Published : 30 May 2019 10:05 AM
Last Updated : 30 May 2019 10:05 AM

வாழ்க்கையை அழகாக்கும் புகைப்படங்கள்- சாவித்ரி போட்டோ ஹவுஸ் சகோதரர்கள்

வாழ்வின் அழகான தருணங்களைப் பதிவு செய்து, எப்போதும் அந்த நினைவுகளைச் சுமந்து கொண்டிருப்பவை புகைப்படங்கள்தான். என்னதான், செல்போனிலும், கம்ப்யூட்டரிலும் புகைப்படங்களை வைத்திருந்தாலும், அதை அழகாக பிரிண்ட் செய்து, ஆல்பமாக்கிப் பார்க்கும்போது கிடைக்கும் நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் அதில் கிடைக்காது. இந்திய அளவில் புகைப்பட பிரிண்டிங் கலையில் அசத்துகின்றனர் கோவை சாவித்ரி போட்டோ ஹவுஸ் உரிமையாளர்கள் என்.என்.பரசுராம் குரு (எ) குருவும், என்.என்.மகாதேவன் (எ) கிருஷ்ணனும்.

கோவை ராம் நகரின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்ட சாவித்ரி போட்டோ ஹவுஸ் சென்றபோது, பம்பரமாய் சுற்றிக் கொண்டிருந்தனர் சகோதரர்கள். மூத்தவர் பரசுராம் குருவிடம்(53) பேச்சுக்கொடுத்தோம்.

“எங்கள் பூர்வீகம் பாலக்காடு. அப்பா நரசிம்மன் தனியார் நிறுவன அதிகாரி. அம்மா சாவித்ரிக்கு சொந்த ஊர் சென்னை. அம்மாவின் அப்பா என்.ஆர்.மகாதேவய்யர், இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் நிறுவனத்தின் ஸ்டாக்கிஸ்ட். சென்னை, கோவையில் அவருக்கு கிளைகள் இருந்தன.

நானும், தம்பி மகாதேவன் கிருஷ்ணனும் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.  அப்பாவை அடிக்கடி டிரான்ஸ்ஃபர் செய்து கொண்டிருந்தார்கள். இதனால் 1972-ல் கோவையில் உள்ள கிளையைப் பார்த்துக்கொள்ளும்படி தாத்தா மகாதேவய்யர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, நாங்கள் கோவைக்கு வந்துவிட்டோம்.

கோவை அவிலா கான்வென்ட், தடாகம் சாலை பாரத் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், கோவைப்புதூர் சிபிஎம் பள்ளியில் பி.காம். முடித்தேன். கல்லூரியில் படிக்கும்போதே புகைப்பட பிரிண்டிங் தொடர்பான தொழிலுக்கு வந்து விட்டேன். அந்த சமயத்தில், கருப்பு வெள்ளை புகைப்படங்கள் உச்சத்தில் இருந்தன. ஆனால், இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் நிறுவனத்தில் ஃபிலிம் உற்பத்தி கொஞ்சம் குறைந்தது. ஃபிலிம் ரோல்கள் கிடைக்காததால் அப்பா சிரமப்பட்டார். இதையடுத்து, கலர் ஃபிலிம் விற்பனையில் கவனம் செலுத்தத் தொடங்கினோம். ஆனால், நாங்கள் வியாபாரத்தில் நுழைவதை அப்பா விரும்பவில்லை. நன்கு படிக்க வேண்டுமென ஆசைப்பட்டார். இதனால் நான் சி.ஏ. படிப்பில் சேர்ந்தேன். அதேபோல, தம்பி மகாதேவன், சட்டம் படிக்கத் தொடங்கினார்.

கலர் ஃபிலிம் ரோல்...

கோடைவிடுமுறையில் சென்னையில் உள்ள தாத்தா வீட்டுக்குச் செல்வோம். கலர் ஃபிலிம் விற்பனை செய்யும் நண்பர்களை அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் நாங்கள் கலர் ஃபிலிம் ரோல்களை வாங்கி, கோவையில் விற்பனை செய்யத் தொடங்கினோம். அப்போது, எங்கள் கடை ஒப்பணக்கார வீதியில் இருந்தது. நானும், தம்பியும் சைக்கிளில் ஒவ்வொரு ஸ்டூடியோவாகச் சென்று, கலர் ஃபிலிம் ரோல்களையும், அதை பிரிண்ட் செய்வதற்குத் தேவையான பேப்பர் களையும் வழங்கினோம்.

கொஞ்சம் வளர்ந்த நிலையில், 1991-ல் காந்திபுரம் ராம் நகரில், 200 சதுர அடி பரப்பில் ஒரு அறையில் கடையைத் தொடங்கினோம். ஃபிலிம்கள், லைட்டுகள், என்லார்ஜர்கள் உள்ளிட்ட புகைப்படக் கலைதொடர்பான அனைத்தையும் விற்கத் தொடங்கினோம். 1999-ல்டிஜிட்டல் பிரிண்டிங் அறிமுகமானது. ஃபிலிம் முறை உச்சத்தில் இருந்த சமயத்தில், புதியடிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் சிரமம்இருந்தது. டிஜிட்டல் கேமரா,கம்ப்யூட்டர், ஃபிளாப்பி குறித்தெல்லாம் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினோம். கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள போட்டோ ஸ்டூடியோகாரர்களுக்கு இவற்றை அறிமுகம் செய்துவைத்து, டிஜிட்டல்தான் இனி எதிர்காலம் என்பதைப் புரியவைத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக டிஜிட்டல் போட்டோகிராபி பரவிய நிலையில், எங்கள் வணிகமும் வளர்ந்தது.

டிஜிட்டல் கேமராக்களின் வருகை...

2004-05-ம் ஆண்டுகளில் டிஜிட்டல் கேமராக்களின் தரம்  வெகுவாக உயர்ந்தது. பொதுமக்களும் அதிக அளவில் டிஜிட்டல் கேமராக்களை வாங்கிப் பயன்படுத்தினர். அந்த சமயத்தில், டிஜிட்டல் கேமராக்களுடன், கம்ப்யூட்டர்கள், ஸ்கேனர்கள் என அனைத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கினோம். நாங்கள் இருந்த கட்டிடடம் முழுவதும் எங்கள் கடை விரிவடைந்தது. 2007 முதல் 2012 வரை கொடாக், கேனான், சோனி, நிக்கான், ஃப்யூஜி, பேனசோனிக், ஒலம்பஸ், கேசியோ என அனைத்து பிராண்டுகளும் பல வகையான கேமராக்களை அறிமுகம் செய்தன.

ஸ்மார்ட்போன்களின் வருகையால்2012-க்குப் பிறகு டிஜிட்டல் கேமராக்களின் விற்பனை குறையத் தொடங்கியது. அதேசமயம், டிஎஸ்எல்ஆர் விற்பனை அதிகரித்தது. ஆன்லைன் வர்த்தகத்தால் கேமரா சார்ந்த பொருட்களின் விற்பனை குறைந்தது. எனினும், விலை மதிப்புமிக்க பொருட்களை கடையில்தான்  வாங்கினர்.

விற்பனை ஒருபுறம் இருந்தாலும், 2010 முதல் புகைப்படம் மற்றும் பிரிண்டிங் கலை தொடர்பாக, புகைப்படக் கலைஞர்கள், ஸ்டூடியோகாரர்கள்,  மாணவ, மாணவிகள் என அனைத்துத் தரப்பினருக்குமான விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தினோம்.

‘இந்து’  நாளிதழுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு,  7 ஆண்டுகள் கோடைகால புகைப்படக் கலை விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தினோம். சிறப்பாக புகைப்படம் எடுக்கும் மாணவர்களுக்குப் பரிசு வழங்கி ஊக்குவித்தோம்.

சர்வதேச அளவில் பிரபலமான புகைப்படக் கலைஞர்கள் மூலம், வகுப்புகளை நடத்தினோம். இதில் பயிற்சி பெற்ற மாணவர்கள், சிறந்த தொழில்முறை புகைப்படக் கலைஞர்களாக மாறினர்.  அதேபோல, இயற்கை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி னோம். தற்போது, பொறியியல் மாணவர்கள் நிறைய பேர், புகைப்படக் கலையில் அதிக அளவில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

அமெச்சூர் புகைப்படங்களை பிரிண்ட் செய்வது பெருமளவு குறைந்துவிட்டது. திருமணப் புகைப்படங்கள்தான் பிரிண்டிங் தொழிலுக்கு கைகொடுக்கின்றன. எனினும், நவீனத் தொழில்நுட்பம் புகைப்படக் கலையை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றுள்ளது. நிறைய கல்லூரிகளில் விஷுவல் கம்யூனிகேஷன் துறை வந்துவிட்டது. மேலும், புகைப்படம், வீடியோ கலை தொடர்பான கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மாணவர்களுக்கு மட்டுமின்றி, குறும்படம் தயாரிப்பவர்களுக்கும் பயிற்சி முகாம் நடத்துவதுடன், உபகரணங்கள் வழங்குகிறோம். இப்போதெல்லாம் வாட்ஸ்அப், இமெயில் மூலம் படங்களை அனுப்பி, பிரிண்ட் போட்டுக்கொள்கின்றனர்.

கேண்டிட்  போட்டோகிராபி...

புகைப்படக் கலையைப் பொறுத்தவரை, திறமையான வர்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஏராளமான பெண்களும் ஆர்வமுடன் இக்கலையைக் கற்றுக்கொண்டு, தொழில்முறை புகைப்படக் காரர்களாகியுள்ளனர். வழக்கம்போல போஸ்கொடுக்காமல், எதேச்சையாக புகைப்படமெடுக்கும் ‘கேண்டிட் போட்டோகிராபி’ படங்களுக்குஅதிக வரவேற்பு உள்ளது. புகைப்படக் கலை வல்லுநர்கள், டிவி, சினிமாவில் பெரிய அளவில் சாதிக்கின்றனர். நாங்கள் கடையைத்தொடங்கியபோது 2, 3 ஊழியர்கள் இருந்தனர்.

இப்போது 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கோவை, சேலம், திருப்பூரில் மட்டுமின்றி, பெரிய மால்களிலும் கிளைகள் உள்ளன. மேலும், கேமரா, கம்ப்யூட்டர், செல்போன்களுக்கு எக்ஸ்க்ளூசிவ் ஷோரூம்களையும் நடத்துகிறோம். கேமராவின் அடுத்தகட்ட தொழில்நுட்பமான ‘மிரர்லெஸ் டெக்னாலஜி’  கேமராக்களையும் அறிமுகம் செய்துள்ளோம். எடை குறைந்த இந்த கேமராக்களின் தரம் சிறப்பாக உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x