Published : 06 Mar 2018 08:26 PM
Last Updated : 06 Mar 2018 08:26 PM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டப்பேரவையை கூட்ட வலியுறுத்தி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் அதிமுக எம்எல்ஏக்கள் மனு தந்துள்ளனர்.
புதுச்சேரி சட்டமன்ற அதிமுக கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் இன்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
''கர்நாடகம் தமிழகத்துக்கு உரிய நீரைத் தொடர்ந்து திறந்து விடாததால் காவிரி ஆற்றின் கடைமடைப் பகுதியாக விளங்கும் காரைக்காலுக்கு காவிரி நீர் வராமல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி விவசாயிகளின் தலையாயக் கடமையாக இந்த பிரச்சினை இருப்பதால் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை முதல்வர் நாராயணசாமி வலியுறுத்த வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக முதல்வர் நாராயணசாமி தமிழகத்தைப்போல் விவசாயிகளுக்கு பயன்தரும் நடவடிக்கை எடுக்கவில்லை. கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக முதல்வர் நாராயணசாமி செயல்படுவதால், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எவ்வித நடவடிக்கையும் இதுவரை முதல்வர் எடுக்கவில்லை.
எனவே அதிமுக உறுப்பினராகிய நாங்கள் காரைக்கால் விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினை பற்றி பேசுவதற்கு, ஆளுநர் தனக்குள்ள அதிகாரத்தின்படி சட்டமன்றத்தைக் கூட்ட வலியுறுத்துகிறோம். சட்டமன்றத்தில் எடுக்கப்படும் தீர்மானத்தின் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்த வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்சந்திப்புக்கு பிறகு எம்எல்ஏ அன்பழகன் கூறுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வற்புறுத்த சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிடக்கோரி ஆளுநரிடம் மனு அளித்தோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT