Published : 08 May 2019 12:00 AM
Last Updated : 08 May 2019 12:00 AM
விருதுநகர் மாவட்டத்தில்கிணறுகள் வறண்டதால் டேங்கர் லாரியில் தண்ணீரை விலைக்கு வாங்கி நெற் பயிரை காப்பாற்றி வருகின்றனர் விவசாயிகள்.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதி களில் பருவமழை குறைந்ததால் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பெருமளவில் குறைந்துவிட்டது. அதைத்தொடர்ந்து, சம்பா சாகுபடியை அதிகரிக்க தமிழக அரசு சம்பா சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியது. இருப்பினும், கடந்த 2 ஆண்டுகளாக தொடர் வறட்சி மற்றும் பருவமழை போதிய அளவு பெய்யாததால் நெற்பயிர் சாகுபடி பரப்பளவு பாதியாகக் குறைந்துவிட்டது.
ஒருபோக சாகுபடியான சம்பா சாகுபடி மட்டுமே மேற்கொள் ளப்படும் விருதுநகர் மாவட்டத்தில் சராசரியாக 10 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சி நிலவி வரும் நிலையில், நடப்பு ஆண்டில் 6 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே நடவுப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. ஆறு மற்றும் குளங்களில் தண்ணீர் இல்லாததால், அதன் மூலம் பாசன வசதி பெறும் பகுதிகளில் வேளாண் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கிணற்றுப் பாசன வசதியுள்ள நிலங்களில் மட்டுமே நெல் பயிரிடப்பட்டுள்ளன. அந்த வகையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பில் 550 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. ஆனால், தற்போது கடும் வெயில், வறட்சி காரணமாக கிணறுகளில் தண்ணீர் வற்றியதால் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி வயல்களுக்குப் பாய்ச்சி வருகின்றனர் விவசாயிகள். அதிக செலவு காரணமாக விவசாயிகள் பலர் கடனுக்கு மேல் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வத்திராயிருப்பைச் சேர்ந்த விவசாயி கண்ணன் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு மழையின்மை மற்றும் வறட்சி காரணமாக நெல் சாகுபடி பரப்பளவு பாதியாகக் குறைந்துவிட்டது. கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பாசனம் பெறும் பகுதிகளில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நெல் பயிர்கள் நன்கு வளர்ந்துள்ள நிலையில் கிணறு களில் தண்ணீர் வற்றிவிட்டது. இதையடுத்து பயிர்களை பாதுகாக்க டேங்கர் லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.500-க்கு விற்கப்படுகிறது. வாரத்துக்கு குறைந்தபட்சம்ஒருமுறையாவது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு ஏக்கருக்கு குறைந்தது 3 டேங்கர் லாரி தண்ணீர் தேவைப்படுகிறது.
பணம் இல்லாததால் பல விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அப்படியே அதிக செலவு செய்து அறுவடை செய்தாலும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT