Published : 30 May 2019 06:28 PM
Last Updated : 30 May 2019 06:28 PM
திமுகவின் முக்கியப் பதவியான இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக திமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
நீதிக்கட்சி, திராவிடர் கழகமாக பரிணாமம் எடுத்து அதிலிருந்து பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கண்ணீர்த் துளிகள் என விமர்சிக்கப்பட்டு அண்ணா உள்ளிட்ட ஐம்பெரும் தலைவர்களால் 1949-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி ஒரு மழைநாளில் ராயபுரம் ராபின்சன் பூங்காவில் திமுக தொடங்கப்பட்டது.
திமுகவின் முக்கியத் தலைவரான கருணாநிதி 50 ஆண்டு காலம் கட்சிக்குத் தலைவராக இருந்துள்ளார். திமுகவின் ஆரம்பகால ஐம்பெரும் தலைவர்கள் வரிசையில் இல்லாத கருணாநிதி பின்னர் திமுகவின் முக்கியத் தலைவராக மாறினார். 1957-ம் முதன் முதலில் போட்டியிட்ட திமுகவில் ஆண்டு குளித்தலையில் வென்ற அவருடன் வென்றவர்கள் 13 பேர் மட்டுமே. 1962-ம் ஆண்டு தஞ்சையில் போட்டியிட்டு வென்றார் கருணாநிதி.
1967-ல் திமுக ஆட்சியைப் பிடிக்க கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சர் ஆனார். 1969-ல் அண்ணா மறைவுக்குப்பின் திமுக தலைவராகவும், முதல்வராகவும் ஆனார் கருணாநிதி. அதுமுதல் திமுகவின் அசைக்க முடியாத சக்தியானார் கருணாநிதி.
பல தலைவர்கள் வந்தாலும் போனாலும் திமுக என்றால் கருணாநிதிதான் என்பது நடைமுறை ஆனது. அதே காலகட்டத்தில் 1965-ல் மாணவர் அமைப்பு மூலம் காலடி எடுத்து வைத்தார் மு.க.ஸ்டாலின். ஆனாலும் அவருக்கான அங்கீகாரத்தை தலைவர் கருணாநிதி எளிதில் அளிக்கவில்லை. அதன் பின்னர் மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தது இன்று இளம் தலைமுறை அறியாத ஒன்று.
ஸ்டாலினைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை தன் மீது வாங்கிக்கொண்ட சிட்டிபாபு எம்.பி. பின்னர் சிறையில் உயிரிழந்தது திமுகவின் வரலாறு. ஸ்டாலினுக்கான பாதை திமுகவில் கடினமாகவே இருந்தது. அதற்கு முன்னர் ஸ்டாலினுக்கு கட்சியில் முக்கியப் பதவி எதுவும் இல்லை.
தமிழகத்தில் 1980-களில் அனைத்துக் கட்சிகளும் இளைஞர் இயக்கத்தைக் கட்டமைக்க ஆரம்பித்தபோது திமுகவும் இளைஞர் அணியை உருவாக்கியது. அதன் முதல் செயலாளர் ஆனார் ஸ்டாலின். பின்னர் 1989-ம் ஆண்டு அவருக்கு எம்.எல்.ஏ ஆக வாய்ப்பு கிடைத்தது. 1996-ம் ஆண்டு மேயராகப் பொறுப்பேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
திமுகவில் வாரிசு அரசியல் என கண்டனம் எழுந்தது. ஆனால், அது பின்னர் மற்ற கட்சிகளிலும் நடைமுறைக்கு வந்துவிட்டதால் வாரிசு என்கிற கோஷம் எடுபடவில்லை. இந்நிலையில் ஸ்டாலினைத் தொடர்ந்து கனிமொழி, அழகிரி, தயாநிதி மாறன் என வாரிசுகள் வந்தனர்.
சமீபத்தில் திமுகவின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார் ஸ்டாலின், அதற்கு முன்னரே அவர் வகித்த இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர் இளைஞரணியை வலுவாக வழி நடத்தவில்லை என்கிற குற்றச்சாட்டும், தலைமைக்குப் பலரும் ஒத்துழைப்பு இல்லை என்கிற குற்றச்சாட்டும் ஒருசேர வைக்கப்பட்டது.
மறுபுறம் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சு எழுந்தது. அவர் சினிமாவில் நடித்து வந்தார். இது தவிர முரசொலி நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். சினிமா மூலம் பிரபலமான அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கவேண்டும் என்பது பலரது நீண்ட கால கோரிக்கை. தனது அரசியல் பயணத்தை மனதில் வைத்து ஆரம்பத்தில் இதைத் தள்ளிப்போட்டு வந்தார் ஸ்டாலின்.
ஆனால் வீட்டுக்குள்ளும், கட்சிக்குள்ளும் கோரிக்கை வலுத்து வந்தது. ஆரம்பத்தில் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தனது நண்பர் அன்பில் பொய்யாமொழி மகேஷுக்காக மட்டும் பிரச்சாரம் செய்தார் உதயநிதி. அதுதான் அவரது முதல் அரசியல் என்ட்ரி.
அதன் பின்னர் தனது எல்லை எதுவென வகுத்து நாசுக்காக பல விஷயங்களைத் தவிர்த்து சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் உதயநிதி ஸ்டாலின். நடந்து முடிந்த 2019 மக்களவைத் தேர்தலில் கட்சித் தலைமை ஏற்ற தந்தைக்கு உதவியாக பிரச்சாரத்தில் குதித்தார் உதயநிதி ஸ்டாலின்.
பல இடங்களில் அவரது பேச்சு பொதுமக்களைப் பெரிதும் ஈர்த்தது. கேள்வி பதில் பாணியில் அவரது பேச்சு வரவேற்பைப் பெற்றது. தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக பெருவெற்றி பெற உதயநிதியும் காரணமாக இருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இது அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கவேண்டும் என்கிற கோரிக்கைக்கு மேலும் வலு சேர்த்தது.
திமுகவில் உதயநிதி ஸ்டாலினைப் பொறுப்பில் கொண்டு வரவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினை திமுக இளைஞரணி தலைமைப் பொறுப்புக்கு கொண்டுவர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட வாரியாக திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர்.
கமல், ரஜினி, சீமான் போன்றவர்கள் அரசியலுக்கு வரும் நிலையில் திமுகவும் புதிய வடிவம் எடுக்கவும் இளம் தலைமுறையினர் மத்தியில் கட்சியை வலுவாகக் கொண்டு செல்லவும் முடிவெடுத்தாகவேண்டும் என்ற கருத்தும் வைக்கப்படுகிறது. மேற்கண்ட கருத்துகளை திமுக தலைவராக புறந்தள்ளாத ஸ்டாலின் விரைவில் திமுக இளைஞரணியின் மாநிலத் தலைமைக்கு உதயநிதி ஸ்டாலினை நியமிக்க உள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்பு வரும் ஜூன் 1 அல்லது தாத்தாவின் பிறந்த நாள் அன்று பேரனுக்குப் பரிசாக ஜூன் 3 அன்றும் அறிவிப்பு வெளியாகலாம் என திமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மகேஷிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படுவதாக கூறப்படுவது குறித்து?
ஆமாம். அப்படிப்பட்ட வேண்டுகோள் கட்சியின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தீர்மானம் போட்டு கோரிக்கையாக கட்சித் தலைமைக்கு வந்தவண்ணம் உள்ளது. இன்றுகூட திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தீர்மானம் போட்டு அனுப்பியுள்ளனர்.
நெருங்கிய நண்பர் என்கிற முறையில் நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கண்டிப்பாக வரவேற்கிறேன். உதயநிதிக்குக் கிடைக்கிற வரவேற்பும், பொதுத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பொதுமக்களை அணுகிய விதமும் யதார்த்தமான ஒன்று. பொதுமக்களிடம் நேரடியாகப் பேசும் விதத்தில் அவரது பிரச்சாரம் அமைந்தது. அதை அனைவரும் வரவேற்றார்கள்.
இன்றைய இளம் தலைமுறையினரைக் கவரும் தலைவராக அவர் இருக்கிறார். அவர் பொறுப்புக்கு வருவதைக் கட்சியில் உள்ள அனைவரும் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT