Published : 24 May 2019 10:48 AM
Last Updated : 24 May 2019 10:48 AM
கட்சி தொடங்கி இரு மாதங்களில் ஆட்சியமைத்த ரங்கசாமி, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியையும் எதிர்கட்சி பணியை சரியாக செய்யாததால் தற்போது தொடர் சரிவையும் சந்தித்துள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கிய இரு மாதங்களிலேயே ஆட்சியை பிடித்தது என்.ஆர்.காங்கிரஸ். கடந்த 2011-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார் ரங்கசாமி. உள்ளூர் கட்சி என்பதால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. புதுச்சேரி வளர்ச்சியடையும், தொழில்கள் பெருகும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
அதையடுத்து வந்த மக்களவைத் தேர்தலிலும் என்.ஆர்.காங்கிரஸ் வென்றது. தனது கூட்டணிக் கட்சியான பாஜக ஆட்சியமைத்தது. ஆனால், டெல்லி சென்று மத்திய அரசு தரப்பை ரங்கசாமி சந்திக்கவில்லை. நிதியை பெறவும் நடவடிக்கை இல்லாததால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தோல்வியடைந்தது. அப்போது அமைச்சர்கள் ஒருவர் கூட வெற்றி பெறாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவரானார் ரங்கசாமி. கடந்த 3 ஆண்டுகளில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான மோதல் வலுவடைந்தது. ஆளுங்கட்சி செயல்பாடுகளில் தவறு இருந்தால் மக்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் களம் இறங்கும் என எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள். தொடர்ந்து ஆழ்ந்த அமைதியில் ரங்கசாமி இருந்தார். சட்டப்பேரவை நடந்தாலும் சில நிமிடங்கள் இருந்துவிட்டு வெளிநடப்பு செய்து செல்வதை மக்கள் ஏற்கவில்லை. மக்களுக்காக ஒரு போராட்டமோ, ஒரு அறிக்கையோ ரங்கசாசமி விட்டதே இல்லை என்பதுதான் நிதர்சனம்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் வந்தவுடன் பிரச்சாரத்துக்கு வந்தார் ரங்கசாமி. அத்துடன் வேட்பாளராக தனியார் மருத்துவக் கல்லூரி உரிமையாளர் நாராயணசாமியை வேட்பாளராக அறிவித்தார்.
ஆனால், அவரோ, வேட்பாளரோ ஒரு முறை கூட பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்து கேள்விகளை எதிர்கொண்டதே இல்லை. கட்சி நிர்வாகிகளுக்கு கூட உரிய அங்கீகாரம் தராமல் இருந்தது கட்சியிலும் கடும் அதிருப்தி ஏற்பட்டது. அதனால், மக்களவைத் தேர்தலில் அவரது கோட்டையாக கருதப்பட்ட தொகுதிகளில் கூட மக்களவைத் தேர்தலில் கடும் பின்னடவை என்.ஆர்.காங்கிரஸ் சந்தித்துடன், முக்கிய தொகுதியான தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலிலும் தோல்வியடைந்தது என்.ஆர்.காங்கிரஸ்.
என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் தரப்பில் கேட்கையில், "தொண்டர்களுக்கு கட்சி அடையாள அட்டைக்கூட தரவில்லை. 8 ஆண்டுகளாகியும் தொகுதி நிர்வாகிகள்கூட நியமிக்கப்படவில்லை. கட்சியே கார்ப்பரேட் நிறுவனம் போல் நடத்தினால் வேறு என்ன நடக்கும்?" என்கிறார்கள் பரிதாபத்துடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT