Published : 10 May 2019 08:33 AM
Last Updated : 10 May 2019 08:33 AM
சமுதாயத்தில் பெண்களுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வு சுடர்விடும் காலம் இது. இருந்தும், கேலி, கிண்டல், திருட்டில் தொடங்கி, பாலியல் தொல்லை வரை எப்போது வேண்டுமானாலும் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள ஒரு பெண் தயாராகவே இருக்க வேண்டும் என்ற நிலையில், அவர்கள் தற்காப்பு கலையைக் கற்றுக் கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகியுள்ளது. அந்த வகையில், ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்பதை நிலைநாட்டும் புதுமைப் பெண்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளார் தற்காப்பு கலைகளின் ராணியாகத் திகழும் ஈரோடு ஹர்சினி.
சிலம்பாட்டம், வாள்வீச்சு, சுருள் கத்தி, கோலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என சுமார் ‘ஒரு டஜன்’ கலைகளில் தேர்ச்சி பெற்றதுடன், அவற்றை மற்றவர்களுக்கு கற்பிக்கும் பயிற்சியாளராகவும் மாறியுள்ளார் 15 வயதான ஹர்சினி. சாதாரண சிறுமியாய் இருந்த ஹர்சினி ‘சகலகலாவல்லி’யாக மாறியதை விளக்கினார் அவரது தந்தை கதிர்வேல்.
“ஈரோடு கருங்கல்பாளையம் கலைத்தாய் அறக்கட்டளை அலுவலகத்துக்கு ஒருமுறை சென்றேன். அங்கு, குழந்தைகளுக்கு சிலம்பம், கரகம், ஒயிலாட்டம், தப்பாட்டம் என பல்வேறு பயிற்சிகள் கற்றுத்தருவதைக் கண்டேன். மூன்றாவது படிக்கும்போது சிலம்பம் கற்றுக்கொள்ள ஹர்சினியை அங்கு சேர்த்துவிட்டேன். மேலும், ஈரோடு அரசு இசைப் பள்ளியில், ஜவஹர் சிறுவர் மன்ற முகாம் மூலம் பரதநாட்டியக் கலையும் கற்கத் தொடங்கினார்.
கலைத்தாய் அறக்கட்டளையில் பழந்தமிழ் கலைகளும், இசைப்பள்ளி வகுப்பில் பரதமும் கற்றதுடன், தனது பள்ளிப் படிப்பை கார்மல் மெட்ரிக் பள்ளியில் ஹர்சினி தொடர்ந்து வந்தார்” என்றார் கதிர்வேல்.
பழைய பேப்பர் மற்றும் பொருட்களை வீடு வீடாகச் சென்று வாங்கி, அதை விற்று கிடைக்கும் குறைந்த வருவாயில்தான் கதிர்வேலின் குடும்பம் இயங்குகிறது. இந்த சோதனைகளுக்கு இடையேயும், தன் மகளை சாதனைப் பெண்ணாக மாற்ற வேண்டும் என்பதில் கதிர்வேல் குடும்பத்தினர் உறுதியாக இருந்துள்ளனர். இதன்பலனாக, பரதத்திலும், சிலம்பத்திலும் பல்வேறு சாதனைகளைப் படைக்கத் தொடங்கியுள்ளார் ஹர்சினி.
மாவட்ட, மாநில அளவில் பல்வேறு பரிசுகளைப் பெற்ற ஹர்சினிக்கு, கலை இளமணி பட்டத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. ஜவஹர் கலைமன்ற வகுப்புகளில் மாணவியாக இருந்த ஹர்சினி, தற்போது அதே மன்றத்தின் பயிற்சி வகுப்புகளில் சிலம்பப் பயிற்சியாளராகவும் மாறியுள்ளார்.
ஹர்சினியின் திறமையை ஊக்குவிக்கும் வகையில், கலைத்தாய் அறக்கட்டளை இலவச பயிற்சியை வழங்கியுள்ளது. அவர் படிக்கும் கார்மல் மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர், கட்டணச் சலுகையும் அளித்து உதவியுள்ளனர். பத்தாம் வகுப்பில் 417 மதிப்பெண் பெற்ற ஹர்சினி தற்போது அதே பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
சிலம்பத்தில் தொடங்கி பரதம், சுருள்கத்தி என பல்வேறு கலைகளைக் கற்றுத் தேர்ந்த ‘சகலகலாவல்லி’ ஹர்சினியை சந்தித்தோம். “சிறு குழந்தையாய் இருக்கும்போதே பரதம் கற்கத் தொடங்கிவிட்டேன். அதன்பின், நீச்சல், ஸ்கேட்டிங் என பல பயிற்சிகளில் அப்பா என்னை சேர்த்தார். ஆனால், அவற்றில் எனக்கு ஆர்வம் வரவில்லை. சிலம்பப் பயிற்சியில் சேர்த்தபோது, அது எனக்கு மிகவும் பிடித்துப் போனது.
பரதத்துக்கும், சிலம்பாட்டத்துக்கும் ஏதோ ஒரு தொடர்புஇருப்பதை நான்உணர்ந்தேன். சிலம்பத்தில் இருந்துதான் இதர கலைகள் பிறந்து இருக்க வேண்டும். சிலம்பாட்டம் என்பது வெறும் தடியைக் கொண்டு ஆடும் ஆட்டம் மட்டுமல்ல. சிலம்பத்தில், போர் சிலம்பம், அலங்காரச் சிலம்பம் என பிரிக்கலாம். போர் சிலம்பம் என்றால் சுருள்கத்தி, வாள் வீச்சு, சிலம்பம் சுற்றுதல் போன்றவை அடங்கும். அலங்காரச் சிலம்பத்தில் சாட்டைக்குச்சி ஆட்டம், கோலாட்டத்தில் தொடங்கி, கரகம், ஓயிலாட்டம், தப்பாட்டம் வரை ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாகவே நான் பார்க்கிறேன்.
நமது பாரம்பரிய கலைகளின் மதிப்பு நமக்குத் தெரியவில்லை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியான கராத்தே, குங்பூ போன்ற தற்காப்புக் கலைகளை அதிக பணம் கொடுத்து, ஆர்வத்துடன் கற்கின்றனர். ஆனால், சிலம்பத்தை ஏளனமாகப் பார்க்கின்றனர்.
எல்லா தற்காப்புக் கலைக்கும் அடிப்படையானது சிலம்பம். சிலம்பம் பயிற்சி எடுக்கும்போது, மனதளவில் வலிமை அடைய முடியும்.
சிலம்பம் முழுமையாகக் கற்க 6 மாதம் முதல் இரண்டரை ஆண்டுகள் வரை பயிற்சி எடுக்க வேண்டும். பயிற்சியிலும், கற்றுக் கொள்வதிலும் காட்டும் அக்கறையே காலஅளவைத் தீர்மானிக்கிறது. பெண்கள் சிலம்பம் கற்றுக்கொண்டால், உடல் ரீதியாக வலிமையடைய முடியும். திருமணமாகி இருந்தாலும், சிலம்பப் பயிற்சி எடுக்கலாம். சிலம்பப் பயிற்சி மேற்கொண்டால், பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் பிரச்சினைகள் தானாகவே தீரும்” என்று சிலம்பத்தின் பெருமைகளைச் சென்னார் ஹர்சினி.
“தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மற்ற விளையாட்டுகளைப்போல சிலம்பத்தையும் அங்கீகரிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் கராத்தே, குங்ஃபூ வகுப்புகள் எடுப்பதுபோல, சிலம்ப வகுப்பையும் கட்டாயமாக சேர்க்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு பள்ளி அளவிலேயே தற்காப்புக் கலையான சிலம்பத்தைக் கற்றுக் கொடுத்தால், அவர்கள் மன வலி மையும், உடல் வலிமையும் அடைவார்கள்” என்கின்றனர் சிலம்பாட்டத்தில் தேர்ச்சி பெற்ற வல்லுநர்கள்.
மற்ற நாடுகளில் விளையாடப்படும் சிறிய விளையாட்டுகள் எல்லாம் ஒலிம்பிக் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், சிலம்பாட்டத்தை ஒலிம்பிக் போட்டியில் மத்திய, மாநில அரசுகள் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தும் ஹர்சினி, இப்போது முயற்சித்தால்தான் அடுத்த தலைமுறையாவது தமிழர்களின் பாரம்பரியக் கலையான சிலம்பாட்டத்தை சர்வதேச அளவில் ஆடி, உலக அரங்கில் நாட்டை தலைநிமிரச் செய்வார்கள் என்று உறுதிபடத் தெரிவிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT