Published : 19 May 2019 12:00 AM
Last Updated : 19 May 2019 12:00 AM

நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 600 ரயில் நிலையங்களின் ஓய்வு அறைகளை நட்சத்திர விடுதிகளாக மாற்ற ஐஆர்சிடிசி முடிவு

நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 600 ரயில் நிலையங்களில் உள்ள ஓய்வு அறைகளை 2 நட்சத்திர சொகுசு விடுதிகளாக மாற்ற ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது.

ரயிலில் பயணிகளுக்கு உணவு தயாரித்து வழங்குவதில் குறைபாடுகள் நிலவியதால் உணவு தயாரிப்பு மற்றும் விநியோகிக்கும் பணிகள் ஐஆர்சிடிசியிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டன. ரயில் நிலையங்களில் இருக்கும் ஓய்வு அறைகள் சில இடங்களில் போதிய அளவில் பராமரிப்பு இல்லாமல் உள்ளன. வெளி இடங்களில் இருக்கும் தனியார் விடுதிகளிலும் போதிய அளவில் பாதுகாப்பு வசதிகள் இல்லை என பயணிகள் தெரிவித்து வருகின்றனர். ரயில்கள் இயக்கம், பராமரிப்பு போன்ற பணியோடு ஓய்வு அறைகளை நிர்வகிப்பது கூடுதல் பணியாக இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே, ரயில்வே வாரியத்திடம் இருந்த ஓய்வு அறைகள்ஐஆர்சிடிசியிடம் ஒப்படைக்கப்பட்டன. இதற்கான உத்தரவு கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள தேர்வு செய்யப்பட்ட முக்கியமான ரயில் நிலையங்களில் உள்ள ஓய்வு அறைகளை புதுப்பிக்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:ரயில் பயணிகள், சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான வசதிகளை மேற்படுத்தித் தர ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை ஐஆர்சிடிசி படிப்படியாக மேற்கொண்டு வருகிறது. தற்போது, ரயில்வேயிடம் இருந்த 600 ரயில் நிலையங்களில் இருக்கும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வு அறைகள்எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, 32 ரயில் நிலையங்களில் ஓய்வு அறைகளை ஐஆர்சிடிசி நிர்வகித்து வருவது பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

2 நட்சத்திர விடுதி

இதையடுத்து, முக்கியமான ரயில் நிலையங்கள், சுற்றுலா மையங்கள் அருகே உள்ள ரயில் நிலையங்களில் உள்ள ஓய்வுஅறைகளை 2 நட்சத்திர அந்தஸ்து பெற்ற சொகுசு விடுதிகளாக படிப்படியாக தரம் உயர்த்த உள்ளோம். இதில் ஏசி அறைகள், 3 வேளை உணவு, டீ, காபி, வை-பை, எல்இடி தொலைக்காட்சி, குளிர்பானங்கள், லாண்டரி சேவை,மருத்துவ உதவி உட்பட பல்வேறுவசதிகள் இடம் பெறும். மக்களின்வசதிக்கு ஏற்றவாறு 3, 6, 12, 24 மணி நேரம் என்ற அடிப்படையில் வாடகைக்கு விடப்படும். நியாயமான கட்டண வசூல் இருக்கும்.

ஓய்வு அறைகள் குறித்த முழு தகவல்கள், முன்பதிவுகளை ஐஆர்சிடிசி இணையதளத்தில் பெறலாம். பெங்களூரூ, ஹைதராபாத், சூரத், மைசூர், கொல்கத்தா, சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் போன்ற ரயில் நிலையங்களில் இந்த வசதிகள் செய்துதர வாய்ப்புள்ளது. சுற்றுலா மையங்கள் அருகே உள்ள ரயில் நிலையங்களில் ஓய்வு அறைகளை சொகுசு விடுதிகளாக மாற்றுவதன் மூலம் உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இதன்மூலம் மக்கள் பயன்பெறுவதோடு, ரயில்வேக்கு வருவாயும் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x