ட ஆர்டர்லி முறை இதுவரி ஏன் தொடர்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

தற்போதும் ஆர்டர்லி பணி தொடர்வதாக தெரியவந்துள்ளது. காவல் அதிகாரிகள் வீட்டில் எடுபிடி வேலை செய்ய ஒவ்வொரு காவல் அதிகாரியும் குறைந்தபட்சம் 12 ஆர்டர்லி காவலர்களை பணியில் அமர்த்தி உள்ளது தெரியவருகிறது. எனவே அதிகாரிகள் வீட்டில் உள்ள ஆர்டர்லி காவல் விவரங்களை இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், காவல்துறை இயக்குனருக்கும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

தமிழக காவல் அதிகாரிகள் இல்லங்களில் ஆர்டர்லி காவலர்கள் என்ற பெயரில் காவலர்கள் எத்தனைபேர் பணியாற்றுகிறார்கள் என்று டிஜிபி நோட்டீஸ் அனுப்பி விவரம் கேட்கும் அளவுக்கு பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. 1979-ல் அரசாணை மூலம் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டுவிட்டதும் தற்போது வெளியாகி உள்ளது.

நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருவதை ஒட்டி நேற்று மாலையுடன் ஆர்டர்லி குறித்த தகவல்களை உயர் அதிகாரிகள் அளிக்க வேண்டும் என டிஜிபி ஆணையிட்டிருந்தார். அதில் நீதிபதி கிருபாகரன் எழுப்பிய கேள்விகளை அப்படியே எழுப்பி, காவலர்கள் எண்ணிக்கையை தனியாகப் பட்டியலாக அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.

1979-ம் ஆண்டு ஆர்டர்லி முறையை ஒழித்து அரசாணை இயற்றப்பட்ட பின் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டதா இல்லையா?ஆர்டர்லி முறை அரசாணை மூலம் ஒழிக்கப்பட்ட பிறகும் எப்படி தொடர்கிறது? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அனைத்து அதிகாரிகள் வீட்டிலும் போலீஸார் பணியாற்றும்போது இந்தக் கேள்வி அனைவருக்கும் ஆச்சர்யத்தை எழுப்பியது.

மறுபுறம் போலீஸார் மத்தியில் ஆர்டர்லி முறை குறித்த நீதிமன்றத்தின் கேள்வி பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை இந்த வாய்ப்பை விட்டுவிடவே கூடாது என காவல்துறையில் பணியாற்றும் இளம் காவலர்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிகாரிகள் வீட்டில் பணியாற்றும் ஆர்டர்லிகள் பெயர், என்ன வேலை செய்கிறார்கள் என்பது உட்பட சேகரித்து முகநூல், வாட்ஸ் அப்களில் பரவ விடுகின்றனர்.

அதிகாரிகள் பெயர், அவர் என்ன பதவியில் உள்ளார், அவரிடம் உள்ள ஆர்டர்லியின் எண்ணிக்கை, பெயருடன் யார் யார் என்ன வேலையில் இருக்கிறார்கள் என்பதை துல்லியமாக அந்தந்த மாவட்ட காவல்துறையினர் சொல்ல அதைப் பட்டியலாக மொத்தமாக சேகரித்துள்ளனர்.

டிஜிபி அளித்த கடிதத்துக்கு அதிகாரிகள் பதில் அனுப்புகிறார்களோ இல்லையோ, நீதிபதியிடம் தங்கள் பட்டியலைத் தெளிவாக தயாரித்து அளிக்கும் வேலையையும் இளம் காவலர்கள் செய்யத் தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறுபுறம் காவல் உயர் அதிகாரிகள் டிஜிபிக்கு அளிக்கப்போகும் பதில் ஒரே மாதிரியாக வரப்போவதாகவும், அதை அடுத்து அந்த தகவலை டிஜிபி தரப்பில் நீதிமன்றத்தில் அளிக்க உள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆர்டர்லி என்று யாரும் தங்களிடம் இல்லை. ஆர்டர்லி முறை என்பதும் இல்லை. கேம்ப ஆஃபீஸ் என்று சொல்லப்படும் தனி அலுவலகத்தில் போலீஸார் கூடுதலாகப் பணியாற்றுகிறார்கள் என்று பதில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஒருவர், ''இந்த விவகாரத்தை அதிகாரிகள் எளிதாக கையாளுவார்கள், காரணம் ஆர்டர்லி என்ற ஆர்டரின் பேரில் எழுத்துப்பூர்வமாக யாரும் பணிக்கு அனுப்பப்படவில்லை, அதே போல் ஓ.டி. என்று கூறப்படும் கூடுதல் பணியாக அதிகாரிகளின் கேம்ப் அலுவலகத்துக்கு பணிக்கு அனுப்பப்பட்டவர்களை ஆர்டர்லியாக குறிப்பிடுகிறார்கள் என்று தெரிவிப்பார்கள், காரணம் ஆர்டர்லி வேலை பார்க்கிறவர்கள் ஆயுதப்படை, சிறப்பு காவல்படை, காவல் நிலையங்களிலிருந்து கூடுதல் பணி என்ற பெயரில் அனுப்பப்படுகிறவர்கள் என்பதால் இந்த வாதத்தை வைப்பார்கள்'' என்று கூறினார்.

ஆனால், நீதிபதி கிருபாகரன் இது போன்ற வாதங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார், அவர் இந்த முறை நல்ல தீர்ப்பை அளிப்பார். அது காவல்துறையில் ஒரு மாற்றத்தை கொண்டுவரும் என்று போலீஸார் தரப்பில் நம்பிக்கையுடன் கருத்துகளை பரிமாறிக்கொள்கின்றனர். உயர் அதிகாரிகள் தங்கள் முகநூலைக் கவனிப்பார்கள் என்று தெரிந்தும் துணிந்து கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

நீதிமன்றத்தில் சரியான தகவலை அளிப்பார்களா? அல்லது ஆர்டர்லி என்ற முறையே இல்லை அது 1979-லேயே அரசாணை மூலம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அரசுத் தரப்பில் தெரிவிப்பார்களா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x