Published : 21 May 2019 12:00 AM
Last Updated : 21 May 2019 12:00 AM
அரசுப் பள்ளி மாணவர்கள் சி.ஏ. பயில உதவும் வகையில், இந்தி யாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் 12 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பள்ளிக் கல்வித் துறையுடன் ஆடிட் டர்கள் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களும் சி.ஏ. (பட்டய கணக்கர்) படிக்க இந்திய ஆடிட்டர்கள் அமைப்பு (ஐ.சி.ஏ.ஐ.) உதவி வருகிறது. இதற்காக, தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் அமைப்பு சார் பில் கல்வி வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு வின் தலைவரும், தென்னிந்திய பட்டய கணக்காளர் அமைப்பின் செயலருமான கே.ஜலபதி `இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறிய தாவது:
பிளஸ் 2 முடித்தவர்கள் அடிப் படை தேர்வு எழுதியும் (ஃபவுண் டேஷன்), வணிகவியல் கல்வி படித்து, 55 சதவீத மதிப்பெண் களுக்கு மேல் பெற்றவர்கள் நேரடியாக இன்டர்மீடியட் தேர்வும் எழுதலாம். 2 பிரிவுகள் கொண்ட இன்டர்மீடியட் தேர்வில், ஒரு தேர்வில் வென்றால்கூட ஆடிட்ட ரிடம் சேர்ந்து, இறுதித் தேர்வுக்கு தயாராகலாம். 3 ஆண்டு பயிற்சிக்குப் பிறகு சி.ஏ. இறுதித் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று ஆடிட்டராகலாம்.
சி.ஏ. முடித்தவர்கள் ஐ.சி.ஏ.ஐ. எனப்படும் இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பில் பதிவு செய்து, ஆடிட்டிங் தொழிலை மேற்கொள்ளலாம்.
ஐ.சி.ஏ.ஐ. அமைப்புக்கு நாடு முழுவதும் 163 கிளைகளும், சுமார் 3 லட்சம் உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களில் 1.50 லட்சம் பேர் தனியாக ஆடிட்டிங் தொழில் புரிகின்றனர். 1.50 லட்சம் பேர் தொழில் நிறுவனங்களில் ஆடிட்டர்கள், தலைமை கணக்கு அதிகாரிகள் உள்ளிட்ட பணிகளில் உள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் ஆடிட்டர்கள் வேலைவாய்ப்பு உள்ளது. சுமார் 10 லட்சம் பேர் சி.ஏ. படித்து வரு கின்றனர். எனினும், ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் பேரே சி.ஏ. தேர்ச்சி பெற்று, ஆடிட்டர்களாகின் றனர். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, ஆடிட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, மாண வர்களிடையே சி.ஏ. படிப்பு மீதான விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி ஆலோசனைக் குழு உருவாக்கப் பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையுடன் ஆடிட்டர்கள் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 500 ஆடிட் டர்கள் மூலம், இதுவரை 15 ஆயிரம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக் கும் சி.ஏ. படிப்பு குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு விழிப் புணர்வுக் கையேடும் வழங்கப் பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஒவ் வொரு மாவட்டத்திலும் ஒரு வணிகவியல் ஆசிரியர் மற்றும் இரு ஆடிட்டர்கள் கொண்ட சிறப்புக் குழு நியமிக்கப்பட்டு, விழிப்புணர்வுப் பயிலரங்குகள், பயிற்சி முகாம்கள் நடத்தத் திட்ட மிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசுப் பள்ளியில் இருந்தும் சி.ஏ. படிக்க விருப்பமுள்ள மாணவர் களின் பட்டியலை முதன்மைக் கல்வி அலுவலகம் மூலமாகப் பெற்று , மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம்கள் நடத்தும் பணி, நடப்பு கல்வி ஆண்டில் தீவிரப்படுத்தப்படும்.
இதற்காக, கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், கும்பகோணம், சேலம், சிவகாசி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி, மதுரை, வேலூர் ஆகிய 12 இடங்களில், சி.ஏ. கல்வி ஆலோசனைக் குழு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களை www.icai.org, www.sircoficai.org என்ற இணைய தளங்களில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT