Published : 10 May 2019 07:19 PM
Last Updated : 10 May 2019 07:19 PM
தமிழகத்தில் உள்ள ஒரு சில குழுக்கள் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்கின்றன. குற்றவாளிகளுக்குத் தமிழர் என்று பெயரிடுகிறார்கள். நீதிமன்றம் அவர்களை விடுவித்தால் மகிழ்ச்சி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயகுமார், நளினி ஆகிய 7 பேரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என, உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதையடுத்து, அவர்களை விடுதலை செய்யும்படி, ஆளுநருக்கு கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு பரிந்துரை செய்தது. பரிந்துரைத்து 8 மாதங்களான பின்பும், ஆளுநர் இன்னும் முடிவெடுக்காததற்கு, எழுவர் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கும் காரணமாக இருக்கும் என பரவலாகப் பேசப்பட்டது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால், எழுவர் விடுதலையை இனியும் தாமதிக்காமல், தமிழக அரசின் பரிந்துரை கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என, திமுக, மதிமுக, விசிக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர்.
அதிமுக, மத்திய அரசிடம் இதுகுறித்து தொடர்ந்து வலியுறுத்தும் என்றது. இந்நிலையில், எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கோ நீதிமன்றத்துக்கோ அழுத்தம் தரக்கூடாது, என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார்.
இன்னும் இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடு எடுக்க தமிழக காங்கிரஸ் தயங்குகிறதா என அவரிடமே கேள்வி எழுப்பினோம்.
எழுவர் விடுதலையில் காங்கிரஸின் நிலைப்பாடு தான் என்ன? ஏன் இந்த விஷயத்தில் காங்கிரஸ் தெளிவற்ற நிலையில் இருக்கிறது?
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் தங்களது விடுதலையைக் கோருகிறார்கள். அவர்களுக்கு விடுதலை அளிக்கலாமா, வேண்டாமா என்பது பற்றி அரசியல் கட்சிகள் கருத்து சொல்வதில் பொருள் இல்லை. சட்டம் தான் அவர்களை விடுவிக்கலாமா விடுவிக்கக் கூடாதா என்பதை சொல்ல வேண்டும். இந்த நாடு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் இயங்குகிறது. எனக்குப் பிடிக்காதவர்களுக்கு சிறை தண்டனையும், பிடித்தவர்களுக்கு விடுதலையும் எனக் கோருவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்புடையதல்ல.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, எங்கள் கட்சியின் தலைமை, கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக அறிவித்துவிட்டது. சோனியா காந்தி நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முன்முயற்சி எடுத்து, அதனைச் செய்தும் கொடுத்தார்கள்.
சோனியா காந்தி, தன்னுடைய கணவரை இழந்திருந்தாலும் கூட ஒரு பெண்ணுக்காக அதனைச் செய்தார். தன் சொந்த இழப்பைக் கூட பொருட்படுத்தாமல் அவர் செய்த மிகப்பெரிய தியாகம் அது. அதனை உலகத்தில் எந்தவொரு பெண்ணும் செய்யத் துணிய மாட்டார்கள்.
ஆனால், தமிழகத்தில் உள்ள ஒரு சில குழுக்கள் குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்கின்றன. குற்றவாளிகளுக்குத் தமிழர் என்று பெயரிடுகிறார்கள். ஒரு குற்றவாளியை, குற்றவாளியாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர, அவரின் மதம், இனம், சாதி, மொழி, பிராந்தியத்தை வைத்து அவரை கணக்கிடக் கூடாது. ஒரு தமிழர் கொலை செய்தால் அவரை விட்டு விடலாம் என்று சொன்னால், தமிழ்நாட்டில் நீதிமன்றங்களும் தேவையில்லை, சிறைச்சாலைகளும் தேவையில்லை. அவற்றையும் சேர்த்து மூடிவிடலாம்.
இப்போது கூட எங்களின் கருத்து, அவர்கள் 28 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார்கள். எனவே அவர்களை விடுதலை செய்யலாம் என நீதிமன்றம் சொல்லுமேயானால், மனதார அதனை வரவேற்போம். அதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல மாட்டோம். அதற்கு எதிராக எந்தக் கருத்தையும் சொல்ல மாட்டோம். ஆனால், இங்கிருக்கும் ஒருசிலர் நீதிமன்றத்திற்கும், ஆளுநருக்கும் அழுத்தம் கொடுத்துப் பார்க்கிறார்கள். "நாங்கள் சொல்கிறோம் அவர்களை விடுதலை செய்யுங்கள்" என்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்ல அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று புரியவில்லை.
இதைப்போன்ற ஒரு இழப்பு அவர்களின் குடும்பத்திலோ, அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மத்தியிலோ ஏற்பட்டால், இதைப்போன்ற உபதேசங்களை அவர்கள் செய்வார்களா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். நீதிமன்றம் அவர்களை விடுவித்தால் எங்களுக்கு மகிழ்ச்சி. அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.
அதே நீதிமன்றம் தானே, ஆளுநர் இதில் முடிவெடுக்கலாம் என்றிருக்கிறது. ஆனால், ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என்பதே, விடுதலைக்கு எதிரான நிலைப்பாடு தானே?
ஆமாம், அவர்களை விடுவிப்பது குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று தான் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. நீதிமன்றம் எதற்காக இந்தப் பிரச்சினையை ஒரு சுற்றுக்கு விடுகிறது என்றே தெரியவில்லை. ஒரு உச்ச நீதிமன்றம் முடிவு செய்தால், அவர்கள் 28 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டார்கள், எனவே அவர்களை விடுவித்து விடலாம் என தாராளமாக சொல்லலாம். ஆனால், நீதிமன்றமே சொல்ல முடியாத அளவுக்கு அவர்கள் மீது குற்றத்தினுடைய நிழல் படிந்திருக்கிறதோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161 மூலமாக ஆளுநர் அவர்களை விடுவிக்கலாம் என சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர்களின் விடுதலையை ஆதரிப்பதில் ஏன் இன்னும் தயக்கம்?
ஆளுநர் முடிவெடுக்கலாம் என்றுதான் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அவர் என்ன முடிவை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லவில்லை. ஆளுநர், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்றும் அவர்களை விடுதலை செய்யலாம். அல்லது அவர்களை விடுதலை செய்ய வேண்டாம் எனவும் அவர் முடிவு செய்யலாம். அந்த உரிமை அவருக்கு இருக்கிறது.
நீதிமன்றம், மாநில அரசின் பரிந்துரையை ஏற்று விடுதலை செய்ய வேண்டும் என சொல்லவில்லை. ஆளுநர் எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம். ஆளுநர் இப்படித்தான் முடிவெடுக்க வேண்டும் என, நீதிமன்றமே அவருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அதுவொரு சட்டப் பிரச்சினை.
இதில் இன்னொரு பிரச்சினை, இந்த வழக்கு சிபிஐயால் தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டது. அதனால், இதில் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் ஆளுநர் இதில் எந்த முடிவும் எடுக்க முடியாது. ஏனெனில், ஆளுநர் உள்துறை அமைச்சகத்திற்குக் கட்டுப்பட்டவர்.
எழுவர் விடுதலையை தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரைத்து 8 மாதங்களாயிற்று. ஆளுநர் முடிவெடுக்காததை சுட்டிக்காட்டுவதில் தமிழக காங்கிரஸுக்கு என்ன தயக்கம்?
இது அவருடைய முடிவு. அவர் அரசியல்வாதி இல்லை. எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்பது இல்லை. அது அவருடைய தனிப்பட்ட உரிமை. சட்ட நிபுணர்களுடன் அவர் கலந்து பேசலாம். உச்ச நீதிமன்றம் இன்னும் என்ன சொல்கிறதென்று பார்க்கலாம். மாநில அரசின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை., எனவே அவருக்கு அதில் தெளிவு வர வாய்ப்பில்லை.
ஆளுநர் ஏன் இதில் முடிவெடுக்கத் தயங்குகிறார் என்றால், அவர் மட்டுமே இதில் ஒரு முடிவெடுக்க முடியாது. மாநில அரசின் வழக்காக இருந்தால், மாநில அரசின் பரிந்துரையை ஏற்று அவர்களை விடுதலை செய்யலாம். ஆனால், இது மத்திய புலனாய்வுத் துறையால் தொடரப்பட்ட வழக்கு. பின்னர் இதில் முடிவு செய்ய வேண்டியது மத்திய உள்துறை அமைச்சகம். எனவே இதில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. ஒருநாள் செய்தியாகக் கருதி இதில் கருத்து சொல்வது தவறு. இதனை முழுமையாக அலசி அராய்ந்துதான் கருத்து சொல்ல வேண்டும்.
இந்த விஷயத்தில் தமிழக காங்கிரஸ் தன்னுடைய நிலைப்பாட்டை ஆளுநரிடம் வலியுறுத்துமா?
இல்லை. நாங்கள் அந்த வேலையைச் செய்யமாட்டோம். எந்தவொரு மனித ஜீவனும் தண்டிக்கப்பட வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. ஏற்கெனவே காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற தலைவர்களை நாங்கள் இழந்திருக்கிறோம். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது, அவருடன் சேர்ந்து 14 பேரும் கொல்லப்பட்டார்கள். அவர்களையும் நாங்கள் இழந்திருக்கிறோம். எல்லோரையும் நாங்கள் மனதில் வைத்திருக்கிறோம். அதனால், நாங்கள் பழிவாங்கும் விதமாக எதனையும் சொல்லமாட்டோம்.
ஆனால், ஆளுநர் சட்டத்தின் வழி தான் நடக்க வேண்டும். அவருக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவும் கூடாது, கொடுக்கவும் முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அதற்கு இடமில்லை.
ஒரு சில குழுக்கள் ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறுகிறீர்கள். திமுக, மதிமுக, விசிகவும் அந்த ஒரு சில குழுக்களில் உள்ளதா?
அந்தக் கட்சிகள் சொல்வதை தவறு என நாங்கள் சொல்லவில்லை. எங்கள் கருத்தை நாங்கள் சொல்கிறோம். அவ்வளவுதான். அவர்கள் கருத்தை சொல்லக்கூடாது என்றால் அது சர்வாதிகாரம். கூட்டணி தேர்தலுக்கான கூட்டணிதான். இந்த விவகாரத்தால் எந்தவொரு முரணும் எங்களுக்குள் ஏற்படாது.
"என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்" என ராகுல் காந்தி கூறினார். இருந்தும் ஏன் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் எதிர் நிலைப்பாட்டை எடுக்கிறது?
எதிர்நிலை என்றெல்லாம் ஒன்றும் இல்லை. சட்டம் தான் கடமையைச் செய்ய வேண்டும். விடுதலை செய், செய்யாதே என சொல்ல அரசியல் கட்சிகள் யார்? ராகுல் காந்தியோ, சோனியா காந்தியோ அவர்களை மன்னித்துவிட்டதாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். நானும் அவர்களை மன்னித்துவிட்டேன், எனக்கு ஒன்றும் அவர்கள் மீது வருத்தமில்லை. இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டீர்களானால், அதன்பிறகு இந்த ஊரில் சிறைச்சாலையே தேவையில்லையே. ஒரு தமிழர் வேறு யாரையாவது கொலை செய்துவிட்டால் விட்டுவிடலாமே. எதற்கு விசாரிக்க வேண்டும்? நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். எதற்கு காவல்துறையிடம் செல்ல வேண்டும்?
இதனை எல்லா வழக்குகளுடன் சேர்த்துப் பார்க்க முடியுமா? உதாரணமாக, பேரறிவாளனை விசாரித்தது, வாக்குமூலத்தைப் பதிவு செய்ததில் உள்ள குறைபாடுகளை விசாரித்த சிபிஐ அதிகாரி தியாகராஜன் ஒப்புக்கொண்டுள்ளார்? இது மனித உரிமை சம்பந்தப்பட்டதில்லையா?
எல்லாரும் எல்லாவற்றையும் மாற்றிப் பேசுவார்கள். ஆனால், இத்தனை பேர் விசாரித்து உச்ச நீதிமன்றம் தண்டனை கொடுத்திருக்கிறதே, அதெல்லாம் தவறா? யாரோ ஒருவர் சொல்லிவிட்டதை மட்டும் பெரிதாக்குகிறீர்களேயொழிய, பல்லாயிரக்கணக்கான பக்கங்கள், விசாரணை கமிஷன், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் விசாரித்து தண்டனை வழங்கியது தவறாகிவிடுமா? சட்டம்-ஒழுங்கில் பிரச்சினை ஏற்படும். அவர்களை விடுவித்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும். அந்த முன்னுதாரணத்தை அதன்பிறகு ஒன்றுமே செய்ய முடியாது.
பாஜக-காங்கிரஸ் இரு கட்சிகளும் இந்த விவகாரத்தை அரசியலாக்குவதாக விமர்சனம் உள்ளதே?
மற்ற கட்சிகள் என்ன நிலைப்பாடு எடுக்கின்றன என்பதைப் பாருங்கள். ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டைத் தானே எடுக்கின்றன.
தமிழக காங்கிரஸ் அரசியல் அழுத்தங்களால் இத்தகைய கருத்துகளைச் சொல்வதாக ஒரு ஒரு பேச்சு உள்ளது. உங்களின் கருத்து என்ன?
நான் சட்டம் என்ன சொல்கிறதோ அதைத்தானே சொல்கிறேன். சட்டம் என்ன சொல்கிறதோ அதனை ஏற்றுக்கொள்ளக் கூடிய இந்தியக் குடிமகன் நான். சட்டத்தை வளைக்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன்.
தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT