Published : 30 May 2019 12:00 AM
Last Updated : 30 May 2019 12:00 AM
மனிதர்களை டெங்கு வைரஸ் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பே, கொசுவில் டெங்கு வைரஸ் உள்ளதா என கண்டுபிடிக்கும் புதிய திட்டத்தை இந்தியாவில் முதல் முறையாக பொது சுகாதாரத் துறை செயல்படுத்தி வருகிறது.
தென்மேற்கு பருவமழை ஜூன் 5-ம் தேதி வாக்கில் கேரளாவில் தொடங்கி, அடுத்த சில தினங்களில் தமிழகத்தில் பரவ உள்ளது. ஆண்டுதோறும் பருவமழை தொடங்கிய பிறகே டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவுகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. டெங்கு வைரஸை உடலில் வைத்திருக்கும் ஏடீஸ் ஈஜிப்டி வகை கொசுக்கள் மனிதனை கடிப்பதன் மூலம், அந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. கொசுக்களிடம் உள்ள டெங்கு வைரஸ், மனிதர்களை கடிப்பதன் மூலம் பரவுவதுடன், அவை வைக்கும் முட்டைகளில் இருந்து உருவாகும் கொசுக்களுக்கும் டெங்கு வைரஸ் கடத்தப்படுகிறது.
நாடுமுழுவதும் டெங்கு காய்ச்சல் பரவிய பிறகே, அப்பகுதியில் டெங்கு ஒழிப்பு பணிகள் முடுக்கி விடப்படுகின்றன. அங்கு பரப்பப்படும் புகை மருந்தால் கொசுக்கள் அழிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்யாதது, மக்களின் புகார் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கைகளை திட்டமிடுவது போன்ற காரணங்களால் டெங்குவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடிவதில்லை. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,294 ஆக உயர்ந்தது. அதில் 65 பேர் உயிரிழந்தனர். இச்சூழலில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தேசிய சுகாதார இயக்கத்தின் தமிழக திட்ட இயக்குநர் தாரேஸ் அகமது தலைமையில் தமிழகம் முழுவதும் உள்ள பொதுசுகாதாரத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய திட்ட இயக்குநர் தாரேஸ் அகமது, “மாவட்டத்துக்கு ஒரு பூச்சியியல் வல்லுநர், மலேரியா அதிகாரி, 9 மண்டலங்கள் அளவில் பூச்சியியல் வல்லுநர் குழு செயல்பட்டு வருகின்றனர். இவர்களால் டெங்குவை கட்டுப்படுத்த முடியாதா? ஏன் நோய் வந்த பிறகு, மனிதர்களை நோக்கியே ஓடுகிறீர்கள்?, கொசுவில் இருந்து வைரஸை கண்டுபிடிக்க முடியாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கான சாத்தியக்கூறுகள், ஆய்வக வசதிகள் குறித்து கேட்டறிந்த அவர், அதற்கான முயற்சிகளில் இறங்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
வளர்ந்த நாடுகளில், கொசுவால் பரவும் பல்வேறு வைரஸ்கள், மனிதர்களுக்கு பரவுவதற்கு முன்பாக, கொசுவில் இருக்கும்போதே கண்டறியப்படும் முறை அமலில் உள்ளது. அந்த முறையில், தமிழகத்தில் கொசுவால் பரவும் டெங்குவை, கொசுவில் இருக்கும்போதே கண்டுபிடிப்பதற்கான கருத்துருவை பொது சுகாதாரத் துறை இயக்குநர் கே.குழந்தைசாமி உருவாக்கி, புதுமை திட்டமாக மாநில திட்ட ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார். அத்திட்டத்தை பாராட்டிய ஆணையத்தின் உறுப்பினர் செயலர், கொசுவிலிருந்து டெங்கு வைரஸை கண்டுபிடிக்கும் இரு ஆய்வகங்களை அமைக்க பரிந்துரை செய்துள்ளார். அதைத் தொடர்ந்து, தேசிய சுகாதார இயக்கம் மூலம் ரூ.3 கோடியே 85 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னை மற்றும் ஓசூரில் இரு ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள பூச்சியியல் வல்லுநர் குழுவினர், ஏற்கெனவே டெங்கு பாதிப்பு, இறப்பு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து கொசுக்களை பிடித்து, ஆய்வகங்களுக்கு அனுப்பி வருகின்றனர். அங்கு கொசுவின் மரபணுக்களை எடுத்து பாலிமரேஸ் தொடர் வினை (Polymerase Chain Reaction) என்ற தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்து, அதில் டெங்கு வைரஸ் உள்ளதா என கண்டுபிடிக்கப்படுகிறது.
இந்த ஆய்வில், கொசுவில் டெங்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அந்த கொசுக்களை அனுப்பிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்படும். அவர்கள், உடனடியாக களப் பணியில் ஈடுபட்டு, கொசுக்களை அழித்து வருகின்றனர். இதன் மூலம் மனிதனுக்கு நோய் வருவது தடுக்கப்படுகிறது. இதை சோதனை அடிப்படையில் ஓராண்டாக செய்து வருகிறோம். அதன் விளைவாக, தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு 23,293 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு சுமார் 3,636 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மே மாதம் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 900 ஆக குறைந்துள்ளது. மனிதனுக்கு டெங்கு வருவதற்கு முன்பே, டெங்கு கொசுக்கள் அழிக்கப்படுவதால், வருங்காலத்தில் டெங்கு பாதிப்பே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை மாநகராட்சி அலட்சியம்
இந்த ஆண்டு டெங்கு வைரஸ் ஆய்வுக்கு கொசுக்கள் அனுப்பப்படுகிறதா என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “தற்போது சென்னை யில் பெரிய அளவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. அதனால் கொசு மாதிரி அனுப்பவில்லை” என்றனர். மனிதனுக்கு டெங்கு வருவதற்கு முன்பே, கொசுவில் டெங்கு வைரஸ் உள்ளதா என்று கண்டறிந்து அழிப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். அதன்படி, காய்ச்சல் தென்படாத காலத்திலிருந்தே கொசுவை பிடித்து பரிசோதித்தால்தான், எதிர் காலத்தில் மனிதர்களுக்கு நோய் ஏற்படுவதை தடுக்க முடியும். இந்த நோக்கத்தை மாநகராட்சி நிர்வாகம் புரிந்துக்கொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாகவும், இந்த ஆண்டு சென்னையில் சுமார் 170 பேருக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டும் மெத்தன மாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT