Published : 07 May 2019 05:12 PM
Last Updated : 07 May 2019 05:12 PM

கிணற்றில் தூர்வார இறங்கியபோது விஷவாயு தாக்கியதில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கிணற்றைத் தூர்வார இறங்கியபோது விஷவாயு தாக்கியதில் கூலித்தொழிலாளியான மாற்றுத்திறனாளி  பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு கூலித்தொழிலாளி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, "பேரணாம்பட்டு ஓங்குப்பம் சாலையில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது வீட்டில் உள்ள 25 அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீர் வற்றியுள்ளது. கோடை காலம் என்பதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கிணற்றைத் தூர்வார முடிவு செய்தார்.

இதற்காக பேரணாம்பட்டு முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த தொழிலாளி வடிவேல் (28) என்பவரை அணுகியுள்ளார். அவர் பேரணாம்பட்டைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகள் பாரத் (25), சுபாஷ் (27) ஆகியோரை உடன் அழைத்துக்கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தூர்வாரும் பணிக்காக பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்றார். 

மாற்றுத்திறனாளியான வடிவேல் கயிற்றின் உதவியுடன் முதலில் கிணற்றில் இறங்கியுள்ளார். அப்போது, விஷவாயு தாக்கியதில் வடிவேல் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாரத், சுபாஷ் ஆகியோர் கயிற்றைக் கட்டிக்கொண்டு கிணற்றில் வேகமாக இறங்கியுள்ளனர். பாரத்தும் மயங்கி விழுந்ததால் அதிர்ச்சியடைந்த சுபாஷ் அவசரமாக கிணற்றில் இருந்து மேலே ஏறி கூச்சலிட்டார். 

இதுகுறித்த தகவலின்பேரில் விரைந்து வந்த பேரணாம்பட்டு தீயணைப்பு வீரர்கள் விஷவாயுவில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் கருவியின் உதவியுடன் கிணற்றில் இறங்கி வடிவேல், பாரத் ஆகியோரை மீட்டனர். இதில், வடிவேல் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. ஆபத்தான நிலையில்  பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் பாரத் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து தொடர்பாக பேரணாம்பட்டு வட்டாட்சியர் செண்பகவல்லி விசாரணை நடத்தினார். இந்த விபத்து தொடர்பாக பேரணாம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். உயிரிழந்த வடிவேலுக்கு ரஞ்சனி (21) என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்" என்று தெரிவித்தனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x