Published : 08 Sep 2014 09:09 AM
Last Updated : 08 Sep 2014 09:09 AM
திமுக உட்கட்சி தேர்தல்கள் முடிந்ததும் மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு அவருக்கு தலைமைக் கழகத்தில் முக்கியப் பதவி வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மதுரை மாநகர் மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் தளபதி தொடங்கி புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தி, ‘எஸ்ஸார்’ கோபி, பகுதிச் செயலாளர் ரவீந்திரன், முன்னாள் இளைஞரணி மாவட்டச் செயலாளர் ஒச்சுபாலு என அழகிரி முகாம் வி.ஐ.பி-க்கள் ஒவ்வொருவராய் ஸ்டாலின் பக்கம் சாய்ந்து விட்டனர். இப்போது, “அழகிரிக்காக உயிரையும் கொடுப்போம்’ என்று முழங்கிக் கொண்டிருந்த மதுரை முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியனும் ஸ்டாலினை சந்தித்து அவர் பக்கம் சாய்ந்துவிட்டார்.
இதுகுறித்து அழகிரி வட்டாரத்திலிருந்து ‘தி இந்து’விடம் பேசியவர்கள், ‘‘ஸ்டாலின் பக்கம் தாவுவதற்கு ஒரு மாதம் முன்பே மிசா பாண்டியன் முடிவெடுத்து விட்டார். அதற்காக, இதுவரை அழகிரியை விட்டு ஸ்டாலின் பக்கம் போனவர்கள் யாரும் செய்யாத ஒரு காரியத்தையும் அவர் செய்தார். அண்மையில் ஸ்டாலினை வரவேற்று மிசா பாண்டியன் அச்சடித்திருந்த போஸ்டரை அழகிரி வீட்டுக்கு எதிரிலேயே கொண்டு வந்து ஒட்டினார்கள்.
இந்நிலையில், தலைமையிடம் விளக்கக் கடிதம் கொடுக்கப் போன மிசா பாண்டியனை தலைவர் பார்க்க மறுத்துவிட்டதாகச் சொல்கின்றனர். ‘அழகிரியை வைத்து சம்பாத்தியம் பண்ணியவர்களை எல்லாம் நான் பார்க்க தயாரில்லை’ என்று தலைவர் சொல்லி இருக்கிறார். அதனால் மிசா, ஸ்டாலினை மட்டும் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். இந்த விஷயத்தை நாங்கள் அழகிரியிடம் சொன்னபோது, ‘மிசா ஒரு ஜோக்கர், அவர் ஏற்கெனவே அதிமுக-வுக்கு போயிட்டு வந்தவர்தானே’னு சொல்லிட்டாரு. அவரைப் பொறுத்தவரை மிசா போனதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை’’ என்று சொன்னார்கள்.
கருணாநிதி உங்களை சந்திக்க மறுத்தது உண்மையா? என்று மிசா பாண்டியனிடம் கேட்டபோது, ‘‘நான், முன்னாள் மேயர் குழந்தைவேலு, முன்னாள் மாநகர் மாவட்டச் செயலாளர்கள் தளபதி, வேலுச்சாமி ஆகிய நாலு பேரும்தான் தலைவரைப் பார்க்க வீட்டுக்குப் போனோம். தலைவரிடம் எனது விளக்கக் கடிதத்தைக் கொடுத்தேன்.
தலைவரை மாத்திரமல்ல.. தயாளு அம்மாளையும் நாங்கள் பார்த்தோம். எந்நேரமும் கலகலப்பாய் இருக்கும் அந்த வீடு இப்போது இருக்கும் நிலையைப் பார்த்து நாங்கள் ரொம்பவே வேதனைப்பட்டுப் போனோம். தலைவர் எங்களை பார்த்தாரா இல்லையா என்பது மதுரையில் இருப்பவர்களுக்கு எப்படித் தெரியும்? மிசா பாண்டியன் அழகிரியை வைச்சு சம்பாதிச்சவன். நீங்கள்தான் அழகிரியால் எதையுமே சம்பாதிக் காமல் தெருவில் நிற்பவர்கள் என்று சொல்லி தலைவர், அவர்களை மட்டும் வரச் சொல்லி பார்த்தாராமா?’’ என்றார்.
அழகிரி விசுவாசியான நீங்கள் எதற்காக ஸ்டாலின் பக்கம் போனீர் கள்? என்று அவரைக் கேட்டதற்கு, ‘‘அழகிரி அரசியலைவிட்டு ஒதுங்குவதுபோல ஒரு சூழலில் இருக்கிறார். நாங்களும் ஒதுங்கி இருந்தால் தொண்டன் கேள்வி கேட்கிறான். ‘நீங்களெல்லாம் பதவி சுகத்தை அனுபவிச்சிட்டு நல்லா சம்பாத்தியம் பண்ணிட்டு ஒதுங்கிட்டீங்க’ன்னு அவன் கேட்கிற கேள்விக்கு எங்களால் பதில் சொல்ல முடியல.
கடந்த ஒரு மாசமா நான் அழகிரி யிடம் பேசுறதில்லை. அவருக்கு சில சங்கடங்கள் இருப்பதுபோல எனக்கும் சில சங்கடங்கள் இருக்கு. எல்லாத்தையும் வெளியில் சொல்லவும் முடியாது. அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன். என்னைப் பொறுத்தவரை அழகிரி மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். கட்சிக்கு அப்பாற்பட்டு அழகிரி, அம்மாவையும் அப்பாவையும் சந்தித்து நலம் விசாரித்து அவர்களுக்கு தைரியம் சொல்ல வேண்டும். திமுக தலைவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்பது எனது ஆசை. ஆனால், அரசியலைப் பொறுத்தவரை இப்படித்தான் இருக்க வேண்டும் என நான் ஆலோசனை சொல்ல முடியாது’’ என்றார் மிசா பாண்டியன்.
இதனிடையே, அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதற்கு செல்வி தரப்பில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டதாகச் சொல்பவர்கள், ’’தலைமைக் கழகத்தில் தனக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று முக்கியக் கோரிக்கைகளை அழகிரி தரப்பிலிருந்து வைத்தி ருக்கிறார்கள். மூன்றுமே ஏற்கப் பட்டுவிட்டன. அழகிரிக்கு விசு வாசமான டி.கே.எஸ்.இளங் கோவனை கலைஞர் டி.வி-யில் இயக்குநராக போட்டதுகூட அதற்கான ஒரு தொடக்கம்தான். உட்கட்சி தேர்தல்கள் நடக்கும் சமயத்தில் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தால் தேவையற்ற சர்ச்சைகள் வரலாம் என்பதால் தேர்தல்கள் முடிந்ததும் அழகிரியை கட்சியில் சேர்த்து அவருக்கு தலைமைக் கழகத்தில் முக்கியப் பொறுப்பு வழங்க முடிவெடுத்திருக்கிறது தலைமை’’ என்று சொல்கின்றனர்.
திமுக தலைவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்பது எனது ஆசை. ஆனால், அரசியலைப் பொறுத்தவரை இப்படித்தான் இருக்க வேண்டும் என நான் ஆலோசனை சொல்ல முடியாது என்றார் மிசா பாண்டியன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT