Published : 10 May 2019 06:00 PM
Last Updated : 10 May 2019 06:00 PM
அண்மையில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற் பழகுநர் தேர்வில் மொத்தமுள்ள 1,765 இடங்களில் பெருமளவு பிற மாநிலத்தவர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர். ரயில்வே தொழிற் பழகுநர் பயிற்சி முடித்து சுமார் 15 ஆயிரம் பேர் பதிவு செய்து 14 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.
இது மட்டுமின்றி சென்னை பெரம்பூர், கோவை என ரயில்வே பணிகளில் பிற மாநிலத்தவர்களே 90 விழுக்காடு நியமனம் பெற்றுள்ளனர். இந்த விவகாரம் தற்போது பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலை பெற முடியாத சூழல் நிலவுவதாக பல அரசியல் கட்சித் தலைவர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்வு செய்யும் குடிமைப்பணி தேர்வில் கடந்த 2010-ம் ஆண்டில் 12 சதவீதமாக இருந்த தமிழக இளைஞர்களின் தேர்ச்சி, தற்போது 5 சதவீதமாக குறைந்துள்ளது.
ரயில்வே துறையில் 2013-2014-ல் 83% வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகங்களில் 2014-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த 78 பேரில், 3 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
தமிழகத்தில் உள்ள மத்திய எக்சைஸ் எனப்படும் உற்பத்தி வரி அலுவலகங்களில், 2012-ல் சேர்க்கப்பட்ட 224 பேரில் 221 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ஆவடி, திருச்சி, அரவங்காடு போன்ற இடங்களில் உள்ள பாதுகாப்புத் தொழிற்சாலைகளிலும், திருச்சி, ராணிப்பேட்டை, திருமயம் ஆகிய இடங்களில் உள்ள பிஎச்இஎல் தொழிற்சாலைகளிலும் 50 சதவீத்துக்கும் அதிகமானோர் வெளிமாநிலத்தவர்கள் பணியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
காரணம் என்ன?
இதுகுறித்து மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் சில பயிற்சி நிறுவனங்களை தொடர்பு கொண்டு பேசியபோது முக்கியத் தகவல்கள் தெரியவந்துள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2000-க்குப் பிறகே இந்தப் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. தமிழ்நாட்டு மாணவர்களில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களில் பெருமளவு எண்ணிக்கையில் மருத்துவத்துக்கு அடுத்தபடியாக ஐ.டி.துறையைத் தேர்வு செய்கின்றனர். இதுமட்டுமின்றி நாடு முழுக்க பல்வேறு தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிக சம்பளம் பெறும் பணிகளைக் குறி வைத்துச் சென்று விடுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பார்த்தால் மூன்றாம் நிலையில் இருக்கும் மாணவர்களே இளம்நிலை பட்டப்படிப்பை முடித்து விட்டு அரசுப் பணியை நோக்கிச் செல்கின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் தொடங்கி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், வங்கித் தேர்வுகள், ரயில்வே தேர்வுகள் என பல தேர்வுகளை எழுதி அரசுப் பணியை குறி வைத்துச் செல்கின்றனர்.
2000-ம் ஆண்டுகளுக்கு முன்பாக அரசுப் பணியே ஒரே வாய்ப்பாக இருந்ததால் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்று சாதித்து வந்தனர். ஆனால் தற்போது மூன்றாம் நிலை மாணவ, மாணவியரே இந்தத் தேர்வில் பங்கேற்பதால் அவர்களது தேர்ச்சி அளவு அதிகமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
எஸ்எஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளைப் பொறுத்தவரையில் முன்பு மண்டல வாரியாக நடத்தப்பட்டு வந்தது. இதனால் அந்தந்த மண்டலத்துக்கு ஏற்ப நடைபெறும் தேர்வில் அந்தந்த பகுதி மாணவ, மாணவியரே பங்கேற்றனர்.
அவர்களுக்கு ஏற்றபடி தேர்வுப் பாடங்களும் இருந்ததால் தமிழக மாணவர்கள் எதிர்கொள்வது சுலபமாக இருந்தது. ஆனால் தற்போது நாடு முழுவதும் ஒரே தேர்வாக நடைபெறுகிறது. இதனால் அனைத்து மாணவர்களும் தேர்வில் பங்கேற்று எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பணியில் அமரலாம் என்ற சூழல் உள்ளது.
இதுமட்டுமின்றி தேசிய அளவில் நடைபெறும் தேர்வுகளில் டெல்லியை மையப்படுத்திய பாடத்திட்டமும், கேள்விகளும் அமைந்துவிடுவதால் வட இந்திய மாணவர்கள் எதிர்கொள்வது எளிதாகி விடுகிறது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநில மாணவர்களுக்கு கடினமாக உள்ளது. எனவே மீண்டும் மண்டல வாரியாக தேர்வு நடத்துவதே சரியானதாக இருக்கும்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வுகளைப் பொறுத்தவரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும். அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு எழுத முடியாது. இதனால் ஆங்கிலத்தில் அதிகமான தேர்ச்சியில்லாத காரணத்தால் பாடங்களில் திறன் இருந்தும் தமிழக மாணவர்கள் வெற்றி பெற முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது.
ஆனால், தமிழகத்தைத் தவிர மற்ற மாநில மாணவர்கள் இந்தியில் எழுதிவிடுகின்றனர். இதனால் எளிதில் அவர்கள் வெற்றி பெற்றுவிட முடிகிறது. எனவே தமிழக அரசுச் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளைப் போலவே மத்திய அரசுப் பணியாளர் தேர்வுகளையும் தமிழில் நடந்துவதே சரியானதாக இருக்கும்.
தில்லுமுல்லு
போட்டித் தேர்வுகளை எழுதித்தானே வருகிறார்கள். நமது மாணவர்களிடம் திறமை இல்லை என்ற வாதம் வைக்கப்படுகிறது. ஆனால், தேர்வுகளில் முறைகேடுகள் செய்து பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணியிடங்களில் பணி நியமனம் பெறுகிறார்கள் என்ற நிலையும் உள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் பெருமளவு தில்லுமுல்லு நடைபெறுவது அவ்வப்போது வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, பிஹார், மேற்கு உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில மாணவர்கள் தேர்வுகளில் காப்பியடிப்பது, வினாத்தாள் முன்கூட்டியே வெளியாவது, வட மாநில அதிகாரிகள் தங்கள் மாநில மாணவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது போன்ற மோசடிகளும் நடைபெறுகின்றன.
இதையடுத்து 2016-ம் ஆண்டு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டது. அப்போது பெருமளவு முறைகேடுகள் குறைந்து இருந்ததாகவும், ஒப்பீட்டளவில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் அடுத்த ஆண்டே ஆன்லைன் தேர்விலும் வட இந்திய மாணவர்கள் முறைகேடுகளைச் செய்தனர். இதனால் அந்த ஆண்டு நடந்த எஸ்எஸ்சி தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
கோட்டா, ஹைதராபாத்
இந்திய அளவில் போட்டித் தேர்வுகளின் முக்கிய மையமாக விளங்கியது சென்னை. இங்கிருந்து படித்து பல்வேறு பணிகளுக்கும் சென்ற தமிழக மாணவர்கள் ஏராளாம். ஆனால், தற்போது நிலைமை தலைகீழாகிவிட்டது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஆகிய இரு நகரங்களிலும் நீட் மட்டுமின்றி அரசுப் பணியாளர் தேர்வுக்கான பயிற்சி நிறுவனங்கள் ஏராளமான அளவில் செயல்படுகின்றன. மத்திய அரசுப் பணியாளர் தேர்வுகளில் தேர்வாகும் மாணவர்களில் பெரும்பாலானோர் இந்த மையங்களில் படித்தவர்களாகவே உள்ளனர்.
இவர்களுக்கு அதிகமான பயிற்சி வழங்கப்படுவது உண்மை என்றாலும், அதைவிட குறுக்கு வழியில் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளும் சொல்லித் தரப்படுவதாக கூறப்படுகிறது. இங்குள்ள பயிற்சி நிறுவனங்கள் சில மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து கொண்டு இந்த வேலைகளைச் செய்வதாக கூறப்படுகிறது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் வெற்றிபெறும் தமிழக மாணவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஒரளவு உள்ளனர். ஆனால் அவர்களும் உண்மையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா என்ற கேள்வியும் உள்ளது. இதற்குக் காரணம் மாநில பிரதிநிதித்துவம் உள்ள தேர்வுகளில் முறைகேடாகச் சேர்வதற்காக ஹைதராபாத்தில் உள்ள சில பயிற்சி நிறுவனங்கள் வெளி மாநில மாணவர்களுக்கு சென்னையைச் சேர்ந்தவர்கள் என்ற இருப்பிடச் சான்று தயார் செய்கின்றனர்.
இதுமட்டுமின்றி பிராந்திய ஒதுக்கீட்டை மையப்படுத்திய ஹைதரபாத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் சென்னையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தமிழக ஒதுக்கீட்டில் வேலை பெறவும் செய்கின்றனர். அஞ்சல் துறை, ரயில்வே துறை தேர்வுகளில் இவ்வாறு தான் வெளி மாநில மாணவர்கள் தமிழகத்தில் பணியைப் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற அஞ்சல் துறை பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில், தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்ச்சி பெறாமல் போக, தமிழ் எழுதப்படிக்க தெரியாத வட மாநில இளைஞர்கள் தேர்வாகிய அதிர்ச்சியும் நடந்தது.
இது, 1956-ம் ஆண்டின் மொழி வழி மாநில உரிமைக்கும் எதிரானது. எனவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, மாநில ஒதுக்கீடு என்பதற்குப் பதில் மாநில மொழி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பள்ளியில் இருந்து தமிழைப் பாடமாக எடுத்து படித்த மாணவர்களுக்க மட்டுமே தமிழக ஒதுக்கீட்டின் கீழ் பணி வழங்க வேண்டும் என்ற பரிந்துரையும் செய்யப்படுகிறது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு வழக்கமாக இந்தி மொழி ஊடகங்களில் தான் அதிகமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. பிராந்திய மொழிகளில் மிகவும் காலதாமதமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இதுமட்டுமின்றி கோட்டா, ஹைதரபாத் பயிற்சி நிறுவனங்களுக்கு அறிவிப்பு வெளியாகும் முன்பே தகவல்கள் சென்று விடுகின்றன. இதனால் பணியிடங்களைக் குறி வைத்து முன்கூட்டியே திட்டமிட்டு வட மாநில மாணவர்கள் தயார் படுத்தப்படுகின்றனர்.
இதுகுறித்து அரசியல் விமர்சகர் ஆழி செந்தில்நாதனைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
அவர் கூறியதாவது:
‘‘இந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரை இரண்டு வழிகளில் சிக்கல் ஏற்படுகிறது. ஒன்று மத்திய அரசு பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யும் முறை. மற்றொன்று அரசியல் ரீதியானது. மத்திய அரசுப் பணிகளைப் பொறுத்தவரை அது தபால், ரயில்வே, மத்திய அரசுப் பணி என அனைத்துமே வழக்கமாக அந்தந்த மண்டலம் வாரியாகத் தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அந்தந்த மண்டலங்கள் வாரியாக தேர்வு நடத்தி தேர்வு செய்யும்போது ஒவ்வாரு பகுதி மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைத்து வந்தது. ஆனால் அகில இந்திய அளவில் ஒரே தேர்வு என மாற்றப்பட்ட பிறகு நிலைமை மிக மோசமாகியுள்ளளது. வட இந்திய மாணவர்கள் அதிக அளவில் அனைத்த மண்டலங்களிலும் பணியில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டு விட்டது.
கீழ்நிலைப் பணி என்பதால் தமிழகத்தில் உள்ளவர்கள் விரும்பவில்லை என்ற வாதம் பொதுவாக சிலரால் வைக்கப்படுகிறது. வாதத்துக்காக இதனை ஏற்றுக் கொண்டாலும் கூட தற்போது தமிழகத்தில் மத்திய அரசன் முதுநிலைப் பணிகளில் கூட வட இந்திய மாணர்களால் எவ்வாறு பணி நியமனம் பெற முடிகிறது?
நமது மாணவர்களுக்கு போதிய தகுதியும், திறமையும் இருந்தும் அவர்களால் இந்தப் பணிகளில் நியமனம் பெற முடியாமல் போவதன் பின்னணியில் அரசியல் சதி உள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தின் மக்கள் தொகை கட்டமைப்பையே மாற்றி விடுவதற்கான ஆபத்தும் உள்ளது. இலங்கை, பாலஸ்தீனம் என பல நாடுகளில் இதுதான் நடந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிரச்சினை உள்ளதிலும் மோடி அரசு வந்த பிறகு மிகத் தீவிரமாகியுள்ளது.
தமிழகத்தில் மத்திய அரசுப் பணிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக வட இந்தியர்கள் ஆக்கிரமிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. விமான நிலையம், துறைமுகம், ரயில்வே என அனைத்திலும் தற்போது எங்கு பார்த்தாலும் வட இந்தியர்களே பணியில் இருப்பதைக் காண முடிகிறது. விசா இல்லாமல் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கும் சூழல் உள்ளது. இது மிகவும் ஆபத்தான போக்கு’’ என ஆழி செந்தில்நாதன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்த அவலநிலையால் தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசு வேலை கிடைக்காதது ஒருபுறம் என்றால் தமிழகத்தில் பணிக்கு வரும் வட மாநில இளைஞர்களின் தகுதி மிகக் குறைவாக இருப்பதாக கூறுகின்றனர் தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் உள்ள அதிகாரிகள். தமிழகத்தின் புவியியல், அரசியல், சமூகம், பொருளாதாரம் என எந்தப் புரிதலும் இல்லாத வட இந்திய ஊழியர்களால் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
நாளுக்கு நாள் வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில், படித்த தகுதியுள்ள இளைஞர்கள் மத்திய அரசுப் பணிகளில் அமர முடியாமல் போவது அவலமே. மாநில உரிமைகளைத் தற்காத்துக் கொள்வதில் முன்னுக்கு நிற்கும் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுடன் தமிழகமும் சேர்ந்துகொள்ள வேண்டிய தருணம் வந்துள்ளது. எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசு, மத்திய அரசுப் பணித் தேர்வுகளை நடத்தும் அமைப்புகள் மட்டுமின்றி தமிழக அரசும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT