Published : 20 May 2019 08:29 AM
Last Updated : 20 May 2019 08:29 AM

மியாவ்.. மியாவ்.. பூனைக்குட்டி- தமிழகத்தில் முதல்முறையாக `கேட்டரி கிளப்’

மியாவ் மியாவ் பூனைக்குட்டி, மீசை வச்ச பூனைக்குட்டி, பையப் பையப் பதுங்கி வந்து பாலைக் குடிக்கும் பூனைக்குட்டி..."

என்ற பாடல் சிறுவர்களுக்கு மட்டுமல்ல, பூனைகளை நேசிக்கும் எல்லோருக்குமே பிடித்தமான பாடல்தான். செல்லப்பிராணிகளில் நாயைக் காட்டிலும் பூனைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்தான் அதிகம்.பட்டுப்போன்ற முடிகளுடன், மிருதுவான உடலமைப்பு கொண்ட பூனையுடன் பெரும்பாலான நேரத்தைக் கழிப்பவர்களும் உண்டு. முன்பெல்லாம் சில திரைப்படங்களில் வில்லன் பூனைக்குட்டியை கையில் வைத்து தடவிக்கொண்டே `வில்லத்தனம்' செய்யும் காட்சிகள் நகைமுரணாக இருக்கும். இந்த நிலையில், பூனைகளின் நலனைக் காக்க தமிழகத்திலேயே கோவையில் `கேட்டரி கிளப்' தொடங்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் தகவல்!

பொதுவாகவே, மனிதர்களுடன் மிக நெருங்கிப் பழகும் பிராணி பூனை. மனித நாகரித்தில் பூனைகளுக்கு தனி இடம் உண்டு. புலி, சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகளைக் கொண்ட ஃபெலிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்தது பூனை. பூனைகளில் காட்டுப் பூனைகள், ஐரோப்பிய காட்டுப் பூனைகள், ஆப்பிரிக்க காட்டுப் பூனைகள், சீனத்து மலைப் பூனைகள்,  அரேபிய மணல் பூனைகள் என பல அடிப்படைப் பிரிவுகள் உள்ளன. இவற்றில் , காட்டுப் பூனைகள் மற்றும் ஆப்பிரிக்க காட்டுப் பூனைகள் ஆகியவை தற்போதைய வீட்டுப் பூனைகளின் முன்னோடிகள் எனலாம்.

எகிப்தில் `பூனைக் கடவுள்'!

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூனைகள், மனிதர்களுடன் இணைந்திருந்ததற்கு பல தொல்பொருள் சான்றுகள், சைப்ரஸ், துருக்கி, சீனா உள்ளிட்ட நாடுகளில் கிடைத்துள்ளன. எகிப்து நாட்டில் பூனைகளின் சடலங்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கிடைத்துள்ளன. அதேபோல, சிற்பங்கள், சுவர் ஓவியங்கள் உள்ளிட்டவை பூனைகளின்  புராதனத்தை சுட்டிக் காட்டுகின்றன. மறு பிறப்பின் மீது அதீத நம்பிக்கை கொண்ட பண்டைய எகிப்தியர்கள், இறந்தவர்களின் உடலுடன், அவர்களது செல்லப்பிராணியான பூனைகளையும் பதப்படுத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ‘பாஸ்டெட்’ 

என்ற பூனைக் கடவுளை எகிப்தியர்கள் வணங்கி யுள்ளனர். பூனைக் கடவுளுக்கென்று தனி ஆலயங்களே இருந்திருக்கின்றன.  நச்சுப்  பாம்புகளையும், நோய்களைப் பரப்பும் எலி போன்ற சிறு உயிரினங்களையும் பூனைகள் கொல்வதால், அவற்றை வழிபட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  பூனைக் கடவுளுக்காக சில பலியிடல் களைக் கூட நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பது, அவர்கள் பூனைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

பொதுவாக, விவசாயம் செய்யத் தொடங்கிய காலத்தில், தானியங்களை உண்ண வந்த எலி போன்ற உயிரினங்களைப் பிடிப்பதற்காகவே,  பூனைகளை மனிதர்கள் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக அவை மனிதனுடன் இணைந்துவிட்டன. ஒரு காலத்தில் மிகுந்த ஆக்ரோஷமாக இருந்த காட்டுப் பூனைகள், ஒரு கட்டத்தில் தடையை உடைத்து மனிதர்களுடன் இணைந்துள்ளன. எகிப்து பகுதிகள் பூனைகளின் பூர்வீகமாக இருந்திருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பூனைகள் சராசரியாக 2.50-லிருந்து 7 கிலோ வரை எடை கொண்டவை. மெய்ன்கூன் உள்ளிட்ட சில வகை இனங்கள் எப்போதாவது 11 கிலோவுக்கும் கூடுதலாக வளர்கின்றன. பூனைகளின் சராசரி உயரம் 23 முதல் 25 செ.மீ. நீளம் சுமார் 46 செ.மீ. பொதுவாக ஆண் பூனைகள்,  பெண் பூனைகளை விட பெரிதாகக் காணப்படும். வால் சராசரியாக 30 செ.மீ. இருக்கும்.

இனிப்பு சுவையை அறியாது!

விலா எலும்புகளால் பூனையின் முன்னங்கால்கள் இணைக்கப்பட்டுள்ளதால், தலை நுழையும் எந்த சிறிய இடத்திலும்,  பூனைகளின் உடலும் நுழையும். அவை நடக்கும்போது ஓசை எழாத வகையில், மெத்தை போன்ற பாத அமைப்பை பெற்றுள்ளன. நுகரும் புலன் மனிதரைவிட 14 மடங்கு அதிகம். எனினும், அவற்றால் இனிப்புச் சுவையை அறிய முடியாது. பூனைகள் சுமார் இரு மாதங்கள் வரை குட்டிகளை சுமக்கும். சமீபத்திய ஆண்டுகளில் பூனைகளின் சராசரி ஆயுள்காலம் உயர்ந்துள்ளது. 1980-களில்

7 ஆண்டுகள் இருந்த நிலையில், 2014-ல் 12-15 ஆண்டுகளாக சராசரி ஆயுட்காலம் உயர்ந்துளளது. எனினும்,சில பூனைகள் 30 வயது வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. பொதுவாக, நாய் வளர்ப்போருக்காக பல்வேறு அமைப்புகள் உள்ளன. தமிழகத்தில் முதல்முறையாக பூனைகளின் நலன் காப்பதற்காக கோவையில் ‘கேட்டரி கிளப்’ தொடங்கப்பட்டுள்ளது.

பூனை ரசிகர்கள் இணைந்து தொடங்கியுள்ள இந்த அமைப்பின் தொடக்க விழா கோவையில்  நடைபெற்றது. பூனை நிபுணர் பெங்களூரு சுதாகர்  காடிகினேனி, இந்த அமைப்பை தொடங்கிவைத்தார். கோவை கேட்டரி கிளப் தலைவராக பிரதாப், செயலராக ஆனி கரோல், இணைச் செயலராக ரீகன், பொருளாளராக பிரதீபா பொறுப்பேற்றனர்.

இந்த அமைப்பு குறித்து தலைவர் பிரதாப் கூறும்போது, "உலக அளவில் 100-க்கும் மேற்பட்ட பூனை வகைகளும், இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட வகைகளும் உள்ளன. குறிப்பாக, பெர்சியன், இமாலயன், சைபீரியன், பெங்கால், மெயின்குன் மற்றும் நாட்டு வகைகள் இந்தியாவில் வளர்க்கப்படுகின்றன.

பொதுவாகவே, பூனைகள் மனிதர்களுடன் மிகவும் நட்பாகப் பழகும் தன்மை கொண்டவை. கடும் மன உளைச்சலில் இருப்பவர்கள், பூனைகளுடன் இருக்கும்போது அந்த அழுத்தத்திலிருந்து விடுபடுகின்றனர். நாய்க்குத் தேவைப்படுவதுபோல, பூனை வளர்க்க அதிக இடம் தேவைப்படுவதில்லை. குறைந்த இடத்தில் அல்லது படுக்கைக்கு அருகிலேயே பூனை தங்கிக் கொள்ளும். பூனைகள் மிகவும் சுத்தமாக இருக்கும் தன்மை கொண்டவை. தன்னைத்தானே அவை சுத்தம் செய்துகொள்ளும். நாய்களைக் காட்டிலும், பூனைகள்தான் குழந்தைகளைப் பெரிதும் கவரும் தன்மை கொண்டவை. நாய்கள் வளர்ப்போருக்காக பல அமைப்புகள் உள்ளன. பூனை வளர்ப்போர் நலனுக்காக சர்வதேச, தேசிய அளவில் அமைப்புகள் இருந்தாலும், தமிழகத் தில் தற்போது தான் முதல்முறையாக பூனைகளுக்கான பிரத்யேக கிளப் தொடங்கியுள்ளோம். பூனைகளின் நலன், பூனைகளை நேசிப்பவர்களுக்கு வழிகாட்டுதல்,  வளர்க்கப்படும் பூனைகளின் தரத்தை மேம்படுத்தல், ஆரோக்கியமான முறையில் பூனைகளை வளர்க்க உதவுதல் ஆகியவையே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

பூனைகள் கண்காட்சி...

இதேபோல, பூனைகளுக்கென தனி கண்காட்சியை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூனைகளை பங்கேற்கச் செய்வோம். மேலும், அழகிய, ஆரோக்கிய  பூனைகளுக்கான போட்டிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.  பூனைகள் குறித்த மூட நம்பிக்கைக்கு எதிரான விழிப்புணர்வுப் பணியில் ஈடுபடுவோம்" என்றார்.

தொடக்க விழாவிலேயே, பூனைகள் உருவப் படங்கள் கொண்ட கேக்கை வெட்டி அசத்தினர். மேலும், பல்வேறு பூனைகளைக் கொண்ட, சிறிய கண்காட்சி, பூனை களுக்கான ஆரோக்கிய உணவுப் பொருட்கள், மருந்துகள்  கண்காட்சி யும் நடத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x