Published : 09 Sep 2014 09:38 AM
Last Updated : 09 Sep 2014 09:38 AM

எதிர்ப்பை விட புறக்கணிப்பே மேல்: தனுஷ் பட வழக்கில் நீதிபதி கருத்து

சிலவற்றை எதிர்ப்பதை விட, அவற்றை புறக்கணிப்பதன் மூலம் அது தொடர்பான நினைவுகளை மக்கள் மனதிலிருந்து விரைவில் அகற்ற முடியும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீ ராமகிருஷ் ணரின் பக்தர்களான எஸ்.துரைராஜ், எஸ்.பாண்டுரங்கன், ஏ.பழனிவேலு, கே.அருணாசலம் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

“ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்ததால்தான் தன்னால் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியவில்லை என்றும், அதனால் தன்னால் வேலைக்கான நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை எனவும் வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு வசனம் உள்ளது.

இந்த வசனமானது ஸ்ரீ ராம கிருஷ்ணா மிஷன் பள்ளியின் புகழைக் கெடுக்கும் வகையில் உள்ளதால், இந்த வசனத்தை நீக்கவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

தீர்ப்பில் அவர் கூறியுள்ள தாவது: 1893-ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச மத மாநாட்டில் பேசிய சுவாமி விவேகானந்தர், பொறுமை மற்றும் சகிப்புத் தன்மையின் சிறப்புகளை உலகுக்கு கற்றுக் கொடுக்கும் நாட்டிலிருந்து தான் பிரதிநிதியாக வந்திருப்பதாக பெருமையுடன் குறிப்பிட்டார். இந்த மனுவை விசாரிக்கும் நானும், மனுவை தாக்கல் செய்துள்ள மனுதாரர்களும் உண்மையிலேயே விவேகா னந்தரை பின்பற்று பவர்களாக இருந்தால், திரைப் படத்தில் வரும் சர்ச்சைக்குரிய அந்த வசனத்தை புறக்கணித்து விட வேண்டும்.

சில விஷயங்களை எதிர்ப்பதை விட அவற்றை புறக்கணிப்பதன் மூலம் மக்கள் மனதில் இருந்து விரைவில் அது தொடர்பான நினைவுகளை அகற்றி விட முடியும். மனுதாரர்கள் குறிப்பிடும் படம் ஏற்கெனவே தியேட்டர்களில் ஓடி முடிந்து விட்டது. இந்த மனுவை ஏற்றுக் கொண்டு, நோட்டீஸ் அனுப்புவதன் மூலம் மீண்டும் அந்த படம் தியேட்டரில் ஓடுவதற்கான வசதியை செய்து கொடுக்க நான் விரும்பவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x