Published : 19 Apr 2019 04:37 PM
Last Updated : 19 Apr 2019 04:37 PM

சுட்டெரிக்கும் சூரியன்: கோடை கால நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?

இப்போதே வெயில் தனது உச்சத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே சூரியன் சுட்டெரிக்கிறது. இந்த கோடைகாலத்தில் ஏற்படும் நோய்கள் என்னென்ன? அவற்றில் இருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக் கொள்ளலாம்? இதுகுறித்து அரசு மருத்துவர் அனுரத்னா கூறியதாவது:

 

''எல்லாக் கால நிலையிலும் நோய்கள் வருவது இயல்புதான் என்றாலும் ஒரு சில நோய்கள் பூமியின் தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்றவாறு தோன்றும். அத்தகைய நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வேர்க்குரு

உடல் தோலில் வெயில் காரணமாக வியர்வை தேங்கும். இதனால் வரும் சிறு சிறு கொப்பளங்களே வியர்க்குருவாக மாறுகிறது. இவற்றை நாம் கிள்ளக்கூடாது‌. இந்த வேர்க்குருக்கள் மீது பவுடர் பூசினால் வேர்க்குரு மறைந்து விடும் என்பது தவறு.

விற்பனைக்காக குளிர்ச்சி தரும் பூச்சுகள் (பவுடர்) சந்தையில் ஏராளமாக வருகிறன்றன. ஆனால் உண்மையில் அவற்றால் பலன் இல்லை. மாறாக இத்தகைய பூச்சுகள் வியர்வை நாளத்தின் துவாரங்களை அடைப்பதால் வேர்க்குருக்களில் சீழ் பிடிக்க சிலருக்கு வாய்ப்பு உள்ளது.

வேர்க்குருக்கள் வராமல் தடுக்க ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர்  தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் இரு வேளை குளிக்க வேண்டும். இறுக்கமில்லாத, தளர்வான பருத்தித் துணிகளை அணிய வேண்டும்.

சின்னம்மை

சின்னம்மை என்பது வைரஸ் கிருமிகளால் உருவாகும் நோய் ஆகும். உடலில் நீர்ச்சத்து இன்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்றவை இருக்கும்போது சின்னம்மை அதிகம் தாக்க வாய்ப்புள்ளது.

நோய் பாதித்தவரிடம் இருந்து காற்றினால் மற்றவர்களுக்கு இது பரவுகிறது. சின்னம்மை பாதித்தவர்களின் உடலில் சிறு சிறு கொப்புளங்கள் நீர் கோர்த்து காணப்படும். இதனால் உடல் அரிப்பு, உடல் வலி, காய்ச்சல் ஏற்படும். இதற்கு நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை (தண்ணீர், இளநீர், பழங்கள், அரிசிக்கஞ்சி) எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

இதன்மூலம் உடல் சூடு குறையத் தொடங்கும். இதனால் நோயின் தீவிரம் படிப்படியாகக் குறைந்து நோய் குணமடையும். உடல் சோர்வு இருந்தால் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மருத்துவரின் பரிந்துரை இன்றி எவ்வித மாத்திரைகளையும் தாமாக உட்கொள்ளக் கூடாது.

தலைசுற்றல், மயக்கம்

உச்சி வெயில் நேரத்தில் வெளியே செல்பவர்கள் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்சினை தலைசுற்றல், மயக்கம். வியர்வையால் உடலில் உள்ள நீர்ச்சத்துகள் முழுமையாக இழக்கப்படுவதால் ஏற்படும் குறைந்த இரத்த அழுத்தமே இதற்குக் காரணம். இதனால் தலைசுற்றல் மயக்கம் ஏற்படும். மற்ற நேரங்களில் இரத்த அழுத்தம் சீராக இருப்பவர்கள் இதை ஒரு நோயாகக் கருத வேண்டாம்.

இதற்கு, உடலில் நீர்ச்சத்து குறையாத வகையில், தண்ணீர், இளநீர், மோர் போன்ற திரவ உணவுகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெயிலின் தீவிரம் அதிகம் இருக்கும்போது வெளி வேலைகளை தவிர்க்கவும். முடியாதபோது குடை, தொப்பி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். வெளியில்  செல்லும்போது கையில் எப்போதும் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்லுங்கள்.

 

கொசுக்களால் பரவும் நோய்கள்

கோடையில் நீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதால் பெரும்பாலான வீடுகளில் தண்ணீரை சேமித்து வைப்பர். இந்த நீரை முறையாக சேமிக்காவிட்டால் அதில் கொசு உற்பத்தி ஆகும். டெங்குவை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல நீரில்தான் உருவாகும் என்பதால் நீரை சேமித்து வைக்கும்போது அதை முறையாக மூடி வைப்பது அவசியம்.

சேமித்த தண்ணீரை நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தாமல் இருப்பதாலும் பூச்சிகள் உருவாகலாம். அவற்றைக் குளிக்கவோ, துவைக்கவோ பயன்படுத்தும்போது ஒவ்வாமைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு'' என்றார் மருத்துவர் அனுரத்னா.

கொதிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, சரியாகத் திட்டமிட்டு செயல்பட்டால், கோடையையும் கொண்டாடலாம்.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x