Published : 29 May 2019 12:00 AM
Last Updated : 29 May 2019 12:00 AM
கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் ஐ.பிரபு.
விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான குமரகுருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரபு தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏவாக செயல்பட்டு வந்த பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோருக்கு பேரவைத் தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தார். பின்னர் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி, விளக்க நோட்டீஸ் மீதான நடவடிக்கைக்கு தடை பெற்றனர்.
இந்நிலையில் மக்களவை மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. அதன்படி, தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே திமுக சார்பில், சபாநாயகர் மீதுநம்பிக்கை இல்லாத் தீர்மானம் கோரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களாகக் கருதப்படும் பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி, கருணாஸ் மற்றும் தமிமுன்அன்சாரி ஆகியோர் என்ன நிலைஎடுப்பார்கள் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இவர்களது ஆதரவை நாட திமுக முயற்சி மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவின் நிலை குறித்து கேட்டதற்கு அவர் கூறியதாவது: நான் தற்போது வரை அதிமுக எம்எல்ஏ. தற்போதைய ஆட்சி மறைந்த ஜெயலலிதாவால் உருவானது. எனவே ஆட்சித் தொடரவேண்டும் என்பதே எனது விருப்பம். பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதிமுகவின் கொறடா உத்தரவுப்படி செயல்படுவேன். கட்சித் தலைமை மீதுகருத்து வேறுபாடு உண்டு. அதற்காக ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை வீழ்த்த நான் துணைபோக மாட்டேன்.
தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது. கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அறிவித்திருந்தபோதிலும், அதிமுக கூட்டணி வேட்பாளர் தோல்வியை தழுவியுள்ளார். திமுக வேட்பாளர் இந்த அளவுக்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கியக் காரணம் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏகுமரகுருதான் என்பது அதிமுகவினர் அனைவருக்கும் தெரியும். கட்சித் தலைமையில் உள்ளவர்கள் இனியாவது தொண்டர்களின் விருப்பப்படி செயல்படவேண்டும் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ வி.டி.கலைச்செல்வனிடம் கருத்து கேட்க பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. திமுக மற்றும் அதிமுகவினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT